யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா: சென்னையில் டாக்டர் சுதா சேஷய்யனின் ‘திருவிளையாடற் புராணம்’ சிறப்புரை

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா: சென்னையில் டாக்டர் சுதா சேஷய்யனின் ‘திருவிளையாடற் புராணம்’ சிறப்புரை

சிறுபிள்ளைத்தனமானது... என்றொரு வார்த்தையை எல்லோரும் பயன்படுத்தியிருப்போம். அதாவது, உரிய வயதை அடைந்துவிட்டாலும் செய்யும் செயல்களில் தெளிவு இல்லையெனில், இந்த வார்த்தையைத்தான் சொல்லுவோம். பக்குவப்படாத பேச்சு ஒருவருக்கு இருந்தால், அவரை இந்த வார்த்தை சொல்லித்தான் விமர்சிப்போம். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு, சிறுபிள்ளைத்தனம் என்பது புரியாதபுதிராகக் கூட இருக்கும்.

‘என்ன இது... சின்னப்புள்ளைத்தனமா இருக்கு’ என்று சினிமாவில் காமெடியாகச் சொல்லப்பட்ட விஷயம், மனதில் பதிந்திருக்கும். ஆனால், இந்த வார்த்தை காமெடி அல்ல. வெறும் விளையாட்டு இல்லை.

விளையாடுகிற வயதில் இருந்த அந்தச் சிறுவன், ஓடியாடி விளையாடினாலும் அவை பெரிய சந்தோஷத்தையோ, உற்சாகத்தையோ அவனுக்குத் தந்துவிடவில்லை. அந்தச் சிறுவனின் வாழ்வில் முதன்முதலாக ஈர்த்த விஷயம்... ஆடிப்பாடுவதோ, ஓடியாடுவதோ, நண்பர்களுடன் கூடிப்பேசுவதோ என்பதல்ல. சத்தமே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியும் அந்தக் கரையில் வந்து தங்கிச் செல்லும் சாதுக்களின் வருகையும் சிறுவனுக்குள் சலசலப்பை உண்டு பண்ணின. மனதுக்குள் அந்தச் சம்பவங்கள், உட்கார்ந்து கொண்டன. ‘இன்னிக்கும் சாதுக்கள் யாராவது வருவாங்களா’ என்று ஏங்கச் செய்தன.

அப்பாவின் மடி, இன்னொரு கருவறை போலாயிற்று சிறுவனுக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம், அப்பா மகாபாரதம் படித்துக் காட்டுவார். ராமாயணத்தைச் சொல்லுவார். ஒவ்வொரு இடத்திலும் நிறுத்திவிட்டு, மிகப்பெரிய விளக்கத்தை, ‘பையனுக்குப் புரியணுமே’ என்கிற கூடுதல் அக்கறையுடன் விளக்குவார்.

அப்பாவால் கிடைத்த புராணங்கள், அந்த ஊரில் முக்கியஸ்தமாய் ஓடிக்கொண்டிருக்கிற நதி, அங்கே வந்துவந்து செல்கிற சாதுக்கள்... அந்தச் சிறுவயதில் அவனுக்கு முக்கிய விஷயங்களாக இருந்தன. அன்றாட வாழ்வில், இவை அடிக்கடி நிகழ... இவற்றையெல்லாம் கூர்ந்து பார்க்கிற மனோபாவம் சிறுவனுக்கு வந்தது. இவனைப் போல் எத்தனையோ பேர் பார்த்தாலும் அத்தனை பேருக்கும் இப்படியான சிந்தனைகள் எழவில்லை. அந்த நதி... வெறும் தண்ணீராகவே தெரிந்தது அவர்களுக்கு. வந்திருக்கும் சாதுக்கள்... வழிப்போக்கர்களாக மட்டுமே தெரிந்தார்கள். ஆனால், அந்தச் சிறுவனுக்குள் ஏற்பட்ட சிந்தனைகள்... தெய்வக் கட்டளை; கடவுளின் சங்கல்பம் என்று எவரும் அறியவில்லை. எப்படி அறியமுடியும்? அது... கடவுளுக்கும் சிறுவனுக்குமான பந்தம்; முடிச்சு. அந்தச் சிறுவன்... கடவுளின் குழந்தை. அதனால்தான் பின்னாளில் எல்லோரும் கடவுளின் குழந்தை என்றே கொண்டாடினார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், நர்த்ரா எனும் கிராமத்தில், கங்கை நதிக்கரையில் பிறந்து, தவழ்ந்து, ஓடியாடி விளையாடிய அந்தச் சிறுவன், அப்பாவால் புராணம் போதிக்கப்பட்டு உள்வாங்கிக் கொண்ட சிறுவன், சாதுக்களின் சந்திப்பால் உற்சாகம் அடைந்த சிறுவன்... பகவான் யோகி ராம்சுரத்குமார்.

