ஐப்பசி செவ்வாயில் அம்பிகை தரிசனம்!

ஐப்பசி செவ்வாயில் அம்பிகை தரிசனம்!

ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமையில் அம்பிகையைத் தரிசித்து வழிபடுவோம். அருளும்பொருளும் அள்ளித்தருவாள் தேவி.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது அம்பாளுக்கு உகந்தநாள். அம்பிகையை தரிசித்து வணங்குவதற்கு உரிய நாள். பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியநாளாக செவ்வாய்க்கிழமையையும் வெள்ளிக்கிழமையையும் சொல்வார்கள்.

சாந்தசொரூபியாகத் திகழும் பெண் தெய்வங்களை செவ்வாய்க்கிழமைகளில் எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். எண்ணற்ற பலன்களைத் தந்தருளும். அதேபோல் உக்கிரமான பெண் தெய்வங்களை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகால வேளையில் வணங்கச் சொல்கின்றன ஆகம நூல்கள். அதனால்தான் துர்கை முதலான பெண் தெய்வங்களை ராகுகாலவேளையில் வணங்கினால், நம் வாழ்வில் நமக்கு இருக்கிற தடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து அருளுவாள் துர்கை.

ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமையில், தவறாமல் அம்பிகையைத் தரிசிப்பது, வீட்டில் அம்மனுக்கு ஏதேனும் நைவேத்தியம் செய்து, ஸ்லோகம் சொல்லி வேண்டிக்கொள்வதும் நற்பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஐப்பசி என்பது அறுவடைக்காலம். இப்போது அறுவடை முடிந்து, குறுவை சாகுபடி செய்யும் காலம். இந்த குறுவை சாகுபடியை தை மாதத்தில் அறுவடை செய்வார்கள். அதனால்தான் ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தின்போது படியளக்கும் சிவனாருக்கு அன்னாபிஷேகம் செய்தார்கள் என நூல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அம்பாளுக்கு மாவிளக்கேற்றுவார்கள் என்பது ஐதீகம்.

அன்னாபிஷேகத்தின் மறுநாளான இன்று அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம். மாவிளக்கேற்றி வணங்குவது இன்னும் பல நன்மைகளை அள்ளிக்கொடுக்கும். வீட்டில், நெய் விளக்கேற்றி, அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்வது வீட்டில் உள்ள ஒற்றுமையை மேம்படுத்தும். அமைதியையும் ஆனந்தத்தையும் வழங்கியருளும்!

மேலும் நவம்பர் 8-ம் தேதி மாலையில் சந்திர கிரகணம் வருவதால், கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு அருகில் இருக்கிற அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும் நவக்கிரகத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்வதும் மனதில் அமைதியையும் குழப்பமற்ற மனதை தெளியப்படுத்தியும் அம்பிகை அருள்பாலிப்பாள் என்கின்றனர் ஆச்சார்யர்கள்!

அத்துடன் கிரகணத்தையொட்டி கோயில்களில் நடை அடைக்கப்பட்டிக்கும். ராகுகால வேளையில் துர்கைக்கு விளக்கேற்ற இயலாது. எலுமிச்சை தீபமேற்றி வழிபட இயலாது. எனவே, காலையிலேயே துர்கையை வணங்கிவழிபடலாம். கிரகணம் முடிந்ததும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்கி பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in