இதே தேதி... முக்கியச் செய்தி: உலகின் ஆசிரியர்களுக்கோர் அங்கீகாரம்!

இதே தேதி... முக்கியச் செய்தி: உலகின் ஆசிரியர்களுக்கோர் அங்கீகாரம்!

சில சிறப்பு தினங்கள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுவது / அனுசரிக்கப்படுவது வழக்கம். உலகளாவிய அளவில் ஒரே தேதியில் சில சிறப்பு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், உலகமெங்கும் ஒரு மாதம் கழித்து அக்டோபர் 5-ம் தேதிதான் ‘உலக ஆசிரியர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணி என்ன?

உலகமெங்கும் உள்ள ஆசிரியர்களின் நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சூழல் ஆகியவற்றைக் கவனப்படுத்தும் வகையில் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ 1994 அக்டோபர் 5-ல் நடத்திய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கல்வித் துறைப் பணியாளர் கொள்கை, ஆட்சேர்ப்பு, ஆரம்பகட்ட பயிற்சி, ஆசிரியர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வது, அவர்களது பணிச்சூழல் போன்ற விஷயங்கள் தொடர்பான தர நிர்ணயத்தை வரையறுப்பது போன்றவை இம்மாநாட்டின் பரிந்துரைகளின் முக்கிய நோக்கங்கள் ஆகும். 1966-ல் பாரிஸில் நடந்த யுனெஸ்கோ / சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) மாநாட்டில் இதற்கான தொடக்கப்புள்ளி வைக்கப்பட்டது.

உலகமெங்கும் உள்ள ஆசிரியர்களைப் பாராட்டுவது, அவர்களின் நிலை குறித்து ஆராய்வது, அவர்களைத் தரமுயர்த்துவது, ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான வாய்ப்பை இந்த தினம் வழங்குகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோவும், சர்வதேசக் கல்வி (இஐ) அமைப்பும் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

இந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும், ஆசிரியர்கள் தொடர்பான செய்திகள், கொள்கைகள், முழக்கங்கள், முன்னெடுக்கப்படும். 20222-ம் ஆண்டைப் பொறுத்தவரை, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் கடந்த மாதம் நடந்த, மாறிவரும் கல்விக்கான உச்சி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள், இவ்விஷயத்தில் ஆசிரியர்களிடமும், கற்பித்தலிலும் ஏற்பட்டிருக்கும் தாக்கம் போன்றவற்றுக்கு முகங்கொடுப்பதற்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘கல்வியின் மாற்றம் ஆசிரியர்களிடமிருந்து தொடங்குகிறது’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக முன்னெடுக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டும்; அவர்கள் அறிவு உற்பத்தியாளர்கள், கொள்கை வகுப்பதில் பங்கெடுப்பவர்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என யுனெஸ்கோ, ஐஎல்ஓ, சர்வதேசக் கல்வி அமைப்பு ஆகியவை இந்த ஆண்டு கூட்டாக வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தினத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளில், ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சில நாடுகளில் ஆசிரியர்கள் நிம்மதியாக ஓய்வெடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

என்னதான் வீட்டில் பெற்றோர்கள் சில விஷயங்களைக் கற்பித்தாலும், ஆசிரியர்கள் மூலம்தான் குழந்தைகள் முறைப்படி அறிவைப் பெறுகின்றனர். ஒரு மனிதரின் எதிர்காலத்தையே வடிவமைப்பது ஆசிரியர்கள்தான். அதனால்தான், 'ஆசிரியர் என்பவர் மெழுகுவர்த்தி போன்றவர். தன்னையே உருக்கிக்கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்’ என்கிறார்கள் சான்றோர்கள். நம் ஆசிரியர்களை சிரம்தாழ்ந்து வணங்குவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in