வயிற்றில் அசைகிறதா வாரிசு?

அவள் நம்பிக்கைகள் - 35
வயிற்றில் அசைகிறதா வாரிசு?

திரைப்படங்களில் இந்தக் காட்சியப் பலமுறை பார்த்திருப்போம். கர்ப்பமுற்றிருக்கும் நாயகி, "ஏங்க குழந்தை உள்ளே உதைக்குதுங்க..." என்று சொல்வதையும், அதைப் பார்த்து நாயகன் மகிழ்வதையும் நிறைய படங்கள் அழகாகப் பதிவுசெய்திருக்கின்றன. அது இருக்கட்டும்! அப்படி உண்மையில் நிகழும்போது ஒருநாளில் எத்தனை முறை குழந்தை உதைக்கிறது என்பதை எண்ணி எழுதி வைக்க வேண்டும் என்பது தெரியுமா உங்களுக்கு?

அது ஏன், எதற்கு என்பதைத் தெரிந்துகொள்ள இருக்கிறோம் இன்று!

‘வயிற்றுக்குள் குழந்தையின் முதல் ஸ்பரிசம் என்றென்றும் இனிக்கும் உணர்வுதான்!’

- இதை ஆமோதிக்காத தாய்மார்களே இல்லை எனலாம். என்னதான் ஒரு பெண் கருத்தரித்தவுடன் ஸ்கேனிங் மூலமாக தன் குழந்தையின் துடிப்பையும் அசைவையும் இப்போதெல்லாம் பார்த்து அறிந்துகொள்ள முடிகிறதென்றாலும், முதன்முதலாக அந்தப் பெண் தனது குழந்தையின் அசைவைத் தானே உணரும்போதுதான், தன் உடலுக்குள் இன்னொரு உயிர் வளரும் உன்னதத்தை முழுமையாக உணருகிறாள். இந்த முதல் அசைவை Quickening என அழைக்கும் மருத்துவர்கள், இந்த ‘குவிக்கெனிங்’ வெறுமனே குழந்தை உயிருடன் இருப்பதை மட்டும் குறிப்பதில்லை என்றும், அதன்மூலம் இன்னும் பல தகவல்களையும் அது சேர்த்தே அறிய முடியும் என்றும் கூறுகின்றனர்.

16-22 வாரங்களில், அதாவது நான்கு அல்லது ஐந்தாவது மாதத்தில்தான் குழந்தையின் முதல் அசைவை ஒரு தாயால் உணர முடிகிறது. இந்த குவிக்கெனிங் என்பது ஆரம்ப நாட்களில் மிக லேசான அசைவாக, வயிற்றுக்குள் ஒரு குமிழ் வெடிப்பது போலவோ அல்லது நான்கைந்து குமிழ்களின் படபடப்பு போல மிக மென்மையாகத்தான் உணரப்படும் என்பதால், பெரும்பாலும் இதை வெறும் குடல் அசைவு என்று தவறவிட்டுவிட்டு, பின்னர் நிகழும் அசைவுகளை உணரும் பெண்களே அதிகம்.

முதன்முறையாகக் கருத்தரிக்கும் பெண்கள் இந்த முதல் அசைவை, தாங்கள் கருத்தரித்த 20 வாரங்களுக்குப் பிறகுதான் உணர வாய்ப்பிருக்கிறது என்றாலும், அதுவே அவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை கருத்தரிக்கும்போது, அவர்களின் வயிற்றுத் தசைகள் இறுக்கமின்றி லேசாக இருப்பதால் முன்கூட்டியே... அதாவது 16-18 வாரங்களிலேயே அசைவுகள் தெரியத் தொடங்கிவிடுகிறது.

ஆறாவது மாதத்திலிருந்து குழந்தையின் அசைவுகளை ஒரு தாயால் நன்றாகவே உணர முடியும். பனிக்குட நீரில் நீந்தியவண்ணம் வளரும் குழந்தையானது நன்கு அசைகிறது என்றால் அதன் வளர்ச்சிக்குப் போதுமான அளவில் ரத்த ஓட்டமும் அதன்மூலம் ஆக்சிஜனும் குளுக்கோஸும் கிடைக்கப்பெறுகிறது என்பது பொதுவான அனுமானம். Quickening என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, ‘உயிருடன்’ என்றுதான் பொருளாகும். என்றாலும் உயிருடன் எனும் நிலையையும், மேற்கூறப்பட்ட ஆக்சிஜன் குளுக்கோஸ் அளவுகளையும் தாண்டி வளரும் குழந்தையின் நரம்பு மண்டலம், தசை மற்றும் எலும்புகள் ஆகியவற்றின் ஆரோக்கிய வளர்ச்சியையும் இந்த அசைவுகள் குறிக்கின்றன என்பதுதான் உண்மை.

