கர்ப்ப காலத்தில் மார்பகப் பராமரிப்பு!

அவள் நம்பிக்கைகள் -34
கர்ப்ப காலத்தில் மார்பகப் பராமரிப்பு!

ஒரு குழந்தை கருவில் வளரும்போதே தாயின் உடலிலும் மாறுதல்கள் நிகழ்கிறது. அப்படி மாறுதல்கள் நிகழ்வதில் தாமதங்கள் ஏற்பட்டால் தாய் தன்னைத் தானே மாற்றிக்கொள்ளவும் செய்கிறாள்.

எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகு பிறந்து, ஒரு ரோஜா மொட்டுப் போல கையில் கிடைக்கும் குழந்தைக்குத் தேவையான ஆடைகள், ஸ்வெட்டர்கள், மெத்தைகள், தொட்டில்கள் என தேடித்தேடி தயார்படுத்தி வைத்துக்கொள்ளும் இந்தக் கர்ப்பிணிகள், தங்களைத் தயார்படுத்திக்கொள்ள தவறவிடும் ஓர் முக்கிய விஷயம் மார்பகப் பராமரிப்பு ஆகும்.

குழந்தை பிறந்தவுடன் பாலூட்டுவதற்கு ஏதுவாக மார்பகங்களைப் பராமரிப்பது ஒவ்வொரு கர்ப்பிணியின் தலையாயக் கடமை என்றே சொல்லலாம். பரிணாம வளர்ச்சியில் பெண்களின் வியர்வை நாளங்களே பாலூட்டும் காரணத்திற்காக மார்பகங்களாக உருமாறியதைப் போலவே, அவள் கருத்தரித்தவுடன் இன்னும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களை இயற்கை அவளது மார்பகங்களில் நிகழ்த்துகிறது.

உண்மையில் கருத்தரித்த பிறகுதான் மார்பகங்களின் வளர்ச்சி முழுமையடைகிறது என்று கூறும் மருத்துவர்கள், இந்த மாற்றங்கள் கருத்தரித்த இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை நிகழ்கின்றன என்றும், முதல் கருத்தரிப்பின்போது இந்த மாற்றங்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்கள்.

இரண்டாம் மாதத்தில் மார்பகங்கள் அளவில் பெரிதாவதுடன், அவற்றுக்குள் செல்லும் அதிக ரத்த ஓட்டத்தின் காரணமாக ரத்த நாளங்கள் வீங்கி மார்பகங்கள் கனமாகவும், முலைக்காம்புகள் அதிக வலியுடனும் உணரப்படுவதுடன், தொடு உணர்வும் அதிகமாகிறது. மேலும் மார்புக் காம்பைச் சுற்றியுள்ள Primary Areola எனும் கருமைநிறப் பகுதியில் கர்ப்பகால ஹார்மோன்களால் நிறமாற்றம் ஏற்பட்டு, அது இன்னும் அதிக கருமை நிறம் அடைகிறது. அதேசமயம் மார்பக சருமத்தில் பெரிதாகும் வியர்வை நாளங்கள் மற்றும் எண்ணெய் சுரப்பிகள் Montgomery's tubercles எனப்படும் சிறு முடிச்சுகளாகத் தோன்றி, மார்பகங்கள் வறண்டு போகாமலிருக்க உதவுகின்றன. ஆனால், இவற்றைத் தாண்டியும், ஒருசிலருக்கு மார்பகத் தோலில் வறட்சியும் வெடிப்பும் தோன்றக்கூடும் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அடுத்து, ஐந்தாவது மாதத்தில் மார்புக் காம்பு மற்றும் ஏரியோலா இன்னும் சற்று பெரிதாவதுடன், மார்பகங்களிலிருந்து கொலோஸ்ட்ரம் (colostrum) எனும் மஞ்சள் நிற சீம்பால் சுரக்கத் தொடங்குகிறது.

இவையனைத்துமே கர்ப்ப காலத்தில் தோன்றும் இயற்கையான மார்பக மாற்றங்கள்தான் என்பதுடன் கர்ப்பம் தரித்த நாளிலிருந்தே பெண்ணின் உடல் தன்னைத் தானே சீரமைத்து, குழந்தை பிறந்தவுடன் பாலூட்டுவதற்கு ஏதுவாக அவளது மார்பகங்களைத் தயார்ப்படுத்துகிறது என்பது நமக்கு விளங்குகிறது.

இந்த மாற்றங்களைப் பற்றி கர்ப்பிணிகள் அறிந்துகொள்வது எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம், முறையான கர்ப்ப கால மார்பகப் பராமரிப்பு பற்றி அறிந்துகொள்வது.

உண்மையில், கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களிலேயே இந்த பராமரிப்பை கர்ப்பிணிகள் தொடங்கிட வேண்டும்.

