’திருவாதிரைக்கு ஒரு வாய் களி!’

- களியமுது பிறந்த கதை!
’திருவாதிரைக்கு ஒரு வாய் களி!’

திருவாதிரை, சிவபெருமானின் திருநட்சத்திரம். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளை ஆருத்ரா தரிசனம் என்று போற்றுகின்றன புராணங்கள். கலைகளும் வேதங்களும் கற்க உகந்த மாதமான மார்கழியின் திருவாதிரையை, ஆடல் முதலான கலைகளுக்கெல்லாம் நாயகனாகத் திகழும் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்கும் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

நடராஜப் பெருமான் என்றதும் தில்லை என அழைக்கப்படும் சிதம்பரம் நினைவுக்கு வரும். தீட்சிதர்கள் நினைவுக்கு வருவார்கள். முக்கியமாக, திருவாதிரை திருநாளும் நினைவுக்கு வரும்! அந்தத் திருவாதிரையில், சிவனாருக்கு களியமுது நைவேத்தியம் படைத்து வணங்குவதும் நமக்குத்தான் தெரியுமே!

’திருவாதிரைக்கு ஒரு வாய் களி! உண்ணாதவருக்கு நரகக் குழி’ என்பார்கள் முன்னோர்கள்! மார்கழித் திருவாதிரை நன்னாளும் களியமுது நைவேத்தியம் வந்த கதையும் சிவப்பரம்பொருளின் அருளாடல்களில் ஒன்று!

தில்லையம்பதிக்கு அருகில் உள்ள கிராமத்தில் சேந்தன் என்பவன் வாழ்ந்தான். சிவபக்தியில் திளைத்தவன். ஏழைதான். ஆனாலும் பக்தியில் செல்வந்தன். விறகு வெட்டுவான். அதை விற்றுக் காசாக்குவான். அந்தக் காசைக் கொண்டு உணவு சமைப்பான். காசு கிடைத்தால்தான் சாப்பாடு. ஆனால், சேந்தனுக்கு ஒரு வழக்கம்... தினமும் ஒரேயொரு சிவனடியாருக்காவது உணவு கொடுத்துவிடவேண்டும் அவன்! தனக்கு உணவில்லையென்றாலும் பசி பொறுப்பான். ஆனால் சிவனடியாருக்குக் கொடுக்க உணவில்லையெனில், துடித்துப் பதறுவான்.

ஒருநாள்... ஊரெங்கும் ஓயாது பெய்தது மழை. மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதித்தது. சேந்தனுக்கும்தான். விறகு வெட்டுவதற்குச் செல்லமுடியவில்லை. வெட்டிப்போட்ட விறகுக் கட்டைகளும் மழையில் நன்றாக நனைந்திருந்தன. நனைந்த விறகை எவர் வாங்குவார்கள்? விற்றால்தான் காசு கிடைக்கும். காசு கிடைத்தால்தான் அரிசி. அதை உணவாக்கினால்தான் சிவனடியாருக்கு உணவு படைக்கமுடியும். தவித்து அழுதான். அப்போது, வீட்டிலிருந்த கேழ்வரகு சேந்தனின் கண்ணில் பட்டது. இதைக் கொண்டு ஏதேனும் செய்து, சிவனடியாருக்கு உணவிடுவோம் என சற்றே ஆறுதல்பட்டுக் கொண்டான். கேழ்வரகைக் கொண்டு களி செய்தான். இப்போது சிவனடியாருக்கு உணவு தயாராக இருந்தது. ஆனால், சிவனடியார் ஒருவரையும் காணோம். மழையில் எப்படி வருவார்கள்? அவர்களும் மழைக்கு சத்திரத்திலோ சாவடியிலோ மரத்தடியிலோ எங்கோ ஒதுங்கியிருப்பார்கள்தானே!

உணவுக்கு என்ன செய்வது என்று நினைக்கும் போது கேழ்வரகு கிடைத்தது. கேழ்வரகு கொண்டு களி செய்தால், சிவனடியார் ஒருவரையும் காணோம். அந்தச் சமயத்தில்தன் தன் அருளாடலையும் சேந்தன் எனும் பக்தனையும் உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் ஈசன். சேந்தனின் முன்னே, சிவனடியார் போல் திருச்சின்னங்கள் இட்டுக்கொண்டு ஜடாமுடியுடன் வந்து நின்றார் கங்கையையும் பிறையையும் முடியெனச் சூடிக்கொண்டிருக்கும் சிவனார்!

‘அப்பாடா’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டான் சேந்தன். சிவனடியாரை வணங்கினான். வரவேற்றான். ஆசனம் துடைத்தான். அமரச் சொன்னான். அவரும் அமர்ந்துகொண்டார்.

இலையில் களி பரிமாறினான். பக்தன் ஆசை ஆசையாகச் செய்த களியை, விள்ளல் விள்ளலாக எடுத்து, ரசித்துப் புசித்தார் சிவனார். ’களியமுது படைத்திட்ட நீ வாழ்க. உன் பெயர் பூமி உள்ளவரை தழைக்கட்டும்’ என ஆசி வழங்கிச் சென்றார். அப்படிச் செல்லும் போது, ‘’களி இன்னும் இருந்தால் கொஞ்சம் கொடு. போகும் வழியில் சாப்பிடுகிறேன்’’ என்று கேட்டு வாங்கிக் கொண்டு கிளம்பினார். சேந்தனின் வயிறு நிறைக்க களி இல்லை. ஆனால், சிவனடியாருக்கு வழங்கிவிட்ட மனநிறைவு அவனுக்குள்!

