சுகப்பிரசவமா சிசேரியனா..?

அவள் நம்பிக்கைகள் - 50
சுகப்பிரசவமா சிசேரியனா..?

இப்போதெல்லாம் யாராவது தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்றுகூறினால், குழந்தை ஆணா பெண்ணா என்று கேட்பதற்கு முன்பே, "சுகப்பிரசவமா சிசேரியனா..?" எனும் கேள்வியைத்தான் முதலில் வைக்கிறார்கள். பதில் சிசேரியன் என்று வந்துவிட்டால், "எங்க வீட்டிலகூட இரண்டும் சிசேரியன்தான்.. இப்பெல்லாம் நார்மல் டெலிவரிங்கறதே இல்லாமப் போயிடுச்சு..!" என்ற அங்கலாய்ப்பையும் சேர்த்தே கேட்க நேரிடுகிறது.

இயற்கையாகவே பெண்களுக்கு பெரும்பாலும் சுகப் பிரசவம் ஏற்படும் வகையில்தான் உடலமைப்பு இருக்கிறது எனும்போது, இந்த சிசேரியன் எங்கிருந்து வருகிறது? உண்மையில் ஒரு தாயின் பிரசவம் சுகப்பிரசவமா இல்லை சிசேரியனா என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறார்கள்? மேலும் இந்த சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன்களின் சாதக பாதகங்கள் என்ன?.. என்பதையெல்லாம் இந்த வார 'அவள் நம்பிக்கைகளில்' தெரிந்து கொள்வோம்.

சுகப்பிரசவமும் சிசேரியனும்

பொதுவாக கருப்பையில் வளரும் குழந்தை, சரியான காலத்தில் தாயின் இடுப்பு எலும்பைத் தாண்டி கர்ப்பப்பையின் வாயைக் கடந்து, பிறப்புறுப்பு வழியாக வெளியேறுவதை ‘நார்மல் டெலிவரி’ அதாவது சுகப்பிரசவம் என்கிறோம். ஆனால், அப்படி குழந்தை வெளியேற முடியாதபடி, வெளியேறும் பாதையில் தடை இருந்தாலோ, பிரசவத்தின்போது தாய் அல்லது சேய்க்கு பாதிப்புகள் ஏற்படுமளவு உடல்நலன் குறைந்திருந்தாலோ அல்லது உரிய காலத்தில் பிரசவ வலி வராமலிருந்தாலோ அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை வெளியே எடுக்க நேரிடுகிறது. இதைத்தான் சிசேரியன் என்கிறோம். 

ஒரு கர்ப்பிணிப் பெண், தனது 8 மற்றும் 9-வது மாதங்களில் பொய்வலி உள்ளிட்ட பல்வேறு அசௌகரியங்களைத் தாண்டி, இறுதியில் பிரசவம் எனும் க்ளைமாக்ஸை நெருங்குகிறார் என்பதை இந்த தொடரில் ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். மேற்படி க்ளைமாக்ஸ் சுகப்பிரசவமா இல்லை சிசேரியனா என்பதை 'Power, Passage, Passenger’ எனும் மூன்று முக்கியமான ’P’ காரணிகள்தான் முடிவு செய்கின்றன. 

எரிபொருள் - பிரசவ வலி

பிரசவத்தை ஒரு பயணத்துடன் ஒப்பிட்டோம் என்றால், பயணத்தின் முதல் தேவையாக இருப்பது Power எனும் fuel; அதாவது பிரசவ வலியின் தன்மை.

பொதுவாக தாய்க்கு ஏற்படும் இந்தப் பிரசவ வலி, பத்து நிமிடங்களில் குறைந்தது மூன்று முறை ஏற்படும். அதில் ஒவ்வொரு வலியும் குறைந்தது ஒரு நிமிடம் வரையாவது நீடிக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதை 'effective uterine contractions' அதாவது ஆற்றல்மிகு கருப்பை சுருங்குதல்கள் என்பார்கள். அப்படி கருப்பை உள்பக்கமாக அழுத்தத்துடன் சுருங்குவதுதான், அத்தனை காலமும் உள்ளேயிருந்த குழந்தையை வெளியுலகுக்கு அனுப்பும் பயணத்தின் தொடக்கமாகிறது.

அவ்வாறு உண்மையான வலி தொடங்கிய பிறகும் தாயின் கருப்பை நன்கு சுருங்காமல், அதாவது effective contractions ஏற்படாமல் இருக்கும் நிலையை 'uterine inertia' என்கிறார்கள். இதனை பயணி புறப்படத் தயாரான பிறகும் எரிபொருள் இல்லாத வாகனம், பயணத்திற்கு உதவாத நிலைக்கு ஒப்பிடுகிறார்கள். இந்த inertia எனும் உறழ்வு நிலைக்கு, பெண்ணின் உணவு ஊட்டம் மற்றும் நீர்த்தன்மை குறைபாடுகள் காரணமாக அமைகின்றன.

