ஆவணி ஞாயிறில் கிரக தோஷம் போக்கும் சூரிய நமஸ்காரம்!

ஆவணி ஞாயிறில் கிரக தோஷம் போக்கும் சூரிய நமஸ்காரம்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள். ஆவணி மாதம் முழுவதுமே சூரிய பலம் நிறைந்த மாதம் என்று பஞ்சாங்கம் கணித்துச் சொல்கிறது. அதிலும் ஆவணி மாதத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரிய பகவானுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கெல்லாம் ஆத்ம பலத்தையும் ஞான பலத்தையும் தந்தருளுபவர் சூரிய பகவான்.

உலகுக்கே ஒளி கொடுக்கும் கடவுளாகத் திகழ்கிறார் சூரிய பகவான். ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானை வழிபடவேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவேண்டும். விரதமிருந்து மாலையில் சூரியன் மறையும் போது விரதத்தை நிறைவு செய்து வேண்டிக்கொள்வது இன்னும் மகத்தான பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சூரியன் உதிப்பதற்கு முன்னதாகவே எழுந்து, குளித்து, நெற்றியில் திருச்சின்னங்களை இட்டுக்கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம். சூர்யோதயத்தின் போது, சூரியனைப் பார்த்து, இருகைகளையும் சிரத்துக்கு மேல் குவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்து, ஒன்பது முறை நமஸ்கரித்து வணங்கவேண்டும்.

இப்படியாக, ஒவ்வொரு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையும் வழிபடுவது சிறப்பு. ஆவணி மாதமென்று இல்லாமல் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் சூரியனை வணங்கி நமஸ்கரித்து வழிபடலாம்.

தொடர்ந்து சூரிய பகவானை வழிபட்டு வந்தால், தோலில் ஏற்படும் நோய்கள் நீங்கப் பெறும். கண் நோய் முதலான பிரச்சினைகள் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சூரிய பலம் கிடைக்கப் பெறலாம். முக்கியமாக, சனி கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

ஞாயிற்றுக்கிழமையில், சூரிய ஹோரையான காலை 6 முதல் 7 மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்து, ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் நற்பலன்களையெல்லாம் வாரி வழங்கும் என்பது ஐதீகம். அதனால்தான் நம் முன்னோர்கள், ஞாயிற்றுக்கிழமை என்றில்லாமல், எல்லாக் கிழமைகளிலும் சூரிய வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in