பிரசவ வலியும் புரிதல்களும்

அவள் நம்பிக்கைகள்-48
பிரசவ வலியும் புரிதல்களும்

முதன்முதலாகக் கருத்தரித்த பெண்கள் அனைவருக்குமே 'பிரசவம்’,  ‘பிரசவ வலி’ என்பவை உண்மையில் அச்சத்தையும் கலக்கத்தையும் அளிக்கக்கூடியவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் எதிர்பார்க்கப்படும் பிரசவத் தேதி (Expected Date of Delivery-EDD) நெருங்கி வரும்போது, இவர்களின் பரபரப்பும், படபடப்பும் தினசரி இன்னும் அதிகம்தான் ஆகுமே தவிர, குறையவே குறையாது. 

போதாதற்கு சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் வரும் பிரசவ வலிக் காட்சிகளூம், அறுவை அரங்கிலிருந்து வெளியே வரும் பெண் மருத்துவர், “ரெண்டு உயிர்ல ஒன்னை மட்டுந்தான் காப்பாத்த முடிஞ்சது" என்று, உறவினர்களிடம் சோகமாகக் கூறும் அபத்தக் காட்சிகளும் இவர்கள் பீதியை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.

உண்மையிலேயே அவ்வளவு கொடூரமானதா இந்தப் பிரசவ வலி? இதைத் தெரிந்துகொள்ள, பிரசவ வலி எப்படி ஏற்படுகிறது என்பதை கர்ப்பிணிகள் தெரிந்துகொண்டால், இதனை எதிர்கொள்வதும் எளிதாகுமல்லவா..?

தாயின் கருவறைக்குள் வளரும் கருவை கர்ப்பகாலம் முழுவதும் எப்படி கர்ப்பகால ஹார்மோன்களான ஹெச்.சி.ஜி, ப்ரொஜெஸ்டிரான்கள் மற்றும் ஈஸ்ட்ரோஜன்கள் காக்கின்றனவோ, அதேபோல பிரசவ காலம் தொடங்கும்போது சுரக்கும் ஹார்மோனான ஆக்சிடோசின் தான், பிரசவ வலியைத் தீர்மானிக்கிறது. மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் இந்த ஹார்மோன் பொதுவாக நட்பு, நம்பிக்கை, அன்பு போன்ற நேர்மறை உணர்வுகளுக்கானது என்றாலும், பிரசவ காலத்தில் 200 மடங்குவரை அதிகம் சுரந்து, பிரசவ வலியைத் தூண்டுவதுடன் குழந்தை பிறக்கவும், பின்னர் பால் சுரக்கவும் இது வழிவகுக்கிறது.  

ஒன்பதாவது மாதத்தில், முற்றிலும் வளர்ந்த குழந்தை, தன்னைப் பிரசவத்திற்குத் தயாராக்கிக்கொள்ள முயலும் முதல் கட்டத்தில் அதன் தலை, கீழே இறங்கத் தொடங்குகிறது. Lightening என்று அழைக்கப்படும் இந்தத் தலை இறங்குதல், கர்ப்பிணியின் வயிற்று பாரத்தை ஆரம்பத்தில் சற்றே குறைக்கிறது என்றாலும், தொடர்ந்து நகரும் குழந்தையின் தலையின் அழுத்தம் கருப்பைவாயின் மீது அதிகரிக்கும்போது fetal ejection reflex எனும் குழந்தையை வெளியேற்றும் வினை நிகழத் தொடங்குகிறது.

இந்த ஃபெர்குஸன் வினையை (Ferguson reflex) கிரகிக்கும் தாயின் மூளையானது இப்போது ஆக்சிடோனின் ஹார்மோனை அதிகம் சுரக்க, அது கருப்பையில் இருக்கும் ஏற்பிகளுடன் இணைந்து அதுவரை இறுக்கமாக இருந்த கர்ப்பவாசலை மென்மையாக்கி விரியத் தயார் செய்கிறது. கூடவே கருப்பையைச் சுருக்கி, கர்ப்ப குழந்தையை வெளியே தள்ளும் வேலைக்கு, தாயின் உடலைத் தயாராக்குகிறது. இந்தச் சுருங்குதல் மற்றும் விரிதலுக்கான தகவல்களை நரம்புகள் தமது இணைப்புகள் (visceral & autonomic nerves) வழியாக, கருப்பையிலிருந்து மூளைக்கும் தண்டுவடத்திற்கும்  கொண்டுசெல்லும்போதுதான் அந்தத் தாய் பிரசவ வலியை உணரத் தொடங்குகிறாள். 

