ஆடி கடைசி செவ்வாய்; அம்மனை தரிசிக்க மறக்காதீங்க!

ஆடி கடைசி செவ்வாய்; அம்மனை தரிசிக்க மறக்காதீங்க!

ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையில் மறக்காமல் அம்மனை தரிசிப்போம். அம்மனுக்கு செவ்வரளி பூக்கள் சார்த்தி வேண்டிக்கொள்வோம்.

சக்தி மிக்க மாதம் என்று ஆடி மாதத்தைக் கொண்டாடுகிறோம். மிகப்பெரிய சிவாலயங்களில் உள்ள அம்பாளாகட்டும், கிராமங்களில் வயல்வெளிக்கு நடுவே இருக்கிற அம்மன் கோயிலாகட்டும்... சக்தி குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலெல்லாம் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

குலசாமி கோயிலுக்குப் போவது போல், மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். பொங்கல் படையலிடுவார்கள். மாவிளக்கு ஏற்றி தங்கள் பிரார்த்தனையை முன்வைப்பார்கள்.

ஆடி மாதத்தின் எல்லாக் கிழமைகளும் அம்மன் வழிபாட்டுக்கு உகந்தவை என்றாலும் ஆடி செவ்வாய் மிக மிக விசேஷமான நாளாகப் போற்றப்படுகிறது.

ஆடி செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்வது சர்வ நன்மைகளையும் வாரி வழங்கும். அம்மனின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு, எலுமிச்சை தீபம் அல்லது நெய் தீபமேற்றி வழிபடுவார்கள். இந்த தீபமானது, நம் துன்ப இருளைப் போக்கி சந்தோஷத்தைப் பெருகச் செய்யும் என்பது ஐதீகம்.

ஆகஸ்ட் 16ம் தேதி ஆடி மாதத்தின் கடைசிச் செவ்வாய்க்கிழமை. இந்தநாளில், மறக்காமல் அம்மனைத் தரிசிப்போம். அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று, அபிஷேகப் பொருட்கள் அளித்து அம்மனிடம் நம் குறைகளை முறையிடுவோம். குறிப்பாக, ராகுகால வேளையான மாலை 3 முதல் 4.30 மணிக்குள் அம்மனையும் துர்கையையும் மறக்காமல் தரிசித்துப் பிரார்த்திப்போம். நம் துயரங்களையெல்லாம் போக்கி அருளுவாள் தேவி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in