ஐந்தாம் மாத ஸ்கேனிங்கும் அடுத்தடுத்த கேள்விகளும்!

ஐந்தாம் மாத ஸ்கேனிங்கும் அடுத்தடுத்த கேள்விகளும்!

அவள் நம்பிக்கைகள் - 36

ஐந்தாம் மாத ஸ்கேனிங் முடிந்தவுடன் ஆலோசனை அறைக்கு வரும் ஒவ்வொரு பெண்ணும் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வியே, “ஸ்கேனிங்ல குழந்தைக்கு எந்தவொரு குறைபாடும் இல்லையே டாக்டர்..?" என்பதாகத்தான் இருக்கும்.

மனிதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வரம் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்? அதுவே அந்த வரம் குழந்தை வரமாக இருந்தால்..? கருவுற்ற நாளிலிருந்தே ஒரு தாயின் கனவு முழுவதும் தனது குழந்தை ஊனமோ, குறைபாடோ இல்லாமல் பிறக்க வேண்டும் என்பதாகத்தானே இருக்கிறது!

ஆனால், அப்படியும் மீறி, சில குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்துவிடுகிறதே... இதைத் தவிர்க்கவே முடியாதா என்றால், அதற்கு ஐந்தாவது மாத ஸ்கேனிங்கை பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

உண்மையிலேயே இந்த ஐந்தாம் மாத ஸ்கேனிங் முழுமையாக உதவுகிறதா இல்லை இதையும் மீறி குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கிறதா? அப்படியிருந்தால் என்ன செய்ய வேண்டும்? அதை ஏன் ஐந்தாவது மாதத்தில் மேற்கொள்ள வேண்டும்?

இது போன்ற கேள்விகளுக்கு விடை காண்போம் வாருங்கள்!

கருமுட்டையுடன் விந்தணு சேர்ந்து வெறும் இருசெல் உயிரியாக உருவாகும் கருவானது, படிப்படியாக வளர்ந்து, கோடானுகோடி செல்களுடன் கூடிய குழந்தையாக உயிராகும்போது, ஏதோ ஓரிடத்தில் அசம்பாவிதம் நிகழ்வதால், நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் குறைபாட்டுடன் பிறந்துவிடுகின்றன. இப்படி நிகழும் குறைபாடுகளின் எண்ணிக்கை மட்டுமே மூவாயிரத்தைத் தாண்டும் எனக் கூறும் மருத்துவ அறிவியல், இக்குறைபாடுகள் உறுப்புகள் சார்ந்தோ அல்லது உருவம் சார்ந்தோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது.

உண்மையில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதற்குத் தனிப்பட்ட காரணங்கள் என்று எதுவுமில்லை என்றாலும், மரபணுக் குறைபாடுகள், க்ரோமோசோம் பிறழ்வுகள், தாயின் தொற்றுநோய்கள் (TORCH infection) ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது ஊட்டச்சத்து மிகைகள், கட்டுக்குள் வைக்காத சர்க்கரை நோய், வலிப்பு நோய், மூட்டுநோய் மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகள், சுற்றுச்சூழலின் நச்சுகள், புகை மற்றும் மதுப்பழக்கங்கள் ஆகியன தனியாகவும் ஒன்றிணைந்தும் குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என்பதுடன், சமயங்களில் காரணமே இல்லாவிட்டாலும்கூட குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம் என்கிறது அறிவியல்.

அதிலும் சில சமயங்களில் பிறந்தவுடனேயே குழந்தைகள் தவறும் அளவுக்குக் குறைபாடுகள் இருக்கலாம் என்றும், உலகளவில் அது 2.5 லட்சம் அளவிற்கு உள்ளது என்றும் வருத்தத்துடன் கூறும் உலக சுகாதார அமைப்பு, இதனை ஓரளவாவது தவிர்க்க முடியுமென்பதால்தான், ஐந்தாவது மாத ஸ்கேனிங்கை கருவுற்ற அனைவருக்குமே பரிந்துரைக்கிறது.