உண்மையில் ஒரு குழந்தை பிறப்பது மட்டுமல்ல… அதன்பிறகும் நடக்கும் நிகழ்வுகளும் சேர்ந்ததுதான் பிரசவம் என்று கூறும் மகப்பேறு மருத்துவர்கள், பொதுவாக இந்தப் பிரசவ காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். பிரசவத்தின்போது தாயின் கருப்பைவாய் மென்மையடைந்து, படிப்படியாக 10 சென்டிமீட்டர் அளவுக்கு முழுமையாக விரிவடைந்து (Effacement and complete cervical dilatation), குழந்தையைப் பிரசவிக்கத் தயாராவது பிரசவத்தின் முதல்நிலை. முற்றிலும் விரிந்த இந்தக் கருப்பைவாய் வழியாகவும் பிறப்புறுப்புப் பாதை வழியாகவும் குழந்தை வெளிவந்து தனது முதல் அழுகையுடன் உலகைக் காண்பது பிரசவத்தின் இரண்டாம் நிலை என்றும், குழந்தை பிறந்தபின் தொப்புள்கொடி இணைப்பான நஞ்சுக்கொடியும் வெளியேவந்து, கருப்பை நன்கு சுருங்கி பழைய நிலையை (contraction & retraction) அடைவது பிரசவத்தின் மூன்றாம் நிலை என்றும் ஒரு பிரசவம் முழுமையடைவது இவை மூன்று நிலைகளும் சேர்ந்ததுதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் இந்தக் கருப்பை சுருங்குதலும், அதன் வாய் நெகிழுதலும், வலி உணர்தலும், குழந்தை பிறத்தலும் ஏதோ தனித்தனியாக நிகழ்வது போல தோன்றினாலும் அது தாயின் மூளையும் உடலும் ஒன்றுசேர்ந்து திட்டமிட்டு ஒருங்கிணைந்து செய்யும் அற்புத இயற்கை நிகழ்வாகத்தான் உள்ளது.

நமது புரிதலுக்காக இப்படி பிரசவத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டாலும், அனைவரும் அச்சம் கொள்ளும் பிரசவ வலி என்பது முதல் நிலையில் தொடங்கி  இந்த மூன்றாவது நிலை வரை நீடிக்கும் என்பதுதான் உண்மை. அதேபோல பிரசவ வலி  என்று நாம் பொதுவாகக் கூறினாலும், ஒவ்வொரு பிரசவமும் வித்தியாசமானதுதான். பிரசவ வலி எவ்வளவு வலிக்கும், எத்தனை நேரம்வரை நீடிக்கும் என்பது, பெண்ணுக்குப் பெண் மாறுபடும் என்பதுடன், ஒரே பெண்ணுக்கே பிரசவ வலி மற்றும் பிரசவ காலம் என்பது முதலாவது பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் மாறுபடும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் பிரசவ வலி முதல் பிரசவத்தின்போது ஏறத்தாழ 12-18 மணிநேரம் வரை நீடிக்கும் என்றால், அதே பெண்ணின் இரண்டு அல்லது மூன்றாவது பிரசவத்திற்கு 6-12 மணிநேரமாக அது குறையவும் செய்யலாம்.

அதேபோல, ஒரு சிலருக்குப் பிரசவ வலி தாங்கிக்கொள்ளும் அளவில் இருப்பதைப் போலவே சிலருக்குத் தாங்க முடியாமலும் போகலாம். இன்று வளர்ந்திருக்கும் அறிவியல் மூலம், வலியில்லாமல் பிரசவிக்கும் (painless labour) முறை என்பது இப்படிப்பட்ட தாய்மார்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரம் என்றே சொல்லலாம். 

பிரசவத் தேதியை நெருங்கிய ஒரு பெண்ணுக்கு, முதுகில் அல்லது வயிற்றில் தொடர்ச்சியான கூடுதல் வலி (3 pains /10 minutes), அதிலும் ஒவ்வொரு முறையும் வலியின் தன்மை சற்றுக் கூடுதலாகவும், கருப்பைவாயிலிருந்து அதிகளவில் சளி (show) அல்லது ரத்தக்கசிவு வெளியேற்றம், கட்டுப்பாடின்றி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வைத் தரும் பனிக்குட நீர் வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், பிரசவ வலியின் அறிகுறிகள்தான் அவை எனப் புரிந்துகொள்ளலாம். அந்தப் பெண் மருத்துவ உதவியை நாடுவதற்கான நேரம் என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்லும் முன், அத்தியாவசியத் தேவைகளான உடைகள், உள்ளாடைகள், நாப்கின்கள், டவல்கள் ஆகியவற்றை எடுத்து வைப்பது போலவே, பரிசோதனை அட்டை மற்றும் பிற பரிசோதனை சீட்டுகளையும் எடுத்துச் செல்வது அவசியம். மேலும் வலி ஏற்பட்ட பிறகு எளிதாகச் செரிமானமாகும் உணவு, குறிப்பாக நீர்த்தன்மை நிறைந்தவற்றை மட்டுமே உட்கொள்வது நல்லது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, உள்பரிசோதனையை மேற்கொள்ளும் மருத்துவர், அட்மிஷன் டெஸ்ட் எனும் துடிப்பைக் கண்காணிக்கும் பரிசோதனையை மேற்கொள்வதுடன், பிரசவ வலி மற்றும் இதர விவரங்களைக் குறிக்கும் பார்டோகிராம் சோதனையையும், தேவைப்படும்போது பிரசவத்தைத் தூண்டும் வழிமுறைகளையும் மேற்கொள்வார். அதேபோல கணவர் உடனிருக்க பிரசவத்தையும் மேற்கொள்வார்.

பிரசவ வலியைத் தாண்டி பிரசவம் எனும் க்ளைமாக்ஸ் சுபமாக முடிய மருத்துவரின் சரியான வழிகாட்டுதல் ஒருபுறம் எப்படி அவசியமோ, அதேபோல அதன் வெற்றிக்கு பிரசவிக்கும் அந்தப் பெண்ணின் புரிதலும், ஒத்துழைப்பும், குடும்பத்தினரின் அரவணைப்பும் மறுபுறம் அவசியம் என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது..!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in