சரபோஜிகள் காலத்தில் ‘காவிரிக்கு கல்யாணம்’; இப்போது ‘ஆடிப்பெருக்கு!’; 9-ம் எண்ணின் மகத்துவம்!

காவிரியில் ஆடிப்பெருக்கு
காவிரியில் ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு, ஆடிப்பதினெட்டு என்றெல்லாம் இன்றைக்குக் கொண்டாடி வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். சரபோஜிகள் காலத்தில், இதை வேறொரு பெயர் வைத்து ஆராதனை செய்திருக்கிறார்கள். மராட்டியர்கள் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த காலத்தில், ஷாஜி ராஜா எனும் மன்னர், ஆடிப்பெருக்கு வைபவத்தை ‘காவிரி கல்யாணம்’ என்று கொண்டாடி மகிழ்ந்தார் என்றும் அதையொட்டி மக்களும் அதை அப்படியே பின்பற்றி கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.

’’காவிரி நதிப் பெண்ணானவள், சமுத்திரராஜனுடன் கலப்பதற்கு அந்த தேசத்திலிருந்து இந்த தேசத்துக்கு, அதாவது நம்மூருக்கு ஓடி வருவதால், காவிரி கல்யாணம் என்றார்கள். கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண்ணை, பனையோலையால் செய்யப்பட்ட காதோலை (பத்ரகுண்டலம்), கருகமணி, வளையல்கள் அனைத்தையும், இலையைத் தட்டாக்கி வைத்து, காவிரியில் அப்படியே விட்டு வணங்குவார்கள். இதை குடும்பம் குடும்பமாக வந்து வழிபடுவார்கள். பழங்கள், ஊறவைத்த அரிசியில் வெல்லம் என காவிரித் தாய்க்குப் படைத்து, அனைவருக்கும் விநியோகிப்பார்கள். கரையில் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள், அவர்களது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, சிறு தேர்களைச் செய்து, கரைப் பகுதியில் ஓட்டி விளையாடுவார்கள். இதை ‘சிறுதேர் ஓட்டுதல்’ என்கிறது வரலாறு’’ என்று விளக்குகிறார் தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு

ஈரோடு அருகேயுள்ள பவானி கூடுதுறையில் களை கட்டத் துவங்குகிற இந்த ஆடிப்பெருக்கு விழா, காவிரிக் கரையின் இருபக்கங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். காவிரியில் இருந்து கிளை பிரிந்து ஓடுகிற ஆற்றிலும் ஆடிப்பெருக்கு விழா அமர்க்களப்படும். இந்த விழாவை ‘புதுப்புனல் நீராடுதல்’ எனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதேபோல, இந்த விழாவைக் கொண்டாட திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் மண்டபங்களைக் கட்டி வைத்தார்கள் மன்னர்கள். அந்த மண்டபத்தில், பக்கத்தில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, அன்றைய நாளில் அங்கே எழுந்தருள்வார்கள். அந்த மண்டபங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

‘’வருடா வருடம் ஆடிப்பெருக்கு நாளில், புதுமணத் தம்பதியரின் கூட்டம் காவிரிக் கரையில் நிரம்பி வழியும். அதையொட்டி, அந்த நாளில் கரையோரத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் முளைத்திருக்கும். உற்றார் உறவினர்களுடன் வந்திருக்கும் புதுமணத் தம்பதி, அப்போது தாலி பிரித்து அணிந்து கொள்வார்கள். வீட்டில் இருந்தே தயிர் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் என எடுத்து வந்து, காவிரித்தாய்க்குப் படைப்பார்கள். சிலர், அகல்விளக்கில் தீபமேற்றி காவிரியில் விடுவார்கள். ஆடிப்பெருக்கு நாளில் வழிபட்டால், காவிரியைப் போலவே இல்லறம் சந்தோஷமாகும், சந்ததி பெருகும் என்பது ஐதீகம்‘’ என்கிறார் அம்மா மண்டபத்துக்கு அருகில் உள்ள விஸ்வநாத சாஸ்திரிகள்

ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு

‘’ஆடி மாதம் சக்தியோட மாதம். சக்தி மிகுந்த மாதம். 18 என்பதைக் கூட்டினால் 9. இதைப் பெருக்கிக்கொண்டே போனால், 9 என்பது மாறாது. தவிர, 18 எனும் எண்ணுக்கு இன்னும் வலிமை உண்டு. இதனால்தான் ‘நவமம் பாக்யம் உச்யதே’ என்று ஒன்பதைப் பெருமையுடன் சொல்கிறது சாஸ்திரம். அதுவும் தவிர சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும் ஒரே வீட்டில் இருப்பதும் இந்த ஆடி மாதத்தில்தான்! எனவே, இந்த உலகில் எங்கிருந்தாலும் சரி... ஆடிப்பெருக்கு நாளில், ‘ஓம் காவேர்யை நம’ என்று சொல்லி நீராடினால், காவிரி எனும் புண்ணிய நதியில் நீராடிய பலன் நம் எல்லோருக்கும் கிடைக்கும். காவிரி எனும் புண்ணிய நதி, நமக்கான நற்பலன்களை வழங்கும்‘’ என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in