ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள்? - 3

பார்த்திபனின் பரிதாபக் கதை
2014 மக்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் பார்த்திபன். அருகில் அன்றைய மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
2014 மக்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் பார்த்திபன். அருகில் அன்றைய மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தவர்கள் ஒரு காட்சியைக் கண்டிருக்கலாம். வீட்டு வாசலில் கட்சிக்காரர்களைப் போலவே, சாமியார்களும் அதிக எண்ணிக்கையில் நிற்பார்கள். ஞான உபதேசம் செய்வதற்கோ, சொந்தக் காரியம் சாதிப்பதற்கோ அல்ல, நன்கொடை வாங்குவதற்காக. எந்த ஊரிலிருந்து யார் காவி வேட்டி கட்டி வந்தாலும், ஓபிஎஸ் வீட்டில் கவனிப்பு உண்டு. இளைய மகன் பிரதீப்புக்கு ஆன்மிகச் செம்மல் பட்டம் கொடுத்ததே இந்த மாதிரி கை நீட்டுகிற காவி வேட்டி குரூப் தான். ஆட்சி போன பிறகு சாமியார்களுக்கான பேட்டாவைக் குறைத்துவிட்டார் ஓபிஎஸ். ஆக, கட்சிக்காரர்களைப் போலவே சாமியார்களின் கூட்டமும் குறைந்துவிட்டது.

என்ன இது, கட்டுரை திசை மாறுகிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். விஷயத்துக்கு வருகிறேன். ஓபிஸ் கூடவே இருந்த ஒருவர் இப்போது அரைச் சாமியார் ஆகிவிட்டார். பெயர் ரா.பார்த்திபன். கேள்விப்பட்ட பெயர் மாதிரி இருக்கிறதா? தேனி முன்னாள் எம்.பி பார்த்திபன்.

ரா.பார்த்திபன்
ரா.பார்த்திபன்

எம்பி நம்பி ஏமாந்த கதை

தேனி மாவட்டம், குச்சனூர் அருகே உள்ள கூழையனூரைச் சேர்ந்தவர்தான் இந்த பார்த்திபன். விவசாயக் குடும்பம். அந்த ஊர் ஊராட்சித் தலைவராகவும், போடி ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த இவருக்கு, 2006 தேர்தலில் போடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. வெறும் 900 ஓட்டில் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், கட்சி வேலைகளில் சுறுசுறுப்பு காட்டினார் பார்த்திபன். அதற்காகவே, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதி வேட்பாளராக்கினார் ஜெயலலிதா.

அது ஓபிஎஸ்ஸுக்குப் பிடிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில், மாவட்டச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கும், ஓ.பி.எஸ்ஸுக்கும் இடையே கோஷ்டி தகராறு இருந்தது. பார்த்திபனோ, தங்க தமிழ்ச்செல்வனின் உறவினர். இருந்தாலும் அம்மாவுக்குப் பயந்து, பணத்தைத் தண்ணீராக இறைத்து பார்த்திபனை வெற்றிபெற வைத்தார் பன்னீர்செல்வம். வென்ற பிறகு, மாவட்டத்தில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் பார்த்துக்கொண்டார் பன்னீர். இருந்தாலும் நமக்காகக் காசு செலவழித்தவர் என்ற விசுவாசத்துடன் அவரையே சுற்றிவந்தார் பார்த்திபன்.

டி.டி.வி.தினகரன் கோஷ்டியினர் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, பிரமலைக் கள்ளர் சமூகத்தினரில் பெரும்பாலானோர் அமமுகவையே ஆதரித்தார்கள். மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனும் தினகரன் பக்கம் போனார். தன்னுடைய சாதிசனம் எல்லாமே அமமுகவைத்தான் ஆதரிக்கிறது என்று தெரிந்தும், ஓபிஎஸ் பக்கம் உறுதியாக நின்றார் பார்த்திபன். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, 10 எம்பிக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தார்களே, அவர்களில் ஒருவர் பார்த்திபன்.

