சிக்கலாகுமா இந்த மலச்சிக்கல்?

அவள் நம்பிக்கைகள்-43
சிக்கலாகுமா இந்த மலச்சிக்கல்?

வாந்தி மற்றும் மசக்கைக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் கருத்தரித்த பெண்களிடையே காணப்படுவதுதான் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் (மூல நோய்) பிரச்சினைகள். கூச்சம் காரணமாக இவை அதிகம் பேசப்படுவதில்லை என்பதும் கவனிக்கத்தக்க நிதர்சனம்!

கர்ப்பமுறும் பெண்களில் கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவீதப் பெண்களுக்கு ஏற்படும் இந்த மலச்சிக்கலுக்கு காரணம் என்ன, அதனால் வரும் பாதிப்புகள் என்ன, மலச்சிக்கலுக்கான மலமிளக்கி மருந்துகளை உட்கொண்டால் அது கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்குமா அல்லது வேறு தீர்வுகள் எதுவும் உண்டா, பைல்ஸ் என்றால் அறுவை சிகிச்சை வரை செல்லுமா என்பன போன்ற நம் பல கேள்விகளுக்கான விடைகளைத் தெரிய, இன்றைய 'அவள் நம்பிக்கைக’ளுடன் பயணிப்போம் வாருங்கள்!

‘வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட...’ எனும் வாக்கு நமது தமிழ் மருத்துவத்தில் வழக்கில் உள்ளது. ஆக, கரு வளரும்போது, பெரிதாகும் கர்ப்பப்பையின் அழுத்தம் காரணமாக நான்கில் இருவருக்கு கர்ப்பகால மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் எனப்படும் மூலம் காணப்படுகிறது.

இந்த மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணமாக இருப்பது கர்ப்பகால ஹார்மோன்கள் தான். கர்ப்பகாலம் முழுவதும் அதிகளவில் சுரந்து, பிரசவ காலம் வரை கர்ப்பத்தைக் காக்கும் ‘ப்ரோஜெஸ்டிரோன்’ (Progesterone) ஹார்மோன்கள், கருப்பை மட்டுமன்றி உடல் முழுவதும் உள்ள தசைகளைத் தளர்த்துவது போலவே உணவுப்பாதை தசைகளையும் தளர்த்துகிறது. இதனால், கர்ப்பகாலத்தில் குடல் அசைவுகள் குறைந்து, செரிமானமும் குறைவதால் மலச்சிக்கல் எளிதாக ஏற்படுகிறது. 

இத்துடன் கர்ப்பகால வாந்தியால் உடல் நீரின் அளவு குறைவதுடன், உண்ணும் உணவின் அளவும் குறைவதால், கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் கருவுற்ற பெண்களுக்கு, மலச்சிக்கல் அதிகம் ஏற்படும் வாய்ப்பாகிவிடுகிறது.

வாந்தி குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பும் நான்கு, ஐந்து, ஆறாவது மாதங்களில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலுச்சேர்க்கவும், இரத்த சோகையைத் தவிர்த்து தாய்சேய் நலத்தைக் காக்கவும் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகள் ஒரு பக்கம் மலச்சிக்கலை அதிகப்படுத்துகின்றன என்றால், தொடர்ந்து வளரும் கருவானது, எட்டாவது ஒன்பதாவது மாதங்களில் பிரசவிக்கத் தயாராகும்போது, குழந்தையின் தலை, மலக்குடலின் மீது தரும் அழுத்தம் காரணமாக மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் ஏற்படுகிறது.

ஆக, காரணங்கள் எதுவென்றாலும் கர்ப்பகாலம் முழுவதும் தாய்க்கு இருக்கும் பல்வேறு தொல்லைகளுடன் மலச்சிக்கலும் தொடர்ந்தே காணப்படுகிறது என்பதுதான் உண்மை.

சரி... இதற்கு மருந்து உண்டா, அதை எப்படி, எப்போது உண்ண வேண்டும் என்று கேட்டால், “வாரத்தில் மூன்று முறை அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே மலம் கழிக்கும் கர்ப்பிணிகளுக்கு அவசியம் மருந்துகள் தேவைப்படுகிறது” என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். முதலில் வீட்டில் பெரியவர்கள் சொல்லும் வாழைத்தண்டு, பழங்கள் உள்ளிட்ட கை வைத்தியங்கள் பயனளிக்காதபோது இதற்கான மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம் என்றுகூறும் மருத்துவர்கள், பரிந்துரைக்கப்படும் இந்த மலமிளக்கும் மருந்துகள் பொதுவாகக் குடலில் மட்டுமே தங்கி செயல்புரிவதால் இவை கர்ப்பகாலத்தில் மிகவும் பாதுகாப்பானவைதான் என்றும் உறுதியளிக்கின்றனர்.

