நஞ்சுக்கொடி விலகலும் கீழிறங்கலும்!

அவள் நம்பிக்கைகள்-46
நஞ்சுக்கொடி விலகலும் கீழிறங்கலும்!

கருவுற்ற இரண்டாவது மூன்றாவது மாதங்களில் ஒருசிலரில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் எட்டு மாத கர்ப்பத்தில்கூட ரத்தப்போக்கு ஏற்படுமா? அதுவும் சிறுநீர் கழிவது போல் கடகடவென்று நிற்காமல் ஏற்பட்டால்? 

அப்படித்தான் அன்று அதிகாலையில் கீதாவைக் கொண்டுவந்து மருத்துவமனையில் சேர்த்திருந்தார் அவரது கணவர். கீதாவோ பயத்தில் மயக்கமே போட்டிருந்தாள்.

அது ஏன் அப்படி நிகழ்கிறது… அதன் பாதிப்புகள் என்னென்ன… அதற்கான வழிமுறைகள் என்னென்ன? இன்று நாம் தெரிந்துகொள்வோம்!

பொதுவாக கர்ப்பகாலம் முழுவதும் கரு நன்றாக வளர்வதற்கும், முன்கூட்டியே பிரவச வலி ஏற்படாமல் இருக்கவும் முக்கியக் காரணமாக இருப்பது நஞ்சுக்கொடிதான் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். உண்மையில் தாய்க்கும் சேய்க்கும் இடையே ஒரு பாலமாகத் திகழ்ந்து, உணவு, உணர்வு என அனைத்தையும் பரிமாற்றம் செய்யும் இந்த நஞ்சுக்கொடி சில காரணங்களால் அதன் இயல்பான இடத்திலிருந்து விலக நேரிடும்போதும் (Abruptio Placenta), இயல்பாகவே நஞ்சுக்கொடி கீழிறங்கிய நிலையில் (Placenta Previa) இருக்கும்போதும், கீதாவுக்கு ஏற்பட்டது போல எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் Accidental Hemorrhage எனும் திடீர் ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

இதில் முதலில் நாம் பார்த்த நஞ்சுக்கொடி விலகல் எனும் அப்ரப்ஷன் (Abruptio placenta), பிரசவத்துக்கு முன்பாகவோ அல்லது பிரசவத்தின்போதோ ஏற்படுவதாகும். உண்மையில் தாய் சேய் இருவருக்குமான பாலமான நஞ்சுக்கொடி, அதன் இயல்பான நிலையிலிருந்து திடீரென விலகுவதால், முதலில் கருவில் இருக்கும் குழந்தைதான் பாதிக்கப்படும். இந்த விலகலின்போது சாதாரணமாகக் குழந்தைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைபட்டு அதன் ஆக்சிஜன் அளவும் குறைகிறது. இதனால் குழந்தையின் மூச்சுத்திணறலில் தொடங்கி, ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு, இறுதியில் உயிரிழப்பு வரை இது கொண்டுசெல்லும். இந்த விலகல் மற்றும் ரத்தப்போக்கு சற்று நீடித்தால் தாய்க்கும் இன்னும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். வலியுடன் கூடிய ரத்தப்போக்கு, அதீத ரத்தப்போக்கினால் ஏற்படும் மயக்கநிலை (Shock), மூச்சுத்திணறல், சிறுநீரக செயலிழப்பு, ரத்தம் உறைதல் குறைபாடு, தட்டணுக்கள் குறைபாடு என அடுத்தடுத்து ஏற்படும் பாதிப்புகளால் தாய்க்கும் உயிர்ச்சேதம் வரை கொண்டுசெல்லும் என்பது மட்டுமன்றி, இந்நிகழ்வுகள் அனைத்தும் மிக வேகமாக நடந்தேறிவிடுகிறது என்பதால்தான் இந்த நஞ்சுக்கொடி விலகல் நேர்ந்தால் உடனடி அவசர மற்றும் தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, முதிர்ந்த வயது கர்ப்பம், அடுத்தடுத்து தரிக்கும் கர்ப்பங்கள் (multi gravida) போன்ற காரணங்களால், ஒரு விபத்து போல நிகழ்வதாலேயே Accidental Hemorrhage என அழைக்கப்படும் இந்த நஞ்சுக்கொடி விலகல், சமயங்களில் விபத்துகளிலும் கூட (Trauma) ஏற்படக்கூடும். காரணம் எதுவென்றாலும், இந்த நஞ்சுக்கொடி விலகல் தாய்க்கும் சேய்க்கும் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தும் முன்னரே பிரசவத்தை மேற்கொள்வது அதன்பிறகான ஆபத்துகளைத் தவிர்த்துவிடும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில்  தேவைப்படும்போது ரத்தம் செலுத்தவும், சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவும் தாயைத் தயார்படுத்திக் கொள்வது இங்கு அவசியம். ஏழு அல்லது எட்டு மாதங்களில் ஏற்படும் அப்ரப்ஷன் என்றால் குறைமாதக் குழந்தைக்கான சிறப்பு சிகிச்சையும் தேவைப்படலாம் என்பதையும் நாம் கருத்தில் கொள்வது நல்லது.