ஓபிஎஸ் உடன் பார்த்திபன்
ஓபிஎஸ் உடன் பார்த்திபன்

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்புக்குப் பிறகு, பார்த்திபன் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் என்ற முத்திரை அழுத்தமாக விழுந்தது. அண்ணா தொழிற்சங்க மாவட்டத் துணைச் செயலாளராக இருந்த அவருக்கு அதற்கு மேல் எந்தப் பதவியும் வரவில்லை. ஓபிஎஸ் நினைத்திருந்தால், தங்க தமிழ்ச்செல்வன் இடத்துக்கு இவரை கொண்டுவந்து மாவட்டச் செயலாளராக்கியிருக்கலாம்; செய்யவில்லை. குறைந்தபட்சம் அண்ணா தொழிற்சங்க மாநில நிர்வாகியாகவாவது ஆக்கியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. தனக்கு ஆதரவாக வந்ததுடன், டெல்லி தேர்தல் ஆணையத்தில் போய் ஓபிஎஸ் அணிதான் உண்மையான அதிமுக என்று மனுகொடுத்த 10 எம்பிக்களுக்கு, 2019 மக்களவைத் தேர்தலில் திரும்பவும் வாய்ப்பு வாங்கித்தருவார் ஓபிஎஸ் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 27 எம்பிக்களில், தம்பிதுரை, டாக்டர் வேணுகோபால், டாக்டர் ஜெயவர்தன், மகேந்திரன், மரகதம் குமரவேல், செஞ்சி சேவல் ஏழுமலை ஆகிய 6 பேருக்கு மீண்டும் சீட் கொடுத்தார்கள். ஆனால், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சுந்தரம், அசோக்குமார், சத்தியபாமா, வனரோஜா, கோபாலகிருஷ்ணன், செங்குட்டுவன், மருதராஜா, ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி, பார்த்திபன் உள்ளிட்ட 10 பேரில் ஒருவருக்குக்கூட மறுவாய்ப்பு வழங்கப்படவில்லை.

மகனை எம்பி ஆக்குவதற்காக, பார்த்திபனின் விருப்ப மனுவை நிராகரித்தார் ஓபிஎஸ். சரி, சட்டப்பேரவை இடைத்தேர்தலிலாவது வாய்ப்பு கொடுப்பார் என்று ஒரு பேச்சு உலவியது. நடக்கவில்லை. 2021 தேர்தலில், போடி தொகுதியை மண்ணின் மைந்தனும், தன்னுடைய தீவிர ஆதரவாளருமான பார்த்திபனுக்குக் கொடுத்துவிட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைநகர் சென்னையில் தேர்தலைச் சந்திப்பார் ஓபிஎஸ் என்று பத்திரிகைகள் எழுதின. அதுவும் நடக்கவில்லை. மனிதர் சளைக்காமல் உள்ளாட்சித் தேர்தலிலும் விருப்ப மனு கொடுத்தார் - கவுன்சிலராகி யூனியன் சேர்மனாகவோ, மாவட்ட ஊராட்சித் தலைவராகவோ மாறிவிடலாம் என்ற எண்ணத்தில். அதற்கும் ஆப்பு வைத்தார் ஓபிஎஸ்.

பார்த்திபன்
பார்த்திபன்

நாம் தமிழர் சீமான் மாதிரி கனமான மீசை வைத்திருப்பதுதான் பார்த்திபனின் அடையாளம். எம்பியாக இருந்தபோதே, மீசையை எடுத்து சாந்தமான தோற்றத்துக்கு அவர் மாறினார். இப்போது காவி வேட்டி கட்டி, சாமியார் போலவே வலம் வருகிறார். தாமரை இலை மேல் நீர்போல், ஓபிஎஸ்சுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறார் அவர். இந்தக் கட்டுரைக்காக அவரைத் தொடர்புகொண்டு, "இப்போதும் ஓபிஎஸ் அணியில்தான் இருக்கிறீர்களா?" என்று கேட்டோம். "எந்த அணியிலும் இல்லை. நான் அதிமுகவில் இருக்கிறேன். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்தான் இணைந்துவிட்டனவே?" என்று திருப்பிக்கேட்டார் அவர்.

"ஓபிஎஸ் கூட இருப்பதாகச் சொல்கிறார்களே?" என்று கேள்வியை மாற்றிக்கேட்டபோது, "கட்சிக்கு அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், தேனி மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் மாதிரி அவர்தானே இருக்கிறார். கட்சி செலவை எல்லாம் அவர்தானே பார்த்துக்கொள்கிறார். நாங்களும் அவருடன் இருந்துதானே ஆக வேண்டும்" என்றார்.

பார்த்திபன் மட்டுமல்ல, உள்ளூரிலேயே இன்னும் நிறைய பேர் மனப்புழுக்கத்துடன் இருக்கிறார்கள். அதில் பன்னீர்செல்வத்தைவிட சீனியர்களும் உண்டு. அவர் மகன் வயதையொத்த இளைஞர்களும் உண்டு. வரும் வாரங்களில் பார்க்கலாம்.

இன்னும் இருக்கு...

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

2014 மக்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் பார்த்திபன். அருகில் அன்றைய மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள் - 2

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in