இதே தேதி... முக்கியச் செய்தி: வெற்றிகரமான பெட்ரோல் கிணறும், ஒரு தோல்விகர மனிதரும்!

இதே தேதி... முக்கியச் செய்தி: வெற்றிகரமான பெட்ரோல் கிணறும், ஒரு தோல்விகர மனிதரும்!

பெட்ரோலியம் - மனித வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியக் காரணியாக விளங்கும் வஸ்து. நீராவி இன்ஜின்களின் இடத்துக்கு பெட்ரோலில் இயங்கும் இன்ஜின்கள் வந்த பின்னர் உலகின் வேகம் மேலும் முடுக்கமடைந்தது. நவீன காலத்தில் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு தொடங்கியது என்றாலும், பெட்ரோலியம் என்பது பல நூற்றாண்டுகளாக பூமியில் இருந்துகொண்டுதான் இருந்தது. அதன் தனித்தன்மையை உணர்ந்து அதைப் பிரித்தெடுத்து வணிகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றில், வெற்றிகரமாக அமைந்த எண்ணெய்க் கிணறு எங்கு தோண்டப்பட்டது? நீங்கள் நினைப்பது போல் அரபு நாடுகளில் அல்ல. அமெரிக்காவில். அந்தக் காலகட்டத்தில் ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளிலும் அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் அதற்கான முயற்சிகள் நடந்துவந்தன. எனினும், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் டைட்டுஸ்வில் நகரில் எட்வின் டிரேக் என்பவர் அமைத்த எண்ணெய்க் கிணறுதான், உலகின் முதல் வெற்றிகரமான எண்ணெய்க் கிணறு என வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. கூடவே, நிலக்கரி தார் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட மண்ணெண்ணெய்யின் துணையுடன் விளக்குகள் ஜொலிக்கத் தொடங்கியிருந்தன. ஆனால், அது மட்டும் போதவில்லை, மனிதனின் முன்னேற்றத்துக்கு. பெட்ரோலியக் கிணறுகள் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கிய பின்னர்தான் எல்லாமே மாறியது.

எட்வின் டிரேக்
எட்வின் டிரேக்

இதன் பின்னே, ஒரு சோகக் கதையும் ஒளிந்திருக்கிறது. முதலில், செனெகா எண்ணெய் நிறுவனத்துக்காக எட்வின் டிரேக் அமைத்த எண்ணெய்க் கிணறு பற்றிப் பார்க்கலாம். அந்தக் காலகட்டத்தில் எண்ணெய்க் கிணற்றைத் தோண்டும் முயற்சிகளில் பலர் ஈடுபட்டிருந்தனர். ஆனால், தனது வித்தியாசமான சிந்தனை மூலம் எட்வின் டிரேக் உருவாக்கிய உத்தி இம்முயற்சியை வெற்றிகரமாக்கியது. அதற்கு முன்னர் ரயில் நடத்துநர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த எட்வின் டிரேக், உப்புக் கிணறு தோண்டுவது குறித்து நிறைய புத்தகங்கள் படித்து வைத்திருந்தார். அதை ஓர் உத்தியாகப் பயன்படுத்தி எண்ணெய்க் கிணற்றை வடிவமைத்தார்.

அதற்காக உப்புக் கிணறு தோண்டுவதில் அனுபவம் கொண்டிருந்த தொழிலாளர்களையும் பயன்படுத்தினார். அதற்கு முன்னர் எண்ணெய்க் கிணற்றைத் ‘தோண்டுவது’தான் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது. எட்வின் டிரேக், நீராவி இன்ஜினில் இயங்கும் டிரில்லிங் கருவியைப் பயன்படுத்தினார் (ஏற்கெனவே ஒருவர் இந்த முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றி கண்டார்). எண்ணெய்க் கிணறு தோண்டும்போது மண் சரிந்து ஓட்டைகள் அடைத்துக்கொண்டபோது அவற்றில் பெரிய குழாய்களைப் பதித்து பிரச்சினைக்குத் தீர்வுகண்டார் எட்வின் டிரேக். கூடவே, லாபம் பார்க்க ஒரு முறையான வணிக நிறுவனத்தின் துணையும் இருந்தது.

எனவே, அவரது முயற்சிகள் கைகூடின. 1859 ஆகஸ்ட் 27-ல் நவீன எண்ணெய்க் கிணறு வெற்றிகரமாகத் தோண்டப்பட்டது. அதிலிருந்து கிடைத்த பெட்ரோலியத்தைக் கொண்டு பென்சில்வேனியா செழித்தது. ஆனால், அப்போது எட்வின் டிரேக் செய்த ஒரு தவறு அவர் பணக்காரராவதைத் தடுத்துவிட்டது. ஆம், தனது பிரத்யேக உத்திகளுக்கான காப்புரிமையை அவர் பெறத் தவறிவிட்டார். செனெகா எண்ணெய் ஒரு சிறிய முதலீடு செய்திருந்ததுடன், அதில் பணிபுரிந்தும்வந்த அவர், பிற்பாடு பிழைப்புக்காக வெவ்வேறு வேலைகளைச் செய்ய நேர்ந்தது. டைட்டுஸ்வில் நகரைவிட்டு வெளியேறி, நியூயார்க், நியூஜெர்ஸி போன்ற நகரங்களில் வேலை செய்துவந்தார்.

அதற்குள் பெட்ரோலியம் தொழில் மளமளவென வளர்ந்துவிட்டிருந்தது. ஆனால், அவரோ வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். 1870-ல் மீண்டும் பென்சில்வேனியாவுக்குத் திரும்பிய அவருக்கு அம்மாநில அரசு ஓய்வூதியம் வழங்கியது. அங்குள்ள பெத்லஹேம் நகரில் வசித்துவந்த அவர், 1880 நவம்பர் 9-ல் காலமானார். டைட்டுஸ்வில் நகரில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டது. அவர் உருவாக்கிய எண்ணெய்க் கிணற்றின் மாதிரியும் உருவாக்கப்பட்டது. அது ஒரு நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

இன்றைய தேதியில் எண்ணெய் உற்பத்தி தொழிலில் அமெரிக்கா கொடிகட்டிப் பறக்கிறது. ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கிக்கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் போர் காரணமாக அதைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. அதன் பின்விளைவுகளையும் எதிர்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அதற்கு எட்வின் டிரேக் போன்றோரின் உழைப்புதான் முக்கியக் காரணம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in