ஏனெனில்: பெண்களுக்கு 50 சதவீதம்; பெரியார் என்ன சொன்னார்?

ஏனெனில்:
பெண்களுக்கு 50 சதவீதம்;
பெரியார் என்ன சொன்னார்?

‘அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்’ என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஆண் தேர்வர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே, பொதுப் போட்டிகளைப் பெண் தேர்வர்கள் பெருமளவு ஆக்கிரமித்திருக்கும் நிலையில், ஆண்களுக்கான வாய்ப்பு மேலும் குறைந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை மனுக்களை அனுப்புவதோடு, ‘ஆண்களுக்கு நீதி வேண்டும்’ என்று ஹாஷ்டேக் பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கையில் ஏறக்குறைய சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளிலும் அதற்கான விகிதாச்சாரத்தை அளிக்க வேண்டும். சில நேரங்களில் 50 சதவீதத்தைக் காட்டிலும் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதை எதிர்பாலினர்கள் விரும்பவில்லை என்பதற்கான காரணம், ஏற்கெனவே இங்கு நிலவிவரும் வேலையில்லா நெருக்கடி நிலைதான். வேலையில்லாத் துயரத்தை ஆண்கள் மட்டும் அனுபவிக்கவில்லை, பெண்களும் சேர்ந்தே அனுபவிக்கிறார்கள். மற்றபடி, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இத்தகைய ஆட்சேபணைகள் எழக்கூடும் என்பதெல்லாம், ஏற்கெனவே எதிர்பார்த்ததும்கூடத்தான்.

1970-ல் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த ஸ்ரீபதி சந்திரசேகர் சென்னை வானொலிக்காக, தந்தை பெரியாரைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் முக்கிய நோக்கம் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி பிரச்சாரம் செய்வது. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்படுவதற்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே, 1920-களில் அதன் அவசியத்தைப் பேசியவர் பெரியார் என்பதன் அடிப்படையில் அந்தப் பேட்டி அமைந்திருந்தது. அதன் ஒருபகுதியாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய விவாதமும் இடம்பெற்றிருந்தது.

ஸ்ரீபதி சந்திரசேகர், அடிப்படையில் ஒரு பொருளியலாளர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். சர்வதேச அளவில் இன்றளவும் கொண்டாடப்படும் மக்கள்தொகையியலாளர். இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்கும் பெண்களின் திருமண வயது 15-லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டதற்கும் அவரது வழிகாட்டலுக்குப் பெரும் பங்குண்டு. ‘2 குழந்தைகளே போதும், அவை பெண் குழந்தைகளாக இருந்தால் ஆண் குழந்தைக்காக அடுத்து முயற்சிக்க வேண்டாம்’ என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பெரியாரிடம் ஒரு யோசனை கேட்கிறார் ஸ்ரீபதி சந்திரசேகரன். அந்த எண்ணம் மக்களிடமிருந்து மாற பெரியார் சொன்ன யோசனைதான், பெண்களுக்கு 50 சதவீத உத்தியோகம், ஆண்களுக்கு 50 சதவீத உத்தியோகம்.

பெரியார்: இப்ப ஆம்பளையெல்லாம் உத்தியோகம் பாக்கறாங்க; பொம்பளைங்க எல்லாம் வீட்லே இருக்காங்க. அதனாலேயே நமக்கு ஆம்பிளைப் புள்ளை ஒண்ணு வேணுமின்னு தோணுது; அவன் சம்பாதிக்கிறான்னு தோணுது. அதனாலே நாம் ‘ஈக்வலைஸ்’ பண்ணிட்டா உத்தியோகத்தை ஆளுக்குப் பாதின்னு?

அமைச்சர்: அப்போ, ஆம்பிளைங்க கொஞ்சம் ‘அப்போஸ்’ பண்ணுவாங்களே, எதிர்ப்பாங்களே?

பெரியார்: ஏன்? எப்படி ‘அப்போஸ்’ பண்ணுவாங்க? எப்படி நீங்கதான் ‘அப்போஸ்’ பண்ண முடியும்? உங்க மகளுக்கும், உங்க தங்கச்சிக்கும் உத்தியோகம் வரும்போது, நீங்க ஏன் ‘அப்போஸ்’ பண்றீங்க?

அரசுப் பெண்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து கோபத்தில் கொதிக்கின்ற இளைஞர்களுக்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்ன வார்த்தைகள்தான் பதிலாக இருக்க முடியும். பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது உங்கள் தங்கை, மனைவி, மகள் ஆகியோரையும் உள்ளடக்கியதுதானே? உத்தியோகம் ஏன் புருஷலட்சணமாக மட்டும் இருக்க வேண்டும்? பெண்டாட்டி லட்சணமாகவும் இருக்கட்டுமே… அதுவும்கூட ஆண்களுக்கு நல்லதுதானே!

(திங்கள் கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in