ஐப்பசி மாத விசேஷங்கள்!

ஐப்பசி மாத விசேஷங்கள்!

ஐப்பசி மாதம் மிகுந்த வழிபாடுகளுக்கும் பூஜைகளுக்கும் உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள்.

ஐப்பசி மாதத்தில் உள்ள முக்கியமான விசேஷங்களைப் பார்ப்போம். வருகிற அக்டோபர் 21-ம் தேதி ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்து வருகிறது. ‘தன திரயோதசி’ என்று ஐப்பசி திரயோதசியில் சிவ வழிபாடு செய்வது மேலும் சிறப்புக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது.

24-ம் தேதி திங்கட்கிழமை, தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும், கேதார கெளரி விரதம் மேற்கொள்ளும் நாளாகவும் விரதம் மேற்கொள்வது வழக்கம். அத்துடன் தீபாவளித் திருநாளில் நரக சதுர்த்தசியும் அனுஷ்டிக்கப்படுகிறது.

25-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஐப்பசி அமாவாசை தினம். 26-ம் தேதி சந்திர தரிசனம் செய்ய உகந்தநாள். இதனால் சந்திர பலம் பெருகும் என்பது ஐதீகம். 28-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையை, சஷ்டி விரதம் மேற்கொள்வார்கள். முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள். முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில், சிறப்பு பூஜைகளும் விழாக்களும் அமர்க்களப்படும். ஞாயிற்றுக்கிழமை வருகிற சஷ்டி, சூரிய சஷ்டி என்றே அழைக்கப்படுகிறது. நம் கிரக தோஷங்களைப் போக்கும் உன்னதமான நன்னாள் இது.

அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமையில் ஐப்பசி சோம வார விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். நவம்பர் 1-ம் தேதி திருவோண விரதம் மேற்கொள்வார்கள் வைஷ்ணவ அன்பர்களும் பெருமாள் பக்தர்களும். 2-ம் தேதி புதன்கிழமை அட்சய நவமி என்பார்கள். 4-ம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி விரதம் மேற்கொள்வார்கள் மகாவிஷ்ணு பக்தர்கள். இந்தநாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் தரிசனம் செய்வது சிறப்புக்குரியது. 5-ம் தேதி சனிப்பிரதோஷம். மேலும், துளசி கல்யாணமும் அன்று கொண்டாடப்படுகிறது. 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஸ்வேஸ்வர விரதம் மேற்கொள்கிற சிவனடியார்கள் இருக்கிறார்கள்.

நவம்பர் 7-ம் தேதி திங்கட்கிழமையன்று ஐப்பசி பெளர்ணமி. சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். 8-ம் தேதி பெளர்ணமி இருப்பதால் விரதம் மேற்கொள்ளலாம். உமா மகேஸ்வர விரதம் மேற்கொள்வதற்கு உகந்தநாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

9-ம் தேதி புதன்கிழமை கார்த்திகை விரதம். முருகக் கடவுளுக்கு உகந்த நாள். 12-ம் தேதி சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி. ஐப்பசி சங்கடஹர சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படும். 16-ம் தேதி புதன்கிழமை அஷ்டமி. வழக்கமான அஷ்டமி, பைரவ வழிபாடு என்றில்லாமல், இதை காலபைரவாஷ்டமி என்று வணங்குவது வழக்கம். அதாவது, அஷ்டமி பைரவ வழிபாடுகளில் ஐப்பசி பைரவாஷ்டமி விசேஷமானது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஐப்பசி மாதம் பொதுவாகவே மழைக்காலத்துக்கான ஆரம்ப மாதம். ஐப்பசி அடைமழை என்றே சொல்லியிருக்கிறார்கள். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகளால், நீர்நிலைகள் நிரம்பும். தனம் தானியங்கள் பெருகும். இல்லத்திலும் பூமியிலும் செழிப்பும் வளமையும் கூடும் என்பது ஐதீகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in