பயணப் பாதையில் ஸ்பீட் பிரேக்கர்கள்

சரி, பவர் எனும் எரிபொருளுடன் பயணம் தொடங்கியாகி விட்டது. ஆனால் பயணம் சிறப்பாக அமைய Passage எனும் பயணப் பாதையும் நன்றாக இருக்க வேண்டுமல்லவா.?  

உண்மையில் கருவிலிருக்கும் குழந்தையின் வெளியுலகிற்கான பயணத்தை சிக்கல்கள் இன்றி எளிதாக்குவது இந்த பயணப்பாதையே! தாயின் இடுப்பு எலும்பின் அமைப்பு, அதனைச் சுற்றியுள்ள மென்திசுக்கள், தசைகள் மற்றும் தசைநார்களின் வலிமை, கருப்பைவாயின் விரியும் தன்மை போன்றவை இந்த பாதை சிறப்பாக இருப்பதை உறுதி செய்கின்றன.

சில தருணங்களில் சமயங்களில் இந்தப் பயணப்பாதையில் CPD, Dystocia, Arrest போன்ற சில ஸ்பீட் ப்ரேக்கர்கள் உருவானால் குழந்தையின் பயணம் தடைபட்டு, அது கீழே வர முடியாமல் போகிறது.

பயணி நலமா?

பயணி இனிதாகப் பயணம் செய்ய, தாயின் பவரைக் கொடுத்தாகிவிட்டது. பாதையும் எந்த தடங்கல்களுமின்றி இருக்கிறது. அதன் பிறகும் பயணம் இனிதாக Passenger என்னும் பயணி சரியாக இருப்பதும் அவசியம் அல்லவா?

தனது தாயின் பிறப்புறுப்பு பாதையில் பயணத்தை மேற்கொள்ளும் ஒரு குழந்தை எந்த பாதிப்புமின்றி வெளியே வரவும் சிலபல அவசியம். பேசஞ்சரான குழந்தையின் எடை மற்றும் நிலை(presentation & position) அதன் தங்கிடம் (station), சமயங்களில் குழந்தையின் மண்டையோட்டு எலும்புகள் சற்றே நெகிழ்ந்து தரும் தன்மை(ridging & overriding) ஆகிய அனைத்தும் ஒன்றுசேரும்போதுதான் சுகப்பிரசவம் சம்பவிக்கிறது.

இதர காரணிகளும் தீர்வுகளும்

ஒரு பிரசவம் நல்லவிதமாக இந்த மூன்று முக்கிய P காரணிகள் தவிர, patience, pain relief, patient's psyche என தாயின் பொறுமை, மன திடம், வலி நிவாரண உதவி ஆகியனவும் இணைந்து துணைநின்றாக வேண்டும். இவர்களுடன் உடனிருக்கும் கணவரும், கண்காணிக்கும் மருத்துவர் மற்றும் செவிலியர்களின் உதவியும் இதில் இன்றியமையாததாகும்.  

பொதுவாக இந்த பிரசவ பயணம் சுகப்பிரசவமாக, அதாவது இயற்கை வழியாக வெளிவர தாயின் வலி போதாததாக இருக்கும்போது வலியைத் தூண்டும் மருந்துகளை வழங்கியும், தாயின் உணவு ஊட்டம் மற்றும் நீர்த்தன்மை ஆகியவை உதவாத போது ட்ரிப் வழங்கப்படுவதும் உண்டு. கூடவே Amniotomy எனும் 'பனிக்குட நீரை செயற்கையாக உடைக்கும்’ முயற்சிகளும், அத்துடன் அவசியமெனில் வலி நிவாரணிகளும் வழங்கப்படலாம்.

இத்தனையும் மீறி ஏதாவது ஒரு காரணத்தால் இந்தப் பயணம் தடைபட்டு, தாய் அல்லது சேயின் நலனுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலையில் assisted delivery எனும் ஆயுத பேறுக்கு ’வாக்யூம் அல்லது ஃபோர்செப்ஸ்’ கருவிகளின் உதவியுடன் இயற்கை வழிப் பாதையிலான பிரசவத்துக்கு மருத்துவர் முயற்சிப்பார். அதுவும் முடியாமல் போகும்போது மட்டுமே, அவசரகால சிசேரியன் அறுவைசிகிச்சையை பரிசீலிப்பார்கள்.

சுகப்பிரசவம்: சாதக பாதகங்கள்

சுகப்பிரசவமோ, சிசேரியனோ.. இரண்டிலுமே தாய் - சேய் இருவருக்குமே சில சாதக பாதகங்கள் இருக்கின்றன என்பதே உண்மை. 

