கர்ப்பகால மன அழுத்தம்

அவள் நம்பிக்கைகள்-45
கர்ப்பகால மன அழுத்தம்

கருத்தரித்தல் என்பது எப்போதும் பெண்களுக்கு மகிழ்வான, உற்சாகமான, கொண்டாட்டம் நிறைந்த ஒரு நிகழ்வுதான். ஒரு பெண் தாய்மையடைந்தது தெரிந்ததும் அதைக் கொண்டாடும் கணவரும் குடும்பமும் இதற்கு ஒரு காரணம் என்றால் கருத்தரித்த பெண்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மற்றொரு காரணம்.

ஆனால், இப்படி மகிழ்வான மனநிலைக்குப் பதிலாக கருத்தரிக்கும் பெண்களில் ஐந்தில் ஒரு பெண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார் என்ற கவலைதரும் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ள மனவியல் மருத்துவ சம்மேளனம், அதே குடும்பச்சூழல் மற்றும் ஹார்மோன்கள்தான் அதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதில் முதன்முறையாகக் கருத்தரிக்கும் பெண்களுக்கு, பொதுவாகவே ஒரு புதுவரவை எதிர்கொள்ளும் பதற்றம் இயல்பானது என்றிருக்க, இரண்டாவது அல்லது மூன்றாவது முறை கருத்தரிக்கும் பெண்களுக்கோ முந்தைய கர்ப்பத்தில் நிகழ்ந்த கருச்சிதைவு, குறைபாட்டுடன் பிறந்த குழந்தை மற்றும் குழந்தை இழப்பு போன்ற கசப்பான நிகழ்வுகள், குடும்பச்சூழலுடன் இணைந்து மன அழுத்தத்தை உருவாக்கிவிடுகின்றன.

ஆனால் சிறுமியாக இருப்பவளை பெண்ணாக மாற்ற சுரக்கும் ஹார்மோன்கள், பெண்ணாக இருப்பவளை தாயாக மாற்ற இன்னும் அதிகமாக சுரக்கும்போது, அப்பெண்ணின் மனநிலை உற்சாகமாகத்தானே இருக்க வேண்டும்? மாறாக மன அழுத்தம் எப்படி ஹார்மோன்களால் ஏற்படுகிறது என்று கேட்கிறீர்களா? அதைத் தெரிந்துகொள்வோம் இப்போது...

உண்மையில் குழந்தைக்கும் அன்னைக்கும் இடையே தொடர்புப் பாலமாக செயல்படும் placenta எனும் நஞ்சுக்கொடிதான் கருவைப் பாதுகாக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்டிரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. பொதுவாக இவற்றில் அதிகம் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜன்கள் தாயின் மூளையில் ‘ஹேப்பி’ ஹார்மோன்களைத் தூண்டி உற்சாகமானதொரு மனநிலையைத்தான் உண்டாக்குகிறது என்றாலும், மாறாக ப்ரொஜஸ்டிரோன்கள் அதிகம் சுரக்கும்போது மந்தமான ஒரு நிலையைத்தான் ஏற்படுத்துகிறது.

கர்ப்பகாலத்தின் ஐந்தாவது ஆறாவது மாதங்களுக்கு பின்னர் நஞ்சுக்கொடியிலிருந்து சுரக்கும் ஹெச்.பி.எல். (Human Placental Lactogen) தாயின் மனநிலையை ஊக்கப்படுத்துவதோடு, இந்தச் சமயத்தில் அதிகம் சுரக்கும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களான அட்ரீனலின் மற்றும் கார்டிசோல் அளவுகளைக் கட்டுப்படுத்தி தாயின் மனநிலை மகிழ்ச்சியிலிருந்து மாறாமல் பார்த்துக்கொள்கிறது. ஆனால், தாய்க்கு கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், நஞ்சுக்கொடி விலகல், நஞ்சுக்கொடி அழற்சி போன்ற சில பாதிப்புகளால் எப்போதெல்லாம் நஞ்சுக்கொடியில் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைகிறதோ... அப்போதெல்லாம் இந்த ஹெச்.பி.எல் அளவும் குறைந்து, மன அழுத்தம் கூடுகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.

ஆக, கர்ப்பகாலம் முழுவதும் பெண்ணால் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க முடியாது. இயல்பாகவே மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும் என்பது புரிகிறது. அதுபோலவே , தாயின் ஆரோக்கியமான மனநிலை, வளரும் குழந்தைக்கு நன்மையைத் தரும் என்பதும், மாறாக, ஹார்மோன்களால் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தமானது, தாயின் ஆரோக்கியத்தையும் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதிக்கும் என்பதும் உண்மை.