வளம் கொழிக்கும் பூமி என்கிறோம். பகவானின் மனசு, அந்த இளம் வயதிலேயே வளம் கொழிக்கும் ஸ்தலமானது. புனிதமெனப் போற்றப்படும் கங்கையும் புராணங்களும் சாதுமார்களும் உள்ளுக்குள் தங்கிவிட... அதைப் பற்றியே சிறுவயதில் நினைத்தபடி இருந்தார் பகவான்.

சாதுக்கள்தான் சந்தோஷம் அவருக்கு. சாதுக்களைப் பார்ப்பதில்தான் அலாதிப் பிரியம் அவருக்கு. “இவங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?” என்று யோசித்த சிறுவன் பகவான். தடதடவென வீட்டுக்குள் ஓடி, அடுப்பங்கரையில் இருந்து சாப்பாட்டை அள்ளிப்போட்டுக் கொண்டு வந்து சாதுக்களுக்குத் தருவதில்தான் ஆனந்தம் அவருக்கு! அப்படித் தருவதே அன்றாடச் செயலானது.

வெளியே விளையாடச் சென்ற சிறுவன், வரும்போது சாது ஒருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததெல்லாம் நடந்திருக்கிறது. “அம்மா... இவருக்கு சாதம்போடு” என்று சொல்லியிருக்கிறார். இப்படிப் பலமுறை சாதுக்களின் பசியாற்றியிருக்கிறார்.

“அடடா... இப்பதான் சமைக்கவே போறேன். நேரமாகுமே” என்று அம்மா சொல்ல... அந்தச் சிறுவன் யோசிக்கவே யோசிக்காமல், சாதுவை கைபிடித்துக் கொண்டு, அக்கம்பக்கத்தில் உள்ள தெரிந்தவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, விவரம் சொல்லி, உணவு கேட்டு வழங்கிய சம்பவம்... எத்தனையோ முறை நிகழ்ந்திருக்கின்றன.

திருவண்ணாமலையில், பகவானின் ஆஸ்ரமத்தில் வருவோருக்கெல்லாம் இன்றைக்கும் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார் பகவான். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கும் அங்கே உள்ள சாதுக்களுக்கும் தினமும் உணவு பரிமாறி, பசியாற்றி வருகிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

இது... எப்போதோ விதிக்கப்பட்டது. நர்த்ரா கிராமத்திலேயே விதைக்கப்பட்டது!

டிசம்பர் 1-ம் தேதி, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் ஜெயந்தித் திருநாள் இன்று. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் உள்ள ஆஸ்ரமத்தில், நாம பஜனைகளும் சிறப்பு பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.

பகவான் யோகி ராம்சுரத்குமாரை, தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவர் வழி வாழ்ந்த எழுத்தாளர் பாலகுமாரன், மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் எனும் பெயரில், ஒவ்வொரு வருடமும் சிறப்பு பூஜைகளும் அகண்டநாம ஹோமங்களும் இசை மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சிகளும் நடத்தி, அன்னதானம் வழங்கிவந்தார். இப்போதும் அவரின் குடும்பத்தினர் வருடந்தோறும் இதைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.

நவம்பர் 30-ம் தேதியே தொடங்கிவிட்டன விசேஷ வழிபாடுகள். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில், இன்று காலை முதலே வழிபாடுகளும் பூஜைகளும் தொடங்கி நடைபெறுகிறது. மாலையில், எழுத்தாளரும் பேச்சாளரும் மருத்துவருமான சுதா சேஷய்யன், ‘திருவிளையாடற் புராணம்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். காலையில், முநீஸ்வர சாஸ்திரிகள், சிறப்பு ஹோமத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

பகவான் யோகி ராம்சுரத்குமாரை குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், அவரின் ஜெயந்தித் திருநாளில் வணங்கி, நம்மால் முடிந்த வகையில், எவருக்கேனும் உணவு வழங்குவோம். வழங்கி பகவானின் பேரருளைப் பெறுவோம்.

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in