ஆடிப்பூரம்; அம்மனுக்கு வளையல் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும்!

ஆடிப்பூரம்; அம்மனுக்கு வளையல் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும்!

ஆடி மாதம் என்பது அம்பாளைக் கொண்டாடும் மாதம். அம்பிகையை மனமுருக வணங்கி வழிபடுகிற மாதம். பூவுலகைக் காப்பதற்காகவும் பெண்களின் கஷ்டநஷ்டங்களைப் போக்குவதற்காகவும் சக்திதேவியானவள், தன் சக்தியை பூமியில் வியாபித்து அருளாட்சி செய்யும் மாதம் இது எனப் போற்றுகிறது தேவி மகாத்மியம்.

சக்தி என்றும் மகாசக்தி என்றும் பராசக்தி என்றும் அம்பாளைக் கொண்டாடுகிறோம். இந்த மாதத்தில் சாக்த வழிபாடு எனப்படும் சக்திவழிபாட்டைச் செய்பவர்கள், தேவி மகாத்மியம் பாராயணம் செய்வதும் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் முதலானவற்றைப் படித்து பிரார்த்திப்பதும் மும்மடங்கு பலன்களைத் தந்தருளும்.

ஆடி மாதம் முழுக்கவே விசேஷம் தான். ஆடி செவ்வாயும் வெள்ளியும் சிறப்பு வாய்ந்த நாட்களே. இதில் ஆடிப்பூர நன்னாள் என்பது மிகுந்த பலன்களை அளிக்கக்கூடிய நன்னாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அம்மனுக்கும் சிவாலயங்களில் குடிகொண்டிருக்கும் அம்பாளுக்கும் வளையலிட்டு அழகு பார்க்கும் வைபவம் ஆடிப்பூர நன்னாளில் நடைபெறுகிறது. இந்தநாளில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசிப்பது, தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்யும். மாங்கல்ய வரத்தைத் தந்தருளும்.

கோயிலுக்குச் செல்வது மட்டுமின்றி, அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்றாகக் கூடி, வீட்டிலேயே ஆடிப்பூர வழிபாட்டைச் செய்யலாம். வீட்டில் அம்பாள் படங்கள் இருந்தால், விக்கிரகம் இருந்தால், பூஜையறையைச் சுத்தம் செய்து, விக்கிரகத்துக்கு நீராலும் பாலாலும் அபிஷேகம் செய்வது மகத்துவம் மிக்கது. விக்கிரகம் இல்லையெனினும் அம்மன் படமிருந்தாலே போது. ஒரு மணைப் பலகையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துவிட்டு, அதில் கோலமிடுவோம். கோலத்தின் மீது அம்பாள் விக்கிரத்தை அல்லது படத்தை வைத்துக்கொண்டு, அம்பாளுக்கு சந்தனம் குங்குமமிட்டுக் கொள்ளவேண்டும். அம்பாளை வளையலை மாலையாகக் கொண்டு அழகுப்படுத்தலாம். பின்னர் பூஜைக்குப் பிறகு, வந்திருக்கும் பெண்களுக்கும் சிறுமியருக்கும் வளையல்களை வழங்கலாம்.

ஆடிப்பூரத்தில், அனைத்து சிவாலயங்களிலும் வளைகாப்பு திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆலயத்துக்குச் சென்று, நம்மால் முடிந்த அளவுக்கு வளையல் சார்த்துவோம். முடிந்தால், வளையலை மாலையாகவே கோத்து அம்மனுக்கு அணிவிக்கலாம்.

பொதுவாகவே, அம்பாளுக்கு சிவப்பு நிற மலர்கள் உகந்தவை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே அரளிப்பூ, செவ்வரளி, ரோஜாப்பூக்கள், தாமரை மலர்கள் என வழங்கி ஆராதிப்பது சிறப்பு.

அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். அம்பாள் துதியைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் என இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து பிரார்த்தனை செய்து வணங்கினால், வீட்டில் சுபிட்சம் நிலவும்; ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். தடைப்பட்ட கன்னியருக்கு விரைவிலேயே கல்யாண வரம் தந்திடுவாள் அம்பாள். வீட்டில் தரித்திர நிலையை மாற்றி, சுபிட்சத்தைத் தந்திடுவாள். கர்ப்பிணிகளுக்கு பிரசாத வளையல் வழங்கினால், சுகப்பிரசவம் நிகழும்; சத்தான குழந்தை பிறக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி திங்கட்கிழமை ஆடிப்பூரம். சக்தியைத் தரிசிப்போம். வளையல்களை வழங்கி பிரார்த்திப்போம். தீர்க்கசுமங்கலியாகவும் இல்லத்தை சுபிட்சமாகவும் அருளிச்செய்வாள் அம்பிகை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in