கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

அவள் நம்பிக்கைகள் - 39
கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பொதுவாக கர்ப்பகாலத்தில் கருவுற்றிருக்கும் தாய், தனக்கு ஏதாவது பாதிப்பு தெரிந்தாலே பயப்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரே பயப்படும் பாதிப்பு ஒன்றும் இருக்கிறது.. அது தான் பிஐஹெச் (Pregnancy Induced Hypertension) எனும் கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்.

உலகம் முழுவதும் கர்ப்பகாலத்தில் தாய் சேய் இருவரின் இறப்புக்கும், பல்வேறு பாதிப்புகளுக்கும் இன்றளவும் முதல் முக்கியக் காரணமாக இருப்பது இந்த கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்தான். 

எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் திடீரென்று ஏற்படும் ஒரு பாதிப்பு!

கண்மூடித் திறப்பதற்குள், தாய்க்கு கர்ப்பகால வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள்... சேய்க்கோ எடை குறைதலில் தொடங்கி மரணம் வரை இட்டுச்செல்லும் ஒரு நோய்!

பிரசவம் ஒன்றுதான் அதற்குத் தீர்வு!

இப்படியொரு நிலை கர்ப்பகாலத்தில் ஏற்பட்டால் யாருக்கும் பயம் வரத்தானே செய்யும்..?

இப்படிப்பட்ட பிஐஹெச் பற்றியும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் இன்று தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

பொதுவாக, இயல்பான ரத்த அழுத்தம் (normal BP) என்பது, 130/80 என இரட்டை எண்ணில் குறிக்கப்படுவது நமக்குத் தெரியும். மேலும் கீழும் உள்ள இந்த இரட்டை எண்ணானது இதயம் நமது உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்கையில் இதயம் சுருங்கும்போதும், விரியும்போதும் உள்ள சுருங்கு அழுத்தம் மற்றும் விரியும் அழுத்தம் ஆகிய இரண்டும்தான்.

சாதாரணமாக 130/80 என்றிருக்கும் இந்த ரத்த அழுத்தம், கர்ப்பகாலத்தில் ஒரு 10 பாயின்ட் கூடி 130/90 அல்லது 140/90 அளவு இருந்தாலே அது பிஐஹெச் எனும் உயர் ரத்த அழுத்தம் என்றும், அதனை உடனடியாகவும் கவனமாகவும் கையாள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஏனென்றால், இந்த உயர் ரத்த அழுத்தத்தால் ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் தாயின் உடல் உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மட்டுமின்றி, கருப்பையிலிருந்து நஞ்சுக்கொடி வழியாகக் குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் சேர்ந்தே பாதிக்கிறது. அதாவது, இந்த அதிகளவு ரத்த அழுத்தம் தாய்க்கு சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல், மூளை என அனைத்து பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தாயின் தொப்புள்கொடி வழியாக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் அதே பாதிப்பைக் கொடுக்கக்கூடும் என்பதால்தான், கண்மூடித் திறப்பதற்குள் தாய்க்கும் சேய்க்கும் பல்வேறு பாதிப்புகளை இது ஏற்படுத்திவிடுகிறது.

பொதுவாக, கருத்தரித்த ஐந்தாவது மாதத்துக்குப் பிறகு ஏற்படும் இந்த பிஐஹெச் எனும் கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை உறுதியாகச் சொல்ல முடியாதுதான். அதேசமயம், பதின்பருவ கர்ப்பத்திலும், 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பத்திலும், உடற்பருமன், சர்க்கரை நோய், இரட்டைக் குழந்தைகள், மன அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கும், முந்தைய கர்ப்பத்தில் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் இருப்பது மாதாந்திர செக்கப்பின்போதுதான் பலருக்கும் தெரியவருகிறது. அதன் பின்னர் கைகால்கள், முகம் மற்றும் வயிற்றில் வீக்கம், அதீத தலைவலி, சிறுநீர் குறைவாகக் கழிதல், கண் பார்வை மங்கல், திடீரென அதிக எடை கூடுதல், மேல் வயிற்றில் வலி, தொடர் வாந்தி போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அவை ஆபத்தான Eclampsia எனும் கர்ப்பகால வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் என்பதை ஒவ்வொரு கர்ப்பிணியும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

அப்படி உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சிறுநீரில் உப்பு, ரத்தத்தில் உப்பு, ரத்த உறைவு, கல்லீரல் பரிசோதனை, ஸ்கேனிங்கில் குழந்தையின் ஆரோக்கியம் உட்பட அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதில் முக்கியப் பங்கு வகிப்பவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆன்டி- ஹைபர்டென்சிவ்ஸ் மருந்துகளும், ரத்த உறைவு பிரச்சினைக்கான ஆஸ்பிரின் மருந்தும்.

இவற்றுடன் தக்க ஓய்வு, குறைந்த உப்புடன் கூடிய உணவு, முறையான உடற்பயிற்சிகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள் ஆகியனவும் பரிந்துரைக்கப்படுகின்றன.

கர்ப்பத்தின் ஆறு அல்லது ஏழாவது மாதத்தில் ஏற்படும் இந்த உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்துகளும் தொடர் கண்காணிப்பும் அவசியம் என்று கூறும் மருத்துவர்கள், அதுவே எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் கண்டறியப்பட்டால் இதன் தீவிரத்தையும் பின்விளைவுகளையும் கட்டுப்படுத்த பிரசவத்தை முன்கூட்டி மேற்கொள்ளவும் பரிந்துரைக்கின்றனர்.

ஏனெனில், இந்த உயர் ரத்த அழுத்தம் தாய்க்கு மேற்சொல்லப்பட்ட எக்ளாம்ப்சியா (eclampsia) எனும் வலிப்பு நோயையும் ஹெல்ப்ப் (HELLP) எனும் கல்லீரல் மற்றும் ரத்த உறைவில் சிக்கல்களையும் ஏற்படுத்தி, தாய்சேய் உயிர்ச்சேதம் வரை கொண்டுசெல்லலாம்.

ஆக, கர்ப்பகாலத்தின் ஆறாவது ஏழாவது மாதத்தில் மட்டுமல்ல...

எந்த மாதமாக இருந்தாலும், கண்டறியப்பட்டது முதல், தாயின் பிபி-யைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக அவசியம் என்பதும், அதேசமயம் இந்த வழிமுறைகள் பயனளிக்காத சமயங்களில் பிரசவம் மேற்கொள்வது பாதிப்புகளைக் குறைக்க உதவும் என்பதும் புரிகிறது. 

மேலும், இந்த கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் ஒருசிலருக்கு பிரசவத்திற்கு பின்பும் தொடரலாம் என்பதுடன், சிலருக்கு அடுத்த முறை கருத்தரிக்கும்போதும் மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக...

வராமல் இருக்க வழியில்லை என்றாலும் வந்துவிட்டால் தகுந்த சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டால் எந்த மிகை ரத்த அழுத்தத்தையும் கர்ப்பிணியும் மருத்துவரும் ஒன்றாகச் சேர்ந்து எளிதாக வெல்ல முடியும் என்ற புரிதலுடன் அவள் நம்பிக்கைகள் தொடர்கிறது!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in