பனிக்குட நீர்: மிகினும் குறையினும் நோய்செய்யும்!

அவள் நம்பிக்கைகள்-42
பனிக்குட நீர்: மிகினும் குறையினும் நோய்செய்யும்!

குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் குறைவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறிதும் குறைந்தவையல்ல... பனிக்குட நீர் கூடுதலாகும்போது ஏற்படும் பாதிப்புகள்!

“என்ன டாக்டர் சொல்றீங்க..? இப்பத்தான் பனிக்குட நீர் குறைஞ்சா நல்லதில்லேன்னு, அதை அதிகரிக்க வழியெல்லாம் சொன்னீங்க. அதுக்குள்ள நீர் கூடுதலானாலும் குழந்தைக்கு பாதிப்பு வரும்னு சொல்றீங்க... புரியலையே?!" என்ற உங்கள் கேள்வி நியாயமானதுதான். ஆனால் இரண்டு லிட்டருக்கும் அதிகமான அளவில் காணப்படும் Polyhydramnios என்ற இந்த அதிகப்படியான பனிக்குட நீரும் தாய்-சேய் இருவரையுமே பாதிக்கச் செய்கிறது என்பதுதான் உண்மை!

பனிக்குட நீர் என்பது கருவைச் சுமக்கும் தாய், மற்றும் கருவிருக்கும் சேய் ஆகிய இருவரிடமிருந்தும் பெறப்படுகிறது என்பது இப்போது நமக்குத் தெரியும். இதில், எப்போதெல்லாம் தாய்-சேய் இருவரிடமிருந்தும் அதிக நீர் உற்பத்தியாவதால் கருப்பையில் பனிக்குட நீர் அதிகரிக்கும் நிலை உருவாகிறதோ, அப்போதெல்லாம் பாலி-ஹைட்ராம்னியாஸும் ஏற்படுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தைக்குப் பதிலாக இரட்டைக் குழந்தைகள் இருந்தால் இந்த நிலைக்கான வாய்ப்புகள் அதிகமாகலாம். அதேபோல, சர்க்கரை நோயால் அதிக எடையுள்ள குழந்தை, நெகட்டிவ் ரத்த வகை கர்ப்பம், தாய்க்கு ஏற்படும் சில நோய்த்தொற்றுகள், இதய பாதிப்புகள் போன்ற ஏற்படும். குழந்தையின் உணவுக்குழாய் மற்றும் சிறுநீரகக் குறைபாடுகளாலும் பனிக்குட நீரின் அளவு அதிகரிக்கலாம்.

அப்படி பனிக்குட நீர் அதிகரிக்கும்போதெல்லாம், அதைத் தாங்கிப் பிடித்திருக்கும் கருப்பையும் சேர்ந்தே விரிவடைவதால் தாய்க்குத் திடீர் எடை கூடுதல், அதிக பாரம், மூச்சுத்திணறல், படபடப்பு, கால்களில் அதிக வீக்கம், மலச்சிக்கல் போன்ற சிரமங்களும், அத்துடன் குறைமாதப்பேறு, புட்டப்பேறு, பனிக்குட நீர் முன்கூட்டியே உடைதல், நஞ்சுக்கொடி விலகல் (abruptio placenta), தொப்புள்கொடி இறக்கம் (cord prolapse) போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும், இவற்றின் காரணமாக பிரசவம் சிசேரியனாக மாறவும் வாய்ப்புகள் அதிகமாகிறது. 

அதிக நீரின் காரணமாக கருவுற்ற தாய்க்கு ஏற்படும் பாதிப்புகள் ஒருபக்கம் என்றால், கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளும் கூடுதல்தான். குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல், குறைமாதப்பேறு மற்றும் நஞ்சுக்கொடி விலகல் காரணமாக நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் இதய பாதிப்புகள், பனிக்குட நீர் வெளியேற்றத்தால் ஏற்படும் நோய்த்தொற்று ஆகியன மட்டுமன்றி, சமயங்களில் குழந்தை இழப்பு வரை இந்த அதிக நீர் கொண்டுசெல்லும் என்பதால்தான்  பாலி-ஹைட்ராம்னியாஸ் அதிக கவனம் பெறுகிறது.

ஆனால், இது பரவலாக இருக்காது என்பதும், கருத்தரித்த பெண்களில் நூற்றுக்கு ஓரிருவருக்கே இந்தப் பனிக்குட நீர் அதிகரிப்பு ஏற்படுகிறது என்பதும்தான் இதில் நிம்மதி அளிக்கும் செய்தி. ஆனாலும் ஒப்பீட்டளவில் இதுவே அதிகம்தான். மேலும், சமீபகாலமாக அதிகரித்து வரும் செயற்கைக் கருத்தரிப்பு முறைகளும், அதில் பிரசவிக்கும் இரட்டைக் குழந்தைகளும், sedentary lifestyle எனும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உண்டாக்கும் சர்க்கரை நோயும், மிக எளிதாக பாலி-ஹைட்ராம்னியாஸ் எனும் அதிக நீரை உண்டாக்குவதுடன் அதன் பாதிப்புகளையும் தற்போது இரட்டிப்பாக்கியிருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது!

அப்படி எட்டு அல்லது ஒன்பதாவது மாதங்களில் ஸ்கேனிங் மூலமாகக் கண்டறியப்படும் இந்த பாலி-ஹைட்ராம்னியாஸ், ஸ்கேனிங்கில் காணப்படும் நீரின் அளவைக் கொண்டு, மிதமான, மத்திமான அல்லது மிகையான பாலி-ஹைட்ராம்னியாஸ் (mild, moderate, severe) என வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ற சிகிச்சையும் வழங்கப்படுகிறது. மிதமான அளவில் இருந்தால் ஓய்வும் தொடர் கண்காணிப்பும், மிகையான அளவில் இருந்தால் மருத்துவமனை அனுமதி மற்றும் சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக இந்தவகை சிகிச்சைகளில் அதிக நீருக்குக் காரணமாக இருக்கும் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்தல், நோய்த்தொற்றுக்கான சிகிச்சை, நெகட்டிவ் ரத்த வகைக்கான சிகிச்சை ஆகியவற்றுடன் தேவைப்படும் சமயங்களில் amnioreduction எனப்படும் ஸ்கேனிங் உதவியுடன் பனிக்குட நீரை ஊசி மூலமாக வெளியே எடுக்கும் சிகிச்சையும், சமயங்களில் முன்கூட்டியே பிரசவமும் பரிந்துரைக்கப்படுகிறது.

பனிக்குட நீர் குறைவாக இருக்கும்போது தண்ணீரை அதிகமாகப் பருகுவது உதவுவது போல, அதிகளவு பனிக்குட நீரில் குறைவாகப் பருகுதல் பயனளிக்குமா எனும் கேள்வி பலரிடம் உண்டு. குறைவாக நீர் பருகுவதால் நிச்சயம் பலன் இல்லை என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.  அதிலும் கருவுற்ற பெண்கள் தேவையான அளவு நீரைப் பருகுவதுடன்,  சமச்சீரான உணவு, மிதமான நடைபயிற்சி, நல்லுறக்கம், ஓய்வு ஆகியன அனைத்தும் பயனளிக்கும் என்று அவர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்..

ஆக...

'மிகினும் குறையினும் நோய்செய்யும்' என்ற வள்ளுவன் வாக்கு வாழ்வில் மட்டுமல்ல... வாழ்வின் தொடக்கமான கருவிலும் பொருந்துகிறது என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது..!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in