அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா?

அம்மனுக்கு கூழ்
அம்மனுக்கு கூழ்

ஆடி மாதத்தில், வேப்பிலைக்காரி என்று அன்புடன் அழைக்கப்படும் அம்மனுக்கு கூழ் வார்த்து பக்தர்களுக்கு வழங்குவது புண்ணியங்களைப் பெருக்கும்; தனம் தானியத்தை இல்லத்தில் நிறைக்கும் என்பது ஐதீகம்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், ஒவ்வொரு நாளும் வழிபாடுகளும் சிறப்பு பூஜைகளும் அமர்க்களப்படுகின்றன. கோடை காலம் என்றும் கத்திரி காலம் என்றும் சொல்லப்படும் சித்திரை, வைகாசி மாதங்கள் என்பவை உஷ்ணமான மாதம். உடலில் வெப்பச்சூட்டை அதிகப்படுத்துகிற மாதம். ஆடி மாதம் காற்றடிக்கிற மாதம். உடலிலும் மண்ணிலும் பரவியிருக்கிற சூடும் காற்றும் சேர்ந்து உடலுக்கோ கண்களுக்கோ எந்த நோய்களையும் தந்துவிடக்கூடாது என்பதால்தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு திருவிழா, பால்குடம், தீர்த்தவாரி என்றெல்லாம் வைபவங்கள் நடக்கின்றன.

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனுக்கு கூழ் வார்த்தல் வைபவம் ஏராளமான அம்மன் கோயில்களில் விமரிசையாக நடந்தேறும். ‘நல்லபடியா பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்; வரன் தகையணும்’, ‘பையனுக்கு நல்ல இடத்துல வேலை கிடைக்கணும்’ என்று ஒவ்வொரு விதமான வேண்டுதல்களுடன் பக்தர்கள், கூழ் வார்த்து அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு வழங்கி மகிழ்வார்கள். இந்தக் கூழ் சாப்பிடுவதால், உடலின் வெப்பம் குறைந்து, குளுமையாகும். வயிற்றுப்புண் ஆறும். கண்களில் குளுமையேறிவிடும். இதனால் வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்பது ஐதீகம்.

ஆடிக்கூழ் செய்யும் முறை இப்படித்தான்!

தேவை :

கேழ்வரகு - 2 கப்

தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

உப்பு - ஒரு சிட்டிகை

நொய்யரிசி - ஒரு கப்

முன்னதாக, முதல் நாளில் அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கேழ்வரகு மாவுடன் தண்ணீரையும் சேர்த்து கெட்டிப்படாமல் நன்றாகக் கரைத்துவைக்கவேண்டும். மறுநாள், கூழ் வைக்கப் பயன்படுத்துகிற பெரிய பாத்திரத்துக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, அம்மனை வணங்கி, நீர் விட்டு கொதிக்கச் செய்யவேண்டும். நன்றாகக் கொதித்ததும் நொய்யரிசியைக் கலந்து அரைப்பதம் வந்த கையுடன், கரைத்து தயாராக வைத்திருக்கும் கேழ்வரகு மாவைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

மிதமான தீயில் வைத்து, கட்டிப்படாமல் நன்றாகக் கலந்து வேகவைக்கவேண்டும். பிறகு அதுவே கெட்டியாகும் பதத்துக்கு வந்ததும் உப்பு சேர்த்து இறக்கி வைத்தால், சுவையான கூழ் தயாராகியிருக்கும்.

இந்தக் கூழை அம்மனுக்குப் பிரசாதமாகப் படைத்து, பின்னர் கோயிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் வழங்கினால், நம் துன்பமெல்லாம் பறந்தோடச் செய்வாள். துக்கத்தையெல்லாம் போக்கியருளுவாள் சக்தி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in