ஆண்டாளின் ஆடிப்பூரம்; திருப்பாவை பாடினால் திருப்பம் நிச்சயம்!

ஆண்டாளின் ஆடிப்பூரம்; திருப்பாவை பாடினால் திருப்பம் நிச்சயம்!

ஆடிப்பூர நன்னாளில், ஆண்டாளை வேண்டுவோம். திருப்பாவை பாடி ஆண்டாளைப் பிரார்த்தனை செய்தால், வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி மாதம், அம்பிகைக்கு உகந்த மாதம். சகல பெண் தெய்வங்களுக்கும் உரிய அற்புத மாதம். ஆடி மாதத்தின் எல்லா நாட்களும் சிறப்புக்கு உரிய நாட்கள்தான். தரிசனத்துக்கு உகந்த நாட்கள்தான்.

இதேபோல், மிக மிக முக்கியமான நாள்... ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வருகிற பூர நட்சத்திர நாள். ஆடி மாதத்தின் பூர நட்சத்திர நாளில்தான் ஆண்டாள் அவதரித்தாள் என்கிறது புராணம். ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் திருத்தலத்தில், நந்தவனத்தில், பெரியாழ்வாரின் மகளாகத் தோன்றினாள் ஆண்டாள். பின்னர் பெரியாழ்வார், மகளை ஆண்டாள் என்று அன்புடன் அழைத்து வளர்த்தார்.

குறிப்பிட்ட வயதை அடைந்ததும், அந்த ரங்கமன்னாரையே தன் கணவனாக பாவித்தாள் ஆண்டாள். “உன்னைத் தவிர வேறு எவரையும் மணம் முடிக்கமாட்டேன்” என்று உறுதிகொண்டாள். சுவாமிக்கு அணிவித்த மாலையை நாம் பின்னர் அணிந்துகொள்ளலாம். ஆனால், பகவானுக்காக பறித்துத் தொடுத்து கட்டிய மாலையை, முன்னதாக தான் சூடிக்கொண்டாள். பிறகு அந்த மாலையை ரங்கமன்னாருக்கு அணிவிக்கச் செய்தாள். ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’என்கிற பெயரும் பெற்றாள்.

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நன்னாள், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் இன்னும் கோலாகலமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி, அனைத்து வைணவ திருத்தலங்களிலும் ஆண்டாளுக்கு ஆடிப்பூர விழா அமர்க்களமாக நடைபெறும்.

ஆடிப்பூர நன்னாளை வீட்டிலிருந்தும் கொண்டாடலாம். இந்த நாளில், வீட்டுப் பூஜையறைச் சுத்தம் செய்து, குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அமர்ந்து ஆண்டாளை வழிபடலாம். ஆண்டாள் அவதரித்த அற்புதமான நாளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஆண்டாள் சந்நிதிக்குச் சென்றும் வழிபடலாம்.

ஆடி மாதம் என்பதே பெண்கள் வணங்கி வழிபடுவதற்கு உரிய மாதம். இதில், ஆடிப்பூர வைபவம், திருமணமாகாத பெண்கள் அவசியம் வழிபடக் கூடிய திருநாள். கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், நல்ல வரன் அமையாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதே என்று வருந்துபவர்கள், ஆடிப்பூர நன்னாளில், ஆண்டாளை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி ஆராதனை செய்யுங்கள். பாயசம் நைவேத்தியம் செய்து, உங்கள் பிரார்த்தனையை ஆண்டாளிடம் சொல்லி வேண்டுங்கள். விரைவில் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். மாங்கல்ய வரமும் தருவாள்; மாங்கல்ய பலமும் தந்தருள்வாள் ஆண்டாள்.

திருமணமான பெண்கள், திருமணம் நடந்திடாத பெண்கள் என அனைவரும் சேர்ந்து ஆடிப்பூர பூஜையைச் செய்யுங்கள். எல்லாத் தடைகளும் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் அமையப் பெறலாம்.

சுக்கிர ஆதிக்கம் நிறைந்த திருத்தலம் ஸ்ரீரங்கம். இந்தத் தலத்தில்தான் தன் மனதுக்குப் பிடித்த ரங்கனை கரம்பற்றினாள் ஆண்டாள். ஒருமுறையேனும் ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரையும் ஆண்டாளையும் தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும்.

நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி திங்கட்கிழமை ஆடிப்பூரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in