ஸ்கேனிங் வசதிகள் இல்லாத ஆரம்ப காலங்களில், இந்த முதல் அசைவைக் கொண்டு நமது முன்னோர்கள் தாயின் பிரசவத் தேதியைக்கூட கிட்டத்தட்ட கணித்திருக்கின்றனர். மேலும், கருவில் அதிகப்படியாக அசையும் குழந்தைகள் பின்னாளில் அதிக அறிவு, மூளை வளர்ச்சி மற்றும் கற்கும் திறன் கூடுதலாகக் காணப்படுகிறது என்று கூறும் சமீபத்திய ஆய்வுகள், இப்படி குழந்தை அதிகம் அசைய வேண்டும் என்றால் அதற்கு கருவுற்றிருக்கும் காலத்தில் தாய் ஓய்ந்திருக்காமல் அவளது அசைவுகளும் அதிகம் இருக்க வேண்டுமென்றும், அதற்கு கர்ப்பகால உடற்பயிற்சிகள் மிகவும் உதவுகின்றன என்றும் கூறுகிறது.

சமயங்களில், “முழு நைட்டும் தூங்கவிடாம வலிக்கற அளவுக்கு உதைச்சுட்டும், பஞ்ச் பண்ணிட்டும் இருக்கான் டாக்டர்..." என்றும் பல கர்ப்பிணிகள் புகார் கூறுவதுண்டு. ஆனால், நாள் முழுவதும் பணிகளில் மூழ்கியிருக்கும் கர்ப்பிணி ஓய்வெடுக்கும் மாலை மற்றும் இரவுப் பொழுதுகளில்தான் பொதுவாக அசைவுகளை அதிகம் உணர்கிறாள் என்று கூறும் மருத்துவர்கள், உண்மையில் கருவறைக்குள் குழந்தை தொடர்ந்து அசைந்துகொண்டேதான் இருக்கும் என்றும், உணவு உட்கொண்ட பிறகு இந்த அசைவுகளை அதிகம் உணரலாம் என்றும் கூறுகின்றனர்.

மேலும், அதிக சுறுசுறுப்புடன் குழந்தை அசையும்போது கருப்பையின் சுவர்களில் உள்ள நரம்புகள் தூண்டப்படுவதால் வலி உண்டாகிறது என்றும் கூறுகின்றனர்.

ஆனால், சிலசமயங்களில் இரவு முழுவதும், இந்த அசைவுகள் இருக்கிறதே.. அப்படியென்றால் வயிற்றுக்குள் குழந்தை ஓய்வெடுக்காதா என்ற நாம் கேட்கலாம். உண்மையில் நம்மைப் போலவே கருவில் வளரும் குழந்தையும் தூங்கி விழிக்கும் என்றாலும், கருவிலிருக்கும் குழந்தையின் தூக்க - விழிப்பு இடைவெளிகள் வெறும் 20-40 நிமிடங்கள் மட்டுமே என்பதால் இப்படித் தோன்றுகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.

பொதுவாக, ஒரு கருவுற்ற தாய்க்கு ஒரு மணிநேரம் வரை குழந்தையின் அசைவு தெரியவில்லை என்றால், குழந்தை தூங்கிக்கொண்டிருக்கலாம் என்று கருதிக்கொள்ளலாம். கவலைப்படத் தேவையில்லை. அதுவே சற்று நீளமானால் எழுந்து சிறிதே நடப்பது, இடதுபுறமாகப் படுப்பது, ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது, குளிர்ந்த ஜூஸ், இளநீர் அல்லது குளுக்கோஸ் போன்ற பானங்களைப் பருகுவது, சமயங்களில் குழந்தையிடம் பேசுவது அல்லது வயிற்றைத் தடவிக்கொடுப்பது போன்ற முறைகளை மேற்கொண்டு குழந்தையை அசைய வைக்கும் வழிமுறைகளை முயன்று பார்க்கலாம். அதற்குப் பின்பும் அசைவின்றி இருந்தாலோ, இரண்டு மணிநேரத்திற்கு மேலாகவும் குழந்தையின் அசைவுகள் முற்றிலுமாகத் தெரியவில்லை என்றாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை பனிக்குட நீரில் தொடர்ந்து நீச்சலடிக்கும் குழந்தை, எட்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது நன்கு வளர்ந்து எடையும் கூடிய பிறகு, கருப்பைக்குள் இடநெருக்கடி காரணமாக கை, கால்களை மட்டுமே அசைக்கும். இதனால், ஐந்து அல்லது ஆறாவது மாதங்களில் குழந்தை அசைவதற்கும், எட்டு மாதத்தில் குழந்தை அசைவதற்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கும். இதனைப் புரிந்துகொள்ளாத கர்ப்பிணிகள், "டாக்டர்... குழந்தை அசைவு அவ்வளவா இல்ல” என்று அச்சத்துடன் மருத்துவமனைக்கு ஓடி வருவார்கள்.