அதில் முதலாவது, சரியான உள்ளாடைகளைத் தேர்வு செய்வது. கர்ப்பகாலம் முழுவதும் தொடர்ந்து பெரிதாகும் மார்பகங்களுக்கு ஏற்றவாறு உள்ளாடைகளை அணிவது முக்கியம். ஏற்கெனவே இருக்கும் உள்ளாடைகள் இப்போது இறுக்கமாக இருந்தால், அவற்றையே தொடர்ந்து அணிவதால் காம்புகளில் வலியை அதிகமாக்குவதுடன் காயத்தையும் அவை ஏற்படுத்தலாம். ஆகவே மென்மையான பருத்தி உள்ளாடைகளைச் சரியான அளவில் வாங்கி அணிவதுடன், கம்பி பொருத்தப்பட்ட (underwire bra) உள்ளாடைகளையும், வியர்வையைக் கூட்டும் நைலான் அல்லது பாலியெஸ்டர் உள்ளாடைகளையும் முற்றிலும் தவிர்ப்பது அவசியமாகிறது.

அடுத்து மார்பக மசாஜ்...

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது மாஸ்ட்சுரைசிங் க்ரீம் கொண்டு மார்பகங்களையும் காம்புகளையும் சிறிது நேரம் மசாஜ் செய்துகொள்வது மார்பகப் பராமரிப்பில் முக்கியமான ஒன்றாகும். மிதமான அழுத்தத்துடன் தினமும் மசாஜ் செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்திருப்பதுடன், காம்புகளில் வெடிப்பு, அடைப்பு மற்றும் வறண்ட சருமத்தால் உண்டாகும் பிரச்சினைகளும் தடுக்கப்படுகின்றன. அத்துடன் பிரசவத்திற்குப் பின் பால் சுரப்பதற்கும், பால் வெளியேறுவதற்கும் இந்த மசாஜ் பெருமளவு உதவுகிறது.

அடுத்து...

குளிக்கும்போது அதிக சூட்டில் குளிப்பது தோல் வறட்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதால் வெதுவெதுப்பான நீரில் நல்ல மென்மையான சோப்களை உபயோகித்துக் குளிப்பது நல்லது. அத்துடன், டியோடரென்ட், ஸ்ப்ரே, டால்கம் பவுடர்கள் உபயோகத்தைக் குறைப்பது கர்ப்பகால மார்பக அலர்ஜியைத் தடுக்க உதவும்.

இதில், சிலருக்குத் தட்டையான அல்லது உள்ளடங்கிய (flat/ retracted nipples) மார்பகக் காம்புகள் இருந்தால் பிரசவத்திற்குப் பின் பாலூட்டுவதில் பெரும் சிரமங்களை அது உண்டாக்கலாம் என்பதால், கர்ப்ப கால மசாஜ் தவிர மருத்துவரின் ஆலோசனையுடன் சிரிஞ்சு கொண்டு (suction effect of syringes) உள்ளடங்கிய காம்புகளை வெளிக்கொண்டு வருவது தேவைப்படலாம். அத்துடன் மார்பகங்களில் முடி வளர்ச்சி காணப்படுமேயானால் சவரம் செய்துகொள்வதும் பரிந்துரைக்கப்படுகிறது.

அத்துடன், ஐந்தாம் மாதத்திலிருந்து சிலருக்குச் சுரக்கும் கொலோஸ்ட்ரம் காரணமாக ஈரத்தன்மையும், தோல் தொற்றுகளும் ஏற்படக்கூடும் என்பதால் வெதுவெதுப்பான சுத்தமான நீரில் காலை மாலை குளிப்பதும், தரமுள்ள மார்பக பேட்களை (nursing pad) பயன்படுத்துவதும் ஈரத்தைக் குறைத்து தொற்றுகளைத் தவிர்க்க உதவுகிறது. இதில் முக்கியமாக மசாஜின்போதோ அல்லது சுயபரிசோதனையின்போதோ மார்பகத்தில் கட்டிகள் தென்பட்டாலோ அல்லது காம்பில் இரத்தம் கசிந்தாலோ உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவதும் மிக மிக அவசியமாகிறது.

இவையனைத்திற்கும் மேலாக, கர்ப்பகால உடற்பயிற்சிகளில் கைகளுக்கும் தோள்பட்டைகளுக்கும் வலிமை சேர்க்கும் பயிற்சிகள் மார்பகங்களுக்கும் வலிமை சேர்க்கிறது என்பதால், கர்ப்பிணிகள் மிதமான உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்வது நல்ல பயனை அளிக்கிறது.

சமீப காலங்களில் அனைத்து நகரங்களிலும் Lactation Counselors எனப்படும் பாலூட்டும் ஆலோசகர்கள் இந்த வழிமுறைகள் அனைத்தையும் முறையாகக் கற்றுத் தரவும் செய்கின்றனர் என்பது இன்றைய நியூக்ளியர் மற்றும் மைக்ரோ ஃபேமிலி காலகட்டத்தில் பெரும் உதவியாகவும் மாறிவருகிறது என்பதே உண்மை.

ஆக... கையில் ரோஜா மொட்டைப் போலக் கிடைக்கும் குழந்தையின் மென்மையான இதழ்களுக்கு வலிக்காமல் பாலூட்டுவது என்பது உண்மையில் தாய்மார்கள் பிரசவத்திற்குப் பின் சந்திக்கும் மிகப்பெரிய சவால்தான். ஆனாலும், கருத்தரித்த நாளிலிருந்தே தம்மை முறையாக கவனித்துக் கொள்வதன் மூலம், பாலூட்டும் சிக்கல்களையும் சவால்களையும் தாய்மார்கள் எளிதாகக் கடக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவள் நம்பிக்கைகள் தொடரும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in