புத்தர் ஜாதக கதையின் காகம்!

தம்மத்தின் பதம் -18
புத்தர் ஜாதக கதையின் காகம்!

ஒரு காகமும் புறாவும் பக்கத்து பக்கத்துக் கிளைகளில் வசித்து வந்தன. புறா மிகவும் அமைதியாக எப்போதும் தன் வேலைகளைச் செய்யும். காகம் பரபரப்பாக இயங்கும். காகம் எப்போதும் எதையாவது செய்து வாழும். புறாவோ திட்டமிட்டப்படிதான் நடக்கும். எதன் மீதும் பேராசைக் கொள்ளாது. ஒரு நாள் அருகிலிருக்கும் வீட்டில் மனதைக் கவரும் அருமையான வாசனை சமையலறையிலிருந்து வந்தது. காகத்திற்கு ஒரே கிளர்ச்சி. அந்த உணவை எப்படியாவது சாப்பிடவேண்டும். மீன் துண்டுகளை எண்ணெயில் பொரித்துக்கொண்டிருந்தார் சமையல்காரர்.

மீனைச் சாப்பிட வேண்டும் காகத்தின் பேராசை சொல்லியது. காகம் புறாவிடம் சென்று இந்த விஷயத்தைச் சொல்ல அது மறுத்தது. காகத்திற்கு அறிவுரைச் சொன்னது. “அது உங்களுக்குத் தரப்படாத பொருள் அதை நீங்கள் எடுக்கக் கூடாது, உங்களுக்குத்தான் இயற்கை எவ்வளவோ தானியங்களைத் தந்து இருக்கிறதே”. காகம் கேட்கவில்லை. சமையல் காரர் எதற்கோ வெளியே சென்றார். காகம் சமையலறைக்குள் பறந்தது. மீன் துண்டு ஒன்றை தன் அலகில் கொத்தி எடுக்கும் நேரம் சமையலறைக்குள் வந்தார் சமையலர். கதவையும் ஜன்னல்களையும் சாத்திவிட்டு காகத்தைப் பிடித்து அதன் இறக்கைகளைப் பிய்த்து எறிந்து அதன் உடல் முழுக்க மிளகாய்ச் சாந்தைத் தடவிவிட்டார். காகம் துன்பத்தில் உழல்கிறது. மனதிற்குள் இருக்கும் பேராசை காதுகளை அடைத்துவிடுகிறது. அறிவுரைகளைக் கேட்பதில்லை. இது ஒரு புத்தர் ஜாதக கதை.

உடையில் இருக்கும் அழுக்குகளை அகற்ற நாம் அவற்றைத் துவைக்கிறோம். துவைப்பவரின் கைகளில் உடை வளைந்து கொடுக்கிறது. தன் நூலிழைகளக்கு இடையே படிந்திருக்கும் அழுக்குகளை அகற்ற சோப்பு நீரை உள்ளே ஊடுருவ அனுமதிக்கிறது. அதனால் துணி தூய்மை அடைகிறது. துணி விரைப்பாக இருந்துகொண்டு துவைப்பவரின் கைகளைக் கிழிக்கும் என்றால் துணி தூய்மையாகாது.

இந்த எளிய பண்பு மனிதர்களுக்கு இருந்தால்போதும் அவர்களின் அசுத்தக் கறைகள் அகற்றப்படும். விட்டுக்கொடுத்தலும் பிறரின் அறிவுரைகள் ஆலோசனைகளைக் கேட்பதும் நம் மனத்தைப் பக்குவப்படுத்தும். ஏனென்றால் இவ்வாழ்க்கை நிலையானது அல்ல. வாழ்க்கை மட்டுமல்ல இவ்வுலகில் எதுவும் நிலையானதல்ல. எனவே இருக்கும் காலம்வரை நல்லவர்களாக வாழ்வதற்கான முயற்சிதான் வாழ்தல் என்னும் செயல்.