அன்றிரவு மழை ஓய்ந்துவிட்டிருந்தது. லேசான தூறல் மட்டுமே இருக்க, விடியலும் வந்தது. தீட்சிதர்கள் தங்களின் நித்யானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, சிவ பூஜை செய்ய சிதம்பரம் கோயிலின் நடை திறந்தார்கள். சந்நிதிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. சிவ சந்நிதியும் திறக்கப்பட்டது. திறந்ததும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக, குழப்பமும் யோசனையுமாக தீட்சிதர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அங்கே... கருவறை வாசலில் களி. மூலவரை நோக்கிச் செல்லும் இடமெல்லாம் களி, துளித்துளியாகக் கிடந்தன. சிவத்திருமேனியில் களிப் பருக்கைகள். நடராஜபெருமானின் திருக்கரத்தில் களி.

தீட்சிதர்களுக்கு ஒரே குழப்பம். ’இதுவரை இப்படியொரு உணவை சிவப்பரம்பொருளுக்கு நாம் படைத்ததே இல்லையே’ என்று! இந்த விஷயம், மன்னன் காது வரை சென்றது. அதற்குள் ஊரே, சிதம்பரம் கோயிலுக்குள் நிறைந்திருந்தது. ஆனால், மன்னனுக்கு இது அதிர்ச்சியேதும் தரவில்லை. முதல்நாள் மன்னனின் கனவில், ‘களி தந்தான் சேந்தன். என் பசி தீர்த்தான் சேந்தன்’ என சிவ அசரீரி கேட்டது மன்னனுக்கு! சேந்தன் என்பவனைத் தேடி அழைத்துவரும்படி, மன்னன் கட்டளையிட, நாலா திசையெங்கும் கிராமம் கிராமமாகச் சென்று விசாரித்தார்கள்.

அன்றைக்கு ஸ்ரீநடராஜரின் ரதோத்ஸவ வைபவம் வேறு. தேர் வடம் பிடித்தபடி மன்னனும் மக்களும் இருக்க, ஊர்மக்கள் பலரும் சுற்றி நின்று தரிசித்தபடி இருந்தார்கள். முதல்நாள் பெய்த மழையால், சாலையெங்கும் சேறும் சக்தியுமாக இருக்க, தேர்ச்சக்கரமானது சகதியில் சிக்கிக்கொண்டது. ஊர் கூடி இழுத்தால், சடுதியில் நகர்ந்து வரும் தேர், அசைவின்றி அங்கேயே நின்றது. அந்த வடம் பிடிக்கும் கூட்டத்தில் சேந்தனும் வடம்பிடித்து நின்றிருந்தான்.

’’சேந்தா... என்னைப் பற்றி பல்லாண்டு பாடு. நீ பாடினால் தேர் நகரும்’’ என அனைவருக்குமே அசரீரி கேட்டது. மன்னன் மலைத்துப் போனான். மக்கள் அதிசயமாக பார்த்தார்கள். சேந்தன் மலங்கமலங்க முழித்தான். ’’இந்த விறகுவெட்டிக்கு பாட்டெல்லாம் தெரியாதே சாமீ’’ என்று அழுதான். “சேந்தா... பாடு’’ என்று மீண்டும் கேட்டது அசரீரி. கண்களை மூடினான் சேந்தன். இரண்டு கரங்களையும் தலைக்குமேலே கொண்டு சென்று கரம் கூப்பி நின்றான். ‘மன்னுக தில்லை’ என்று பாடினான் சேந்தன். மொத்தம் பதிமூன்று பாடல்கள் சேந்தன் பாட... தேர் நகர்ந்தது. ஊர் நெகிழ்ந்தது. மன்னன் மகிழ்ந்தான். ’சேந்தனார்’ என இன்றைக்கும் போற்றப்படுகிறார்.

சேந்தனுக்கு, தென்னாடுடைய தில்லையம்பதியானே வந்து அருள்புரிந்த திருநாள்தான் ஆருத்ரா தரிசனப் பெருவிழா.

சிவபெருமானே சேந்தனுக்கு நேரில் வந்து அருள்புரிந்த நன்னாள்... மார்கழித் திருவாதிரைத் திருநாள். எனவே, இன்றும் சிவாலயங்களில், மார்கழி திருவாதிரையின் போது, களி செய்து இறைவனுக்குப் படைத்து பிரசாதமாக வழங்குவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

நம் வீடுகளில் கூட ஆருத்ரா தரிசனப் பெருவிழா நாளில், மார்கழித் திருவாதிரை நன்னாளில், களி செய்து பல காய்கறிகள் சேர்த்து நைவேத்தியம் செய்து, விரதத்தைப் பூர்த்தி செய்கிறோம். ‘திருவாதிரைக் களி’ என்றே சொல்லி ஸ்ரீநடராஜப் பெருமானை துதித்து வணங்குகிறோம்.

திருவாதிரைத் திருநாளில், திருவாதிரைக் களியமுது படைத்து சிவனாரை வணங்குவோம். நம்மால் முடிந்த அளவுக்கு, நான்கு பேருக்கேனும் சேந்தனாரைப் போல், உணவிட்டு மகிழ்வோம். நம் சந்ததி சிறக்க வாழ்வோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in