ஆம்... கருத்தரித்தவுடன் Dating scan மூலமாக கரு வளர்வதை உறுதிப்படுத்தி, பின்னர் NT scan மூலமாக க்ரோமோசோம் குறைபாடுகள் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு கர்ப்பிணியும், அந்த மகிழ்வைத் தக்கவைத்துக்கொள்ள டார்கெட் ஸ்கேன் (TIFFA Targeted Scan For Fetal Anomaly) எனப்படும் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் ஐந்தாவது மாத ஸ்கேனிங்கை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் எடுக்க முடியும்’ என்றொரு நிலை ஏற்படுமேயானால், அப்போது 20-22 வாரத்தில் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறியும் இந்த Targeted scan என்ற ஸ்கேனைத்தான் பரிந்துரைப்போம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

என்னதான் இது இவ்வளவு முக்கியமான ஸ்கேன் என்று சொன்னாலும், பெருவாரியான உறுப்புகள் மற்றும் உருவம் சார்ந்த குறைபாடுகளைக் கண்டறிய இந்த ஸ்கேனிங் உதவுகிறது என்றாலும்... இந்த ஸ்கேன் மூலமாக குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், வளர்சிதை மாற்ற வியாதிகள் (Inborn Errors of Metabolism) உள்ளிட்ட பல வியாதிகளைக் கண்டறிய முடியாது என்பதுதான் உண்மை.

ஏன் இதை முன்னரோ அல்லது பின்னரோ மேற்கொள்ளக் கூடாது என்றால்...

இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் ஏற்படும் சில குறைபாடுகளை 18-20 வாரங்களில்தான் கண்டறிய முடியும் என்பதால்தான் என்பதுடன், அப்படிக் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் கருக்கலைப்பு குறித்த சில முக்கிய முடிவுகளைத் தாமதமின்றி எடுப்பதற்கும் இந்த ஐந்தாவது மாத காலகட்டம் உதவுகிறது என்பதால்தான் இருபது வாரங்களில் இந்த ஸ்கேனிங் முக்கியமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

கருவிலிருக்கும் குழந்தையிடம் இந்த ஸ்கேனிங் மூலம் குறைபாடு கண்டறியப்பட்டால், அதை lethal anomalies & nonlethal anomalies என்று பிரிக்கும் மருத்துவ நிபுணர்கள், குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லாத பிளவுபட்ட உதடுகள், வளைந்த கால்கள், இதயக் குறைபாடுகள், தண்டுவட பாதிப்புகள் போன்ற nonlethal anomalies-ல் தகுந்த ஆலோசனைகளையும், பிறந்தவுடன் அதற்கான தனி அறுவை சிகிச்சைகளையும் பரிந்துரைக்கின்றனர். அதேசமயம், பிறந்தபின் குழந்தை நிச்சயமாக உயிர் பிழைக்க முடியாத acrania, anencephaly, thanatophoric dysplasia, renal agenesis உள்ளிட்ட மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் எலும்புகள் சார்ந்த அதீதக் குறைபாடுகள் காணப்படுமேயானால், கருக்கலைப்பு செய்வது உள்ளிட்ட முடிவுகளை எடுக்க பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான், கருக்கலைப்பிற்கான உச்சவரம்பை 24 வாரங்கள் என மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தை சமீபத்தில் (2021) மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. கூடவே, பிரசவம் உள்ளிட்ட சில தீர்க்கமான முடிவு பெற்றோர் வசமே விடப்படுகிறது.

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

என்கிறார் அவ்வையார். குறைகளிலில்லாத குழந்தை வரம் என்பது ஒவ்வொருவருக்குமான கனவு என்றாலும் சிலருக்கு அது வாய்ப்பதில்லை.. ஆனால், ஆரோக்கியமான உணவு, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட மாத்திரைகள், ரூபெல்லா உள்ளிட்ட தடுப்பூசிகள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாடு, புகை மற்றும் மதுவைத் தவிர்த்தல், மரபியல் ஆலோசனைகள், அனைத்திற்கும் மேலாகக் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வு இன்று அனைவருக்கும் தேவைப்படுகிறது என்பதே உண்மையாகும்.

ஆரோக்கியமான குறைகளிலில்லாத குழந்தைப்பேறு வேண்டுமென்றால், ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழ வேண்டும் என்ற புரிதலோடு அவள் நம்பிக்கைகளை நாம் தொடர்வோம்!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in