ஆஸ்துமா மற்றும் அலர்ஜி!

அவள் நம்பிக்கைகள் - 38
ஆஸ்துமா மற்றும் அலர்ஜி!

“கர்ப்பமா இருக்கும்போது சளி-காய்ச்சல் வந்தா என்ன செய்யணும்னு சொன்னீங்க. ஆனா எனக்கு ஆஸ்துமா ப்ராப்ளம் வேற இருக்கே.  நான் என்ன பண்றது? குளிர்காலம் வந்தாலே சளியும் வீசிங்கும் படுத்தி எடுக்கும் என்னை. இப்ப கர்ப்பமா இருக்கறதால இது எதுவும் அதிகமாகுமா? என் குழந்தையையும் பாதிக்குமா? எனக்கு இருக்கறது போல குழந்தைக்கும் வீசிங் வந்துடுமா டாக்டர்?"

- சென்ற வார அவள் நம்பிக்கைகள் பதிவைப் படித்த சுமதியின் கேள்வி இது!

சுமதியின் கர்ப்பகால ஆஸ்துமா பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பற்றி பொதுவாக நாம் அறிந்துகொள்வது அவசியமாகிறது.

ஒரு மனிதன் உயிர்வாழ மிகவும் அடிப்படையானது  சுவாசம். அந்த சுவாசத்தையே கடினமாக்குவதுதான் இந்த ஆஸ்துமா மற்றும் அலர்ஜி. சுவாசப்பாதையில் மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் ஒவ்வாமை அலர்ஜிக் ரைனைடிஸ் என்றால் நுரையீரலுக்குச் செல்லும் மூச்சுக்குழல்களில் ஏற்படும் ஒவ்வாமை ஆஸ்துமா எனப்படுகிறது. இதில் அதிகம் பேசப்படும் ஆஸ்துமா பற்றி தெரிந்துகொள்வோம்.

இயல்பாகவே ஒவ்வாமையும் பரம்பரை மரபணுக்களும்தான் இந்த ஆஸ்துமாவுக்கு முக்கியக் காரணங்கள் என்றாலும், குளிர், மழை, புகை, தூசி, உணவுப்பொருட்கள், மகரந்தம், வாசனை திரவியங்கள், வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள், புகையிலை, மருந்துகள், சுற்றுச்சூழல் மாசு போன்ற இன்னபிற காரணங்களால் இந்த ஒவ்வாமை அதிகமாகும்போது, மூச்சுக்குழல் (Bronchus) தசைகளும் மூச்சின் சிறுகுழல்களும் (Bronchioles) அதிகம் சுருங்கிவிடுகின்றன. அத்துடன் மூச்சுக்குழலின் உள்சவ்வு வீங்கி, நீர்க்கோர்த்து, மூச்சுப்பாதையையும் இந்த ஒவ்வாமை  அதிகமாக அடைக்கத் தொடங்குவதால், மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதிலேயே சிரமம் ஏற்பட்டு மூச்சு விடுவதே சத்தத்துடன் நிகழ்கிறது. இதைத் தான் ‘வீசிங்’ என்கிறோம். இந்த சத்தத்துடன் கூடிய மூச்சுடன் சளி, வறட்டு இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஆகியனவும் சமயங்களில் ஏற்படுவதால் தொல்லைகள் அதிகரிக்கலாம்.

இதில் பொதுவாக 'ஸ்பைரோமெட்ரி'  (Spirometry) என்ற சிறப்புப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இப்பரிசோதனையின் மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மூச்சுக் குழல்களைத் தளர்த்தி நிவாரணம் தரும் இன்ஹேலர்கள், நெபுலைசர்கள் மற்றும் நுரையீரல் குழல்களை விரிவடையச் செய்யும் மருந்துகள் (bronchodilators), ஸ்டீராய்டுகள் என ஆஸ்துமா ஏற்படும்போதெல்லாம் தற்காலிகமாக நிவாரணம் அளிக்கப்படுகிறது. அதாவது ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஏற்பட்டால் முழுமையாக குணமடைய முடியாது என்றாலும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதே உண்மை.

ஆனால் இயல்பாகவே கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களாலும் வளரும் குழந்தையாலும் நுரையீரல்களின் செயல்பாடுகளில் மாறுபாடு இருக்கும் எனும்போது, ஆஸ்துமா நோய் இருந்தால் இன்னும் தொல்லை அதிகமாகுமா என்ற சுமதியின் பயம் புரிகிறதல்லவா?