பழுத்த இலை மாதிரி இப்போது நீ

மரணத்தை அறிவிப்பவர்கள்

நெருங்குகிறார்கள் உன்னை

நீண்ட பயணம் நீ செல்ல வேண்டியது

ஆனால் அதற்கான ஏற்பாடுகள்

எதுவும் இல்லை உன்னிடம் (தம்மபதம் 235)

தனித்திருக்க வேண்டும் ஒரு தீவைப் போல ஆயிரம் அலைகள் வந்து மோதினாலும் மாறாமல் அப்படியே இருக்கும் கரையைப் போல இருக்க வேண்டும். வேகமாக ஊக்கத்துடன் அறிவினைப் பெற வேண்டும். மனதிற்குள் இருக்கும் மாசுகளை அகற்ற வேண்டும். பேராசைகளைக் கழிக்க வேண்டும். இப்படி இருக்கும் வாழ்வு நம்முடையது என்றால் நம் பெயரும் உயர்வுற்றோர் பட்டியலில் இருக்கும்.

வாழ்விற்கான முற்றுப்புள்ளியாய் இருக்கும் மரணத்தின் பயணத்தில் இடையில் எங்கும் நாம் ஒதுங்கித் தப்பித்து விட முடியாது. மரணத்தை விட்டு நாம் எங்கே செல்ல முடியும்! குழந்தை ஓடிப்போய் தாயின் மடியில் விழுந்து படுத்துக்கொள்வதைப் போலத்தான் நாமு மரணத்தின் மடியில் வீழ்வதற்காகத்தான் ஓடுகிறோம். ஆகையால்,

பொற்கொல்லன்

வெள்ளியிருந்து அசுத்தங்களை

நீக்குவதைப் போல்

கொஞ்சம் கொஞ்சமாக

வேளாவேளைக்கு

தன் அசுத்தங்களை அறிவர் நீக்குகிறார் ( தம்மபதம் 239)

அறிவின் செயல் என்பது பெரிய பெரிய சூத்திரங்களை உருவாக்குவது அல்லது சிக்கல்களைத் தீர்த்துவிடுவது அல்ல. மாறாக தன்னிடமிருக்கும் தீமைகளை மரம் இலைகளைக் கோடைக்காலத்தில் உதிர்ப்பதைப்போல உதிர்ப்பதுதான் அறிவின் உச்சபட்சம். இரும்பிலிருந்து தோன்றி இரும்பையே அழித்துவிடும் துருவினைப்போல ஒருவரின் தீய செயல்களே அவரை கீழே தள்ளிவிடுகிறது என்கிறார் புத்தர். நம்மிடம் இருக்கும் தீய செயல்களை புறத்திலிருந்து வரும் சக்தி ஒன்று செதுக்கிக் கீழே தள்ளிவிடும் என்று நம்பலாகாது. அப்படி ஒரு வாய்ப்பிருப்பின் இன்று இந்த உலகத்தில் துன்பங்களே இருக்காது. தீமைகளே இருக்காது. ஆனால், இன்றளவும் தீமைகளும் துன்பங்களும் இருக்கின்றதென்றால் அதற்கானக் காரணம் அந்தத் தீமைகளை அந்தந்த மனிதர்களே நீக்க முடியும் என்பதால்தான். பெரும்பான்மையோரால் அவற்றை நீக்க முடியவில்லை அல்லது நீக்க அவர்கள் முயலவில்லை என்பதுதான்.

அழுக்குகளின் பேரழுக்கான அறியாமை நீக்கப்படவேண்டும் என்பது தம்மத்தின் பதம். திரும்பச் திரும்ப சொல்லப்படாத பாடம் விரைவில் மறக்கப்படும். ஒழுங்காகப் பராமரிக்கப்படாத வீடு அழிந்துவிடும். சோம்பல் அழகின் மிகப்பெரும் தடையாக இருக்கிறது. அதேபோல் விழிப்புடன் இல்லாமல் இருப்பது நம் காவலுக்குப் பகையானது. விழிப்பும் அறிவும் மனிதக்குலம் சேர்க்க வேண்டியது மிகவும் தேவை இன்றைக்கு.

பொறாமை, இச்சை, பிறரிடம் குறை காண்பது,தீமையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது போன்ற அழுக்குகளை அகற்ற வேண்டும்.

பொய்யுரைப்பவர்

கொடுக்காததை எடுத்துக்கொள்பவர்

பிறன்மனைக் கவர்பவர்

நஞ்சாகிய மதுவுக்கு

அடிமையானவர்

தங்கள் வேர்களைத் தாங்களே

தோண்டுகின்றவர் ( தம்மபதம் 246-247)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
புத்தர் ஜாதக கதையின் காகம்!
எதை எதிர்த்துப் போராடச் சொல்கிறார் புத்தர்?

Related Stories

No stories found.