ஆவணி அமாவாசையும் விசேஷம்!

முன்னோரை மறக்காமல் வணங்குவோம்!
ஆவணி அமாவாசையும் விசேஷம்!

புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசையும் மிகவும் விசேஷமானது. இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

முன்னோர்களை ஆராதனை செய்வதற்கு ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருக்கின்றன என்று ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை, மாதாமாதம் பிறக்கிற தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், மகாளய பட்ச பதினைந்து நாட்கள், இறந்த முன்னோர்களின் திதி முதலான 96 தர்ப்பணங்கள் இருக்கின்றன என்றும், 96 முறை முன்னோர்களை வணங்கி வழிபட வேண்டும் என்றும் ஞானநூல்கள் விவரிக்கின்றன.

எல்லா அமாவாசைகளும் முன்னோர்களுக்கான நாள்தான். அதிலும் முக்கியமான அமாவாசை என்று மூன்று அமாவாசையைச் சொல்லுவார்கள். தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இதேபோல், புரட்டாசி மகாளயபட்ச காலத்துக்கு முந்தையதாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மகாளய பட்சம் என்பது பதினைந்து நாட்கள். ஆவணி அமாவாசைக்குப் பிறகு பெளர்ணமி வரும். அதையடுத்து வரக்கூடிய பதினைந்து மகாளய பட்ச காலம். அந்த நாட்கள் முழுவதுமே பித்ருக்கள் பூலோகத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே, அதற்கு முந்தைய ஆவணி அமாவாசையில் அவர்களை ஆராதித்து வழிபடுவது அவர்களைக் குளிர்விக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இன்று (ஆகஸ்ட் 26) வெள்ளிக்கிழமை அமாவாசை. ஆவணி மாதத்தின் அமாவாசை. இந்த நாளில் முன்னோர்களை அவரவர் முறைப்படி வணங்கி வழிபடலாம். அல்லது தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பண முறைகளில், தில தர்ப்பணத்துக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘தில’ என்றால் எள்ளு என்று அர்த்தம். எள்ளும் தண்ணீரும் கொண்டு செய்யப்படுகிற தர்ப்பணமானது, நம் முன்னோர்களுக்கு உணவாகவும் அவர்களின் தாகம் தணிக்கவும் செய்யப்படுகிறது.

அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து, மூன்று பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவது நம் பாவங்களைப் போக்கும்; பித்ரு ஆசியை நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் வழங்கும்; பித்ரு சாபத்திலிருந்து விடுபடலாம் என்கிறது சாஸ்திரம். ஆவணி அமாவாசையில் நம் முன்னோர்களை வழிபடுவோம். அவர்களின் ஆசியைப் பெற்று, சந்ததி சிறக்க வாழ்வோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in