இரண்டாவதாக கூறப்பட்ட Placenta previa எனும், நஞ்சுக்கொடி கீழிறங்கிய நிலை. பொதுவாகக் கருப்பையின் மேல் பகுதியில்தான் பெரும்பாலும் காணப்படும் நஞ்சுக்கொடி நூற்றில் ஒருவருக்கு அதன் நிலையிலிருந்து இடம் மாறி, கீழே கருப்பைவாய்க்கு அருகே நஞ்சுக்கொடி காணப்படுவதையே Placenta previa எனும் நஞ்சுக்கொடி இறங்கிய நிலை என அழைக்கப்படுகிறது. கருப்பையின் கீழ்ப்பகுதியில் எந்தளவுக்கு இது இருக்கிறது என்பதை ஸ்கேனிங் மூலமாகக் கண்டறியும் மருத்துவர்கள், முற்றாக கீழ்ப்பகுதியில் நஞ்சுக்கொடி அமையும்போது குழந்தை பிறக்கும் கருப்பை வாயிலை அது முழுமையாக மூடிக்கொண்டிருக்கும் என்பதால் பாதி கீழிறங்கிய (partial previa) நிலையைவிட, முற்றிலும் கீழிறங்கிய (complete previa)  நிலை மிகவும் ஆபத்தானது என்று கூறுகின்றனர்.

பிரசவ வலியின்போதோ அல்லது பிற காரணங்களாலோ கருப்பைவாய் விரியும்போது, கீழ் நிலையில் இருக்கும் இந்த previa நஞ்சுக்கொடியிலிருந்து வலியின்றி ரத்தப்போக்கு, எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் கீதாவுக்கு ஏற்பட்டது போல ஏற்படக்கூடும் என்பதுடன், இதன் காரணமாக தாய்க்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மேற்கூறிய சேதாரங்கள் அனைத்தையும் விளைவிக்கக்கூடும் என்பதால் இதிலும் கவனம் மிகமிக அவசியமாகிறது.  

இந்த நஞ்சுக்கொடி கீழிறங்கல் நிலை பொதுவாக முந்தைய சிசேரியன், முந்தைய கருப்பை கட்டி அகற்றல் சிகிச்சை, குறைமாதப்பேறு, இரட்டைக் குழந்தைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காரணம் எதுவென்றாலும், கர்ப்பகாலத்தைப் பொறுத்துத்தான் இங்கே சிகிச்சை முடிவுசெய்யப்படுகிறது. உதாரணமாக, குழந்தையின் வளர்ச்சி 37 வாரங்களை அடைந்திருந்தால் உடனடியாக பிரசவமும், வாரங்கள் குறைவாக இருந்தால் மருத்துவமனை ஓய்வும், தேவைப்படும்போது ரத்தம் செலுத்துதல் மற்றும் சிசேரியன் அறுவை சிகிச்சையும் தேவைக்குத் தகுந்தாற்போல இதில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆக, நஞ்சுக்கொடி விலகல் மற்றும் கீழிறங்கல் ஆகிய இரண்டுமே ஒரு விபத்து போல மட்டுமே நிகழ்கின்றன என்றாலும், இந்த இரண்டிலுமே தாய்சேய் இருவருக்கும் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

ஆனால், இது கர்ப்பிணிப் பெண்களில் மிக அரிதாக நூற்றில் ஓரிருவருக்குத்தான் நிகழ்கிறது என்பதால் தாய்மார்கள் அதிகம் கலவரமடையத் தேவையில்லை.. காரணம் எதுவானாலும் தாமதிக்காமல் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளால், உயிர்ச்சேதங்களைத் தவிர்த்துவிடலாம் என்பதுடன் இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற நிம்மதியுடன்  அவள் நம்பிக்கைகள் தொடர்கிறது!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in