இப்படி வெறுமனே பயப்படுபவர்களுக்கும், உண்மையிலேயே கருப்பைக்குள் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் குறைந்து காணப்படும் நிலைகளான கர்ப்ப கால இரத்த அழுத்தம், IUGR எனப்படும் குறைந்த எடைக் குழந்தை, பனிக்குட நீர் குறைந்த நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கும் பெரிதும் உதவுவதுதான் - நாம் முன்னர் சொன்ன காகித்தில் குறித்து வைக்கப்படும் DFMC (Daily Fetal Movement Count) எனும் 'குழந்தையின் தினசரி அசைவு எண்ணிக்கை'.

DFMC எனப்படும் இந்த தினசரி அசைவு எண்ணிக்கை என்பது பத்து அசைவுகள் தெரிவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்ற Cardiff Count to Ten எனும் கணக்கீடு ஆகும். அதாவது இயல்பாகப் பணிபுரிந்துகொண்டிருக்கும் எட்டு அல்லது ஒன்பது மாத கர்ப்பிணிக்கு, 12 மணிநேரத்தில் குறைந்தது 10 முறையாவது அசைவுகள் தெரிய வேண்டும். இந்தக் கணக்கீடு குழப்பத்துடன் வரும் பெண்களுக்கு மிகவும் உதவுகிறது.

இந்த கார்டிஃப் கவுன்ட் 10 முறையை நாள் முழுவதும் கவனிக்க முடியாதவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக, இன்னும் எளிமையாக, காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவு உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் எவ்வளவு முறை அசைவுகள் தெரிகிறது என்பதைக் குறித்து வைக்கலாமென்றும், இந்த ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும் மூன்றிலிருந்து ஐந்து முறை உணர்ந்தாலே போதுமானது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த எண்ணிக்கைகள் குறைவாகும்போது பயப்படாமல், ஏற்கெனவே சொன்னபடி சிறிதுநேரம் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுத்தோ அல்லது உணவு உட்கொண்ட பிறகோ அசைவுகள் தெரிகிறதா என்பதை கவனித்தால் போதுமானது. ஆனால், அதன்பிறகும் அசைவுகள் குறைவாக இருந்தால்தான் மருத்துவ உதவி அவசியம் தேவைப்படும். சூழ்நிலையைப் பொறுத்து ஸ்கேனிங், NST எனப்படும் பிரத்யேகத் துடிப்பு பரிசோதனை ஆகியவற்றுடன் சிகிச்சையும் வழங்கப்படலாம்.

உண்மையில், இந்த எளிய எண்ணிக்கை முறை உண்மையில் இதுவரை பல்லாயிரக்கணக்கான குழந்தை உயிரிழப்புகளைத் தவிர்த்துள்ளது என்பதால், இயல்பாகவே இதன் முக்கியத்துவத்தை கர்ப்பிணிகள் அறிவது அவசியம்.

அதிலும் high risk pregnancy எனும் அதிக சிக்கல்கள் உள்ள கர்ப்பத்தில் இந்த அசைவு எண்ணிக்கை மிக மிக அவசியம்..

ஆம்...

முதல் அசைவு எனும் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கும் நாளிலிருந்து, குழந்தை பிறக்கும் அந்தப் பிரசவ நாள் வரை... கருவைச் சுமக்கும் அன்னையைக் காட்டிலும் சிறந்ததொரு மதிப்பீட்டாளர் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை.

அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கர்ப்ப காலம் முழுவதும் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க வாழ்த்துகளுடன்... அவள் நம்பிக்கைகள் தொடரும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in