உண்மையில் ஆஸ்துமா உள்ள பெண்கள் கருத்தரிக்கும்போது, இவர்களில் மூவரில் ஒருவருக்கு (1:3) மட்டுமே பாதிப்புகள் அதிகமாகலாம் என்றுகூறும் நுரையீரல் மருத்துவர்கள், மற்ற இருவருக்கும் நோய் அதிகரிக்காமல் இருக்கலாம், அல்லது தற்காலிக குணமும்கூட அடையலாம் என்பதால் மற்ற இருவரும் பயப்படத் தேவையிருக்காது என்று கூறுகின்றனர்..

ஆனால், பாதிப்புகள் அதிகரிக்கும் இந்த முதல் வகைத் தாய்க்குப் பொதுவாக நான்கு, ஐந்து மற்றும் ஆறு மாதங்களில் வீசிங் மற்றும் மூச்சுத்திணறல் அதிகரிப்பதுடன் ஒருசிலரில் நுரையீரல் தொற்றுகளும் ஒருசிலரில் கர்ப்பகால இரத்த அழுத்தமும் ஏற்படக்கூடும். மேலும் இவர்களின் தொப்புள்கொடி வழியாகச் செல்லும் ஆக்சிஜன் அளவும் குறைவதால், குறைந்த எடை குழந்தை, குறைப்பிரசவம், மற்றும் சிசேரியனுக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் குழந்தைக்குப் பிறவியிலேயே நுரையீரல் பாதிப்புகள் போன்றவையும் ஏற்படலாம் என்பதால் இவர்களுக்கு அதிகக் கவனமும் சற்று தொடர் மருத்துவக் கவனிப்பும் தேவைப்படுகிறது. 

மேலும் இவர்களுக்கு வீசிங், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் ஆரம்பிக்கும்போதே மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்வது நல்லது என்பதுடன், இந்தச் சமயத்தில் அளிக்கப்படும் சிகிச்சையும் மருந்துகளும் பாதுகாப்பானதுதான் என்று மருத்துவர்கள் உறுதிகூறுகிறார்கள். 

நாட்பட்டதாக இருக்கும் ஆஸ்துமாவை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என்றாலும் கர்ப்பகாலத்தில் அதன் பாதிப்புகள் பெரியதாக இல்லாமல் இருக்க கீழ்க்கண்ட சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

- உணவு முறைகளில் அதிக கவனம், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்த்தல்

- இயற்கை உணவுகள், அதிக நீர், முறையான உடற்பயிற்சி மற்றும் சுவாசப் பயிற்சி

- வைட்டமின் டி மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்

- ப்ரூஃபன், ஆஸ்பிரின் உள்ளிட்ட வலி நிவாரணி மருந்துகளைத் தவிர்த்தல்

- மன அழுத்தத்தை தவிர்த்தல்

- அத்துடன் ஃப்ளு தடுப்பூசியை கர்ப்பகாலத்தில் மருத்துவரின் பரிந்துரைப்படி போட்டுக்கொள்தல்

என ஆஸ்துமா அதிகரிக்காமல் இருக்கச்செய்யும் அனைத்து வழிமுறைகளையும் கர்ப்பகாலம் முழுவதும் கடைப்பிடித்தல் அவசியமாகிறது.

அடுத்து, பிறக்கும் குழந்தைக்கும் ஆஸ்துமா வருமா என்ற சுமதியின் முக்கியக் கேள்விக்கு, மரபணுக்கள் வழியாக ஆஸ்துமா கடத்தப்படலாம் என்றாலும் சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பது இங்கு அவசியமாகிறது. மேலும் பிறந்தவுடன் தாய்ப்பால் தருவது, தேவையான இம்யூனோ க்ளோப்லின்களை குழந்தைக்குத் தந்து ஆஸ்துமாவின் பாதிப்புகளை நன்கு குறைக்கிறது.

ஆக...

ஆஸ்துமா அலர்ஜி எனும் நாட்பட்ட நோய் உள்ளவர்களும் கருத்தரிக்கலாம் என்றாலும் சற்றே அதிக கவனத்துடன் இருந்தால் அழகாகக் குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்பதுதான் உண்மை! அந்த நம்பிக்கையுடன் அவள் நம்பிக்கைகள் தொடரும்!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in