ஆடி கடைசி ஞாயிறில் ராகுகாலத்தில் அம்மன் தரிசனம்

ஆடி கடைசி ஞாயிறில் ராகுகாலத்தில் அம்மன் தரிசனம்

இன்று ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை. இந்த நாளில் ராகுகால வேளையில் அம்மனைத் தரிசித்து, அம்மனுக்கு நெய்தீபம் அல்லது எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். இன்னல்களையெல்லாம் போக்கியருளுவாள் தேவி.

ஆடி மாதம் அற்புதமான மாதம். ஆன்மிகத் தேடலுக்கும் கலைகள் முதலான விஷயங்களுக்கும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் மனதை ஒருமுகப்படுத்துவதற்குமான அருமையான மாதம். அதனால்தான் சக்தி என்று கொண்டாடப்படும் அம்பாளுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது.

அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலும் அம்மன் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் ஆடி மாதம் முழுக்கவே சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் விமரிசையாக நடந்தேறுகின்றன.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அம்மனுக்கு உகந்தவை. இந்தநாளில், அம்மனை தரிசிப்பதும் குறிப்பாக, ராகுகால வேளையில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் அல்லது நெய்தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்வதும் நம் வாழ்வில் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும். இன்னல்களையெல்லாம் போக்கியருளும் என்பது ஐதீகம்.

ஞாயிற்றுக்கிழமையில் ராகுகாலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து தீபமேற்றி வழிபடுவது சிறப்பு. அதேபோல், சிவாலயங்களில் உள்ள துர்கையின் சந்நிதிக்குச் சென்று, ராகுகால வேளையில், துர்காதேவிக்கு எலுமிச்சை தீபமேற்றி அல்லது நெய்தீபமேற்றி வணங்கி வழிபட்டால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் சாக்த உபாஸகர்கள்.

ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் (14.08.2022) அம்மனைத் தரிசிப்போம். இந்தநாளில், அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ‘ஓம் சக்தி பராசக்தி’ என்று கண்கள் மூடி சொல்லிக் கொண்டே அம்மனை வேண்டிக் கொள்ளலாம். ராகுகால வேளையில் அம்மனுக்கு தீபமேற்றுவோம். செவ்வரளி முதலான செந்நிற மலர்கள் சார்த்தி ஆராதனைகள் செய்வோம். நம் அல்லல்கள் அனைத்தும் அகலும்; துக்கங்கள் அனைத்தும் பறந்துபோகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in