இயற்கையான பிரசவம் அல்லது ஆயுத பேறு ஆகிய இரண்டிலும், பிரசவித்த தாய் உடனடியாக எழுந்து நடக்கவும், உணவை உட்கொள்ளவும், குழந்தைக்கு உடனடி அரவணைப்பையும் தாய்ப்பாலையும் வழங்க முடியும். மேலும் பிறப்புறுப்பு பாதை வழியாக தன்னை நெருக்கிக்கொண்டு வெளிவரும் குழந்தைக்கு, TTN எனும் தற்காலிக நுரையீரல் நீர்த்தேக்கம் குறைவாகவே காணப்படும். இதெல்லாம் சுகப்பிரசவத்தின் சாதகங்கள் எனலாம்.

தாயின் உடலிலும் மனதிலும் ஏற்படும் பெரும் சோர்வு, மன அழுத்தம், அத்துடன் பிறப்புறுப்பில் காயங்கள் (traumatic PPH) மற்றும் அதீத இரத்தப்போக்கு ஏற்படுதல் போன்ற பாதகங்கள் ஏற்படவும் இதில் வாய்ப்புள்ளது. மேலும் பிரசவத்தின்போது ஏற்படும் மூத்திரப்பை அல்லது ஆசனவாய் பகுதி காயம் மற்றும் இதர பாதிப்புகளால் சிறுநீர் அடக்க முடியாமை, மலம் அடங்காமை, தன்னிச்சையான சிறுநீர்க் கசிவு, பிறப்புறுப்பு பாதைக்கும் சிறுநீர்ப் பாதைக்கும் இடையேயான ஃபிஸ்துலா (vesico vaginal fistula), கருப்பை கீழ் இறங்குதல் (uterine prolapse) ஆகியனவும், பிரசவப்பாதை தளர்வால் பின்னாளில் ஏற்படும் தாம்பத்திய உறவில் அதிருப்தி போன்றவையும் நிகழக் கூடும்.

சிசேரியன்: சாதக பாதகங்கள்

இந்த சிறுநீர்ப்பை மற்றும் ஆசனவாய் பாதிப்புகள், பிரசவ வலி ஏற்படுத்தும் சோர்வு போன்றவை சிசேரியனில் இருக்காது.

ஆனால் அறுவை சிகிச்சையில் கொடுக்கப்படும்  மயக்க மருந்தின் பக்கவிளைவுகளில் தொடங்கி, இரத்தப்போக்கு, வலி, அதிக நாட்கள் மருத்துவமனை அனுமதி, தாய்ப்பால் அளிப்பதில் தாமதம், ஒருசிலரில் சிறுநீர்த்தொற்று அல்லது காயங்களில் நோய்த்தொற்று என பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் அடுத்த முறை கருத்தரிக்கும்போது நஞ்சுக்கொடி கீழிறங்குதல் அல்லது தையல் நெகிழ்தல் போன்ற பாதிப்புகளும், மற்றுமோர் அறுவை சிகிச்சைக்கான தேவையும்கூட ஏற்படக்கூடும்.

ஆனபோதும் சிக்கலான தருணங்களில், தாய் - சேய் என இரு உயிர்களின் பாதுகாப்புக்காகவும் சிசேரியனை தவிர்க்க முடியாது போகலாம். மேற்கூறிய மருத்துவக் காரணங்கள் தவிர்த்து இதர காரணங்களும் இருக்கலாம். அவற்றில் தாமத திருமணம், குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட்டு 35 வயதுக்குப் பிறகான குழந்தைப்பேறு ஆகியவை முக்கியமானவை. இதன் காரணமாக தாய்க்கான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைவு போன்ற வாழ்க்கை முறைப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரும். தவிர கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம், மற்றும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் பிரசவத்துக்கு நேரம் குறித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக காரணங்களாலும் சிசேரியன்கள் அதிகரிக்க வாய்ப்பாகின்றன.   

சுகப்பிரசவம் எனப்படுவது..

இப்படி ஏராள காரணங்களை நாம் அடுக்கினாலும், பிரசவம் எனும் க்ளைமாக்ஸ் சுபமாகவும், சுகமாகவும் முடிய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது. அதன்பொருட்டு நார்மல் டெலிவரியா, சிசேரியனா எது சிறந்தது என்ற கேள்வியும் எழும். இதற்கு, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்பதே பொருத்தமான பதிலாக இருக்கும். மேலும், அது இயற்கை வழி பிரசவமோ அல்லது அறுவை சிகிச்சை பிரசவமோ, தாயும் சேயும் நலமாக இருப்பதே சுகப்பிரசவம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது..!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in