
ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் சனிக்கிழமை பிரதோஷம் மிகவும் மகத்துவம் மிக்கது. இந்தநாளில், சிவன் கோயிலுக்குச் சென்றாலே புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கின்றன. அதேபோல் வளர்பிறையில் வரும் பிரதோஷம், தேய்பிறையில் வரும் பிரதோஷங்களுக்கு உரிய பலன்கள் இருக்கின்றன.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் விசேஷமானது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை வருகிற பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. முக்கியமாக, சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், மகத்துவம் வாய்ந்தது என்பார்கள்.
அதிலும் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள். துலா மாதத்தின் தேய்பிறையில் வருகிற பிரதோஷமே சிறப்பானதுதான். அப்படியிருக்க, அந்தப் பிரதோஷம் சனிக்கிழமை வருகிற பிரதோஷமாக இருந்தால் மும்மடங்கு பலன்களைப் பெறலாம் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
22ம் தேதி திரயோதசி திதி. இதையே பிரதோஷம் என்கிறோம். சனிக்கிழமை பிரதோஷம். துலா மாத தேய்பிறை சனிக்கிழமை பிரதோஷத்தின் போது மறக்காமல், சிவன் கோயிலுக்கு மாலை வேளையில் செல்வோம். பிரதோஷ வேளையில், சிவாலயத்துக்குள் இருந்தாலே புண்ணியம் என்பது ஐதீகம்.
சனிப்பிரதோஷம் சர்வ பாபவிமோசனம் என்றொரு வாக்கியம் உண்டு. ஆகவே சனிக்கிழமை பிரதோஷத்தில், சிவாலயம் சென்று, சிவலிங்கத் திருமேனிக்கு நிகழ்கிற அபிஷேக ஆராதனைகளையும் நந்திதேவருக்கு நடக்கிற அபிஷேக ஆராதனைகளையும் கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்திப்போம்.
முக்கியமாக இந்த திருநீற்றுப் பதிகம் பாடினால், தீராத நோயெல்லாம் தீரும். தேக ஆரோக்கியம் கூடும். மனோபலம் பெருகும் என்கிறார்கள் சிவனடியார்கள்.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே
***********
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
************
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
****************
காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே
***************
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே
************
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
***********
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
***********
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே
************
மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே
***********
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே
***********
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
நமசிவாய... நமசிவாய... நமசிவாய...
திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்
- என்று சொல்லி, சனிப்பிரதோஷ நாளில், ஐப்பசி தேய்பிறை திரயோதசி திதியில், ஆத்மார்த்தமாக சிவனாரை வழிபடுவோம். வளமும் நலமும் பெற்று இனிதே வாழச் செய்வார் ஈசன்!