இவற்றுள் நார்ச்சத்தை வழங்கும் மலமிளக்கிகளும் (polycarbophil) மில்க் ஆஃப் மெக்னீசியா மற்றும் லேக்டுலோஸ் (lactulose) ஆகியன கர்ப்பகாலத்தில் ஏற்புடையவை என்றே மருத்துவர்கள் உறுதியளிக்கிறார்கள். ஆனாலும் மருத்துவரின் பரிந்துரையின்றி எந்தவொரு மருந்தையும் கர்ப்பகாலத்தில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். மேலும், தேவைப்பட்டால் எனீமா (enema) கொடுப்பதும் இந்த மலச்சிக்கலில் நிகழ்கிறது.

ஆனால் கர்ப்பகாலத்தில் மட்டுமல்ல... எப்போதுமே மலச்சிக்கலுக்கான அருமருந்து உண்ணும் உணவும் பருகும் நீரும் மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உணவில் குறைந்தபட்சம் 30 கிராம் வரையான நார்ச்சத்தைத் தரும் காய்கறிகள், கனிகள், தானியங்கள், பயறு வகைகள் மற்றும் உலர் பழங்கள் ஆகியனவற்றை உட்கொள்வதும், தினசரி குறைந்தது 3 லிட்டர் வரை தண்ணீரைப் பருகுவதும் மலச்சிக்கலுக்கான முக்கியமான வாழ்க்கை முறைத் தீர்வு என்பதுடன், உணவை வழக்கம்போல மூன்று வேளை வயிறு நிறைய உண்பதைத் தவிர்த்து ஆறு வேளைகளாகக் கொஞ்சம் குறைந்தளவு உணவை உட்கொள்வது செரிமானமின்மையைப் போக்கி, மலச்சிக்கலையும் கர்ப்பகாலத்தில் தவிர்க்க உதவுகிறது. இவற்றுடன், மிதமான நடைப்பயிற்சி, கர்ப்பகால உடற்பயிற்சிகள், குறிப்பாக பெல்விக் தசைகளுக்கான உடற்பயிற்சிகள் (pelvic floor exercises) ஆகியனவும் மலச்சிக்கலைத் தவிர்க்க பெரிதும் உதவுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒருசிலரில் அதிகரிக்கும் மலச்சிக்கல் காரணமாகவும், பெல்விக் ரத்த நாளங்களின் அழுத்தம் காரணமாகவும் ஆசனவாயில் சதை போல வெளிப்பிதுங்கி நிற்கும் 'மூலம்' எனும் பைல்ஸ் கர்ப்பகாலத்தில் ஏற்படுவதும் இயல்பான ஒன்றுதான். வலியுடன் கூடிய பைல்ஸ் பிரச்சினைக்கு, மேல் பூசப்படும் களிம்புகள், நீர் ஒத்தடம் ஆகியவை பலனளிக்கும் என்றாலும், ரத்தத்துடன் கலந்த மலம், கருப்பு நிறத்தில் மலம், வலியுடன் கூடிய மல வெளியேற்றம் ஆகியன தெரிந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை கர்ப்பிணிப் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

மேலும், கர்ப்பகாலம் முடிந்ததும் ஹார்மோன்கள் பழைய நிலைக்குத் திரும்புகையில் இந்தப் பிரச்சினையும் தானாகவே சரியாகிவிடும் என்றாலும், ஒருசிலரில் பிரசவத்திற்குப் பின்னரும் ஆசனவாயின் சதை மட்டும் அப்படியே தங்கிவிடலாம். ஆனால் அதற்குத் தனிசிகிச்சை எதுவும் தேவையில்லை என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் தொடர்ந்து மூலத்தினால் ரத்தப்போக்கு அல்லது அதிகப்படியான வலி ஏற்படும் சமயங்களில், அறுவை சிகிச்சை வரை செல்லலாம் என்பதால் அறிகுறிகளை உதாசீனம் செய்யாமல் உடனே மருத்துவரைச் சந்திப்பது நலம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

ஆக... கர்ப்பகால மலச்சிக்கலால் பெரிய சிக்கல் இல்லை என்பதுடன் அதைத் தீர்க்க சமச்சீரான உணவுகளும், சரியான வாழ்க்கை முறை மட்டுமே போதும் என்ற புரிதலுடன், 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in