அவள் நம்பிக்கைகள்-41: பனிக்குட நீர்க்குறைவு!

அவள் நம்பிக்கைகள்-41: பனிக்குட நீர்க்குறைவு!

"ஸ்கேன்ல தண்ணி அளவு குறைவா இருக்கறதா சொல்றாங்க டாக்டர். இதுவரை நல்லாத்தான் இருந்தது. இப்ப திடீர்னு ஏன் குறைஞ்சதுன்னே தெரியல. தண்ணி நிறைய குடிச்சாலே போதுமா? இல்ல வேற எதுவும் சேர்த்துக்கணுமா?"

- மாலதியின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன், குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்துகொள்வோம்!

கருப்பைக்குள் கரு உருவாகி வளரும்போது அந்தக் கருவின் உணவுத் தேவைகளையும் ஆக்சிஜனையும் நஞ்சுக்கொடியும் தொப்புள்கொடியும் தாயிடமிருந்து எப்படிப் பெற்றுத் தருகிறதோ... அதேபோல, பிரசவகாலம் வரை அந்தக் கரு கருப்பைக்குள் அசைந்து இயங்குவதற்கும், பாதுகாப்பாக வளர்வதற்கும் தேவையான இடத்தையும் சூழலையும் அளிப்பது பனிக்குடப்பை மற்றும் அதன் நீர் (Amniotic sac & fluid) தான்.  

ஆரம்பத்தில் தாயிடமிருந்து பெறப்படும் இந்தப் பனிக்குட நீர், வெறும் தண்ணீர் மற்றும் தாது உப்புகளால் மட்டுமே ஆனது என்றாலும், கருப்பைக்குள் குழந்தை வளர வளர, குழந்தையின் சிறுநீரகங்களிலிருந்து வெளியேறும் சிறுநீர், நுரையீரல் மற்றும் இரைப்பையிலிருந்து வெளியேறும் நீர், தோலில் உருவாகும் வெர்னிக்ஸ் ஆகியன சேர்ந்து, யூரியா, புரதங்கள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த நீராக மாறுகிறது. அதேபோல, ஆரம்ப வாரங்களில் வெறும் 50 மிலி அளவு மட்டுமே காணப்படும் இந்தப் பனிக்குட நீர், ஒன்பது மாதங்களில் கிட்டத்தட்ட 800-1000 மிலி அளவு அதிகமாவதுடன், வளரும் குழந்தையை வெளி அதிர்வுகள் தாக்காமல் ஒரு ‘ஷாக் அப்ஸார்பர்’ போல பாதுகாக்கிறது.

அதுமட்டுமல்ல, இந்தப் பனிக்குட நீர்தான் கருவிலிருக்கும் குழந்தையின் எலும்புகள், தசைகள், நுரையீரல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவதுடன் தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. மேலும் உள்ளே வளரும் குழந்தையின் தட்பவெப்பத்தைச் சீராக்குவதுடன், தொப்புள்கொடி இறுக்கமடையாமலும் பார்த்துக்கொள்கிறது.

ஆக, வளரும் கருவின் ஆரோக்கியத்திற்கே கருவாய்த் திகழும் இந்தப் பனிக்குட நீரானது, சமயங்களில் அதன் அளவு கூடவோ (polyhydramnios) குறையவோ (oligohydramnios) செய்யும்போதும், அதில் நோய்த்தொற்று ஏற்படும்போதும், இல்லையென்றால் நெகட்டிவ் ரத்தம், நஞ்சுக்கொடி விலகுதல், முதிர்ந்த கர்ப்பம், வயிற்றுக்குள்ளேயே குழந்தை மலம் கழித்துவிடுதல் (meconium in liquor) மற்றும் பனிக்குடம் உடைதல் (PROM) போன்றவை நிகழும்போதும். கருவிலிருக்கும் குழந்தையைப் பெரிதும் பாதிக்கிறது என்பதால், இங்கு பனிக்குட நீரைக் கவனிப்பது முக்கியமாகிறது. 

பொதுவாக, பனிக்குட நீர்க் குறைவு என்பது குழந்தையிடம் உள்ள குறைபாடுகள் அல்லது தாயிடம் உள்ள பிரச்சினைகள் என இரு காரணங்களால் ஏற்படக்கூடும் என்றிருக்க, கர்ப்பகாலத்தின் ஐந்தாவது அல்லது ஆறு மாதங்களில் ஏற்படும் நீர்க்குறைவு பெரும்பாலும் குழந்தையின் க்ரோமோசோம் குறைபாடுகள் அல்லது சிறுநீரகங்கள் உருவாகாமை (renal agenesis), சிறுநீர்ப்பாதை, உணவுக்குழாய் உள்ளிட்ட உறுப்புகளின் குறைபாடுகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. சமயங்களில், கருவில் இருப்பது ஆண் குழந்தை என்றால், பியூவி எனும் (Posterior urethral valve) யூரினரி ட்ராக்ட் அடைப்பு காரணமாகவும் பனிக்குட நீர் குறையலாம்.

எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் காணப்படும் பனிக்குட நீர் குறைவு, பொதுவாக கர்ப்பகால ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நோய்த்தொற்றுகள் (TORCH Infection) போன்றவற்றால் ஏற்படுகிறது. இங்கு நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால், அனைத்து உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் குறைந்து, குழந்தையின் சிறுநீரகங்களிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைவதால் பனிக்குட நீர் இங்கு குறைகிறது. இத்தகைய சூழலில் பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் எடையும் பெரும்பாலும் குறைந்தே (IUGR) தான் காணப்படுகிறது..

இவ்வாறு பனிக்குட நீரின் அளவு தொடர்ந்து குறைவாகக் காணப்படும்போது குறைமாதப் பேறு, குழந்தைக்கு நுரையீரல் பாதிப்புகள், எலும்பு மற்றும் தசைகளில் பாதிப்புகள், சமயங்களில் வயிற்றுக்குள்ளேயே நிகழும் குழந்தை இழப்பு ஆகியன ஏற்படலாம் என்பதால் இதில் சிகிச்சைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், பனிக்குட நீர் குறைவாகும்போது ’குழந்தை அசைவு தெரியவில்லை’ என்பதுதான் இதில் முக்கிய அறிகுறியாக உள்ளது. அதாவது இயல்பாகக் குழந்தையைச் சுற்றிலும் சுமார் ஒரு இஞ்ச் அளவில் இருக்கும் நீரானது அதன் அளவில் குறையும்போது குழந்தை கருப்பைக்குள் சுற்றி வராமல் ஒரே இடத்தில் நின்றுவிடுகிறது என்பதால் அசைவுகள் குறைவாக அந்தத் தாயால் உணரப்படுகிறது.

அவ்வாறு அசைவுகள் குறைவாக வரும் கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதனை செய்யும் மகப்பேறு மருத்துவர், தொடர்ந்து ஸ்கேனிங் மற்றும் டாப்ளர் பரிசோதனைகளை மேற்கொண்டு குழந்தையின் துடிப்பையும், வளர்ச்சியையும், நீர் குறைந்ததற்கான காரணத்தையும் கண்டறிகிறார்.

இதற்கான சிகிச்சைகளும் இதன் காரணத்திற்கேற்ப மாறுபடுகிறது. உதாரணமாக, ரத்த ஓட்டம் குறைவாகக் காணப்படும் நிலைகளில் அதை அதிகரிப்பதற்கான சிகிச்சையை வழங்கும் மருத்துவர்கள், குழந்தைக்கு சிறுநீர்ப்பாதை குறைபாடு ஏற்பட்டிருந்தால் பிறந்தவுடன் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கின்றனர். ஆனால் நிலைமை கைமீறிப் போய் சிறுநீரகங்கள் செயலிழப்பு ஏற்படும்போதும் அல்லது சிறுநீரகங்கள் உருவாகாமை இருக்கும்போதும் கருச்சிதைவைப்  பரிந்துரைக்கவும் இங்கு வாய்ப்புள்ளது.

உண்மையில் தேவையான அளவிலான தண்ணீரைக் குடிப்பது தாயின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லதுதான் என்றாலும், பருகும் நீர் நேரடியாகப் பனிக்குட நீரை நிச்சயம் அதிகரிக்காது என்ற உண்மையை மாலதி உள்ளிட்ட அனைத்து கருவுற்ற பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதேசமயம் தொப்புள்கொடியில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் எந்தவொரு வழிமுறையும் பனிக்குட நீரையும் நிச்சயம் அதிகரிக்கும் என்பதால் தேவையான அளவு நீரைப் பருகுவது நிச்சயம் பயனளிக்கும் என்பதும் உண்மை தான்!

ஆகவே மாலதி...

நீங்கள் பயப்படத் தேவையில்லை... பனிக்குட நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சரிசெய்துவிட முடியும் என்பதால் நமது கவனம்தான் இதில் முக்கியம். அத்துடன் 'ஆரோக்கியமான உணவு, தேவைக்கேற்ற நீர் பருகுதல் (ஒரு நாளில் 3 லிட்டருக்கும் அதிகமாக), மிதமான உடற்பயிற்சி மற்றும் நல் உறக்கம் ஆகிய வழிமுறைகள் அனைத்தும் பனிக்குட நீர் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கான வாழ்க்கை முறைகள் என்ற புரிதலுடன்... 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in