இந்த கர்ப்பகால மன அழுத்தம், பிறக்கும் குழந்தையின் எடைக்குறைவில் தொடங்கி, பிறந்த பின்பு ஏடிஹெச்டி, ஆட்டிசம், குழந்தைப்பருவ மனநோய், ஸ்கிசோஃப்ரினியா வரையில் கொண்டுசெல்கிறது என்றும், அதேபோல, இதே மன அழுத்தம்  பிரசவத்திற்குப் பின்னான போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ், போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ், பை-போலார் மனநோய் போன்றவற்றை தாய்க்கும் ஏற்படுத்தக்கூடும் என்றும் மனவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்தரித்த ஒரு பெண், தனது கர்ப்பகாலத்தில் எப்போதும் கவலையாகக் காணப்படுதல், வேலைகளில் ஈடுபாடின்றி இருத்தல், தனிமையை விரும்புதல், தூக்கமின்மை, விரக்திநிலை, அதிக கோபம், அதிக மறதி, பதற்றநிலை, உணவை வெறுத்தல் அல்லது அளவுக்கதிகமாக உட்கொள்ளுதல், சில சமயம் தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றுடன் இருப்பாள். இவற்றுடன் கூடிய தலைவலி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி அல்லது படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏதும் தென்பட்டாலும், உடனிருப்பவர்கள், அது கர்ப்பகால மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும் என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். கருத்தரிப்புக்கு முன்பே மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த அறிகுறிகள் இன்னும் கூடுதலாகக் காணப்படலாம் என்றும் கூறுகின்றனர். அத்துடன் கர்ப்பகால மன அழுத்தத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பங்கு மருந்துகளைவிட மிகப் பெரியது என்றும் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்டால் பார்த்துக்கொள்ளவும் வீட்டிலேயே சின்னச்சின்ன உபாயங்களை முதலில் மேற்கொள்ளலாம்.

பிடித்த உணவு, பிடித்த உடை, பிடித்த புத்தகம், பிடித்த சினிமா, பிடித்த பாடல்கள் என பிடித்தவற்றையெல்லாம் மேற்கொள்ளும்போது கர்ப்பிணியின் மனநிலையும் நிச்சயம் மாறும் என்பதால், இவற்றிற்கு குடும்பத்தினர் உடனிருப்பது உதவி தரும். அப்பெண்ணின் தனிமையைப் போக்கும் அனைத்து வழிமுறைகளையும், அதேசமயம் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் வழிமுறைகளையும் வீட்டினர் கையாளுதல் இங்கு முக்கியம்.

அத்துடன் மன அமைதிக்காக தியானம் மேற்கொள்ளச் செய்வதும், எளிய உடற்பயிற்சிகள் அல்லது யோகா, அரோமா தெரபி, மசாஜ் போன்றவற்றைப் பரிந்துரைப்பதும் உண்மையில் ஹேப்பி ஹார்மோன்களைத் தூண்டி, போதிய தூக்கத்தையும் தருவித்து மன அழுத்தத்தை நன்கு குறைக்க உதவுகிறது.

இவையனைத்தும் பயனளிக்காதபோது, உளவியல் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்கவும் கூடாது.. உண்மையில் வெகு சில பெண்களுக்கு மட்டுமே மனவியல் மருத்துவரின் ஆலோசனையும், அதற்கேற்ப மருந்துகளும் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

ஆனால் இந்த மருந்துகள் குழந்தையைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. பொதுவாக கர்ப்பகாலத்தில் பரிந்துரைக்கப்படும் உளவியல் மருந்துகள், வளரும் குழந்தைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதால் அவைகுறித்த கவலை வேண்டாம் என்பதுடன் மருத்துவர் கூறும்வரை, அவற்றைத் தாமாகவே நிறுத்தக்கூடாது என்பதும் கவனிக்கத்தக்கது. இதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் யூதப் பெண்கள் தங்கள் கைகளில் எப்போதும் கணக்குப் புதிர்களை விடுவிக்கும் புத்தகத்தை வைத்திருப்பதும், உலகெங்கும் கர்ப்பிணிகள் ஸ்வெட்டர் பின்னுவதும், நம்மிடையே வளைகாப்பு வைபவம் நடத்தி கர்ப்பிணியை அழகுபடுத்திப் பார்ப்பதும், மசக்கை காலத்தில் மனைவிக்குப் பிடித்ததை எல்லாம் கணவன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதும்...

என அனைத்துமே இந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சிகள் தான் என்பது இப்போது நமக்குப் புரிகிறதல்லவா?

ஆக... கருவுற்ற பெண்களின் உடலின் ஆரோக்கியத்திற்கு சிறிதும் குறைவல்ல உள்ளத்தின் ஆரோக்கியம் என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in