உடற்பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் என்பது உண்மையா?

அவள் நம்பிக்கைகள் - 31
உடற்பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் என்பது உண்மையா?

கர்ப்பகாலத்தில் அலுங்காமல் குலுங்காமல் நடக்கச் சொல்கிறார் கணவர். அத்தனை வேலையும் செய்தால்தான் குழந்தை நன்றாகப் பிறக்கும் என்கிறார் மாமியார். “யார் சொல்வதை நான் கேட்பது?" என்ற கேள்வியை எப்போதும் வெவ்வேறு வடிவில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் கர்ப்பிணிகள்.

உண்மையில் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யலாமா? அப்படியென்றால் எந்த மாதத்திலிருந்து? என்னென்ன உடற்பயிற்சிகள்? எவ்வளவு நேரம் மேற்கொள்ளலாம்? இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? உண்மையிலேயே உடற்பயிற்சிக்கும் சுகப்பிரசவத்திற்கும் சம்பந்தம் உண்டா? - இப்படியான கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

1. கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

சாதாரணமாக நமது உடல் தசைகளையும் எலும்புகளையும் வலிமைப்படுத்துபவை தான் உடற்பயிற்சிகள். அத்துடன் நுரையீரல்களின் செயல்பாட்டைச் செம்மைப்படுத்தி, ரத்த ஓட்டத்தையும் இலகுவாக்குவதால் சிறுநீரகம், பெருங்குடல், தோல் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளுக்கு நன்மைகளையும், மனதுக்கு உற்சாகத்தையும் அளிக்கிறது உடற்பயிற்சிகள். கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யும்போதும் இவையனைத்தும் நிகழ்ந்து, இந்த நேரடி நற்பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதுடன், கர்ப்பகால சர்க்கரை நோய், கர்ப்பகால ரத்த அழுத்தம், இதய நோய், இடுப்பு வலி, மூட்டு நோய், உடற்பருமன், மலச்சிக்கல், குறைப்பிரசவம் போன்றவற்றைத் தவிர்த்து, அவற்றின் பாதிப்புகளிலிருந்து அந்த கர்ப்பிணி எளிதில் குணமடையவும் உடற்பயிற்சிகள் உதவுகிறது.

மேலும், இது உள்ளே வளரும் குழந்தைக்கும் இந்த அனுகூலங்களை எடுத்துச் செல்வதுடன், எதிர்காலத்தில் உடற்பயிற்சிகளில் குழந்தைகளுக்கு ஆர்வம் கொள்ளச்செய்யும் குணத்தை அதன் ஜீன்களில் பதித்துவிடும் எபிஜெனிடிக்ஸையும் இந்த கர்ப்பகால உடற்பயிற்சிகள் வழங்குகின்றன.

2. எந்த மாதத்தில் இருந்து உடற்பயிற்சிகள் செய்யலாம்?

எந்த மாதத்திலிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்பதுதான் இதற்குப் பதில் எனலாம். பொதுவாக, கருத்தரித்த நாளிலிருந்தே உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றாலும், ஆரம்ப மாதங்களில் வாந்தி மற்றும் உடல் சோர்வின் காரணமாக முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு உடற்பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது என்று கூறும் அனைத்திந்திய மகப்பேறு மருத்துவ அமைப்பு, வாரத்தில் ஐந்து நாட்கள், தினசரி குறைந்தது அரை மணி நேரமாவது பயிற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்துகிறது.

கர்ப்பகால சர்க்கரையை குணப்படுத்த முதற்கட்ட சிகிச்சையாகக்கூட உடற்பயிற்சிகளைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும், கருத்தரிக்கும் முன்னர் உடற்பயிற்சிகளைச் செய்யாதவர்கள்கூட கருத்தரித்த பின் செய்வதும், அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதும் அவர்களது வாழ்க்கைமுறையை மாற்றி, நீண்டகால நன்மைகளையே பயக்கிறது.

3. எந்த வகையான உடற்பயிற்சிகள்?

உடல் ஒத்துழைக்கும் எல்லாவித பயிற்சிகளையும் கர்ப்பகாலத்திலும் மேற்கொள்ளலாம் என்றாலும், நடைப்பயிற்சி, வேக நடை, நீச்சல், யோகா பயிற்சிகள், நடனப் பயிற்சிகள், பைலேட்ஸ், ஸ்டாடிக் சைக்கிளிங் ஆகியவை கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள சிறப்பானவை என்று பரிந்துரைக்கும் உடற்பயிற்சியாளர்கள், அதேசமயம் பளு தூக்குதல், குதித்தல், மிதிவண்டி போன்ற உடலின் சமநிலையை பாதிக்கும் பயிற்சிகளைத் தவிர்த்திடவும் அறிவுறுத்துகின்றனர்.

4. எவ்வளவு நேரம்?

உங்கள் உடலுக்கும், உடற்பயிற்சிகளுக்கும் நீங்கள்தான் எஜமானி! ஆரம்ப நாட்களில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் என்று தொடங்கி, படிப்படியாகப் பயிற்சிகளை அதிகரித்து, எல்லா நாட்களிலும் குறைந்தது அரை மணிநேரமாவது உடற்பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம். என்றாலும், பயிற்சிகள் மேற்கொள்ளும்போது எதுவும் அசௌகரியமாக உணர்ந்தால், அவற்றை உதாசீனம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியமாகிறது. மேலும், உடற்பயிற்சியாளரின் கண்காணிப்புடன் பயிற்சிகள் மேற்கொள்வதும், தேவைப்படும்போது ஓய்வெடுத்துக்கொள்வதும் நன்மைகளையே பயக்கும்.

5. உடற்பயிற்சியின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை?

காற்றோட்டமான இடம், தளர்வான ஆடை, தகுந்த காலணி, மிதமான அளவிலான உணவு மற்றும் நீர் ஆகியன கர்ப்பிணிகள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான முக்கிய முன்னேற்பாடுகள் ஆகும். இதில் கர்ப்பிணிகள், கவனத்தில் கொள்ள வேண்டியனவும் உண்டு. அதிகப்படியான பனிக்குட நீர் அல்லது பனிக்குட நீர் கசிவு, ரத்தக்கசிவு, கருப்பைவாய் விரிந்தநிலை, அதீத இரத்த அழுத்தம், நஞ்சுக்கொடி கீழே இருக்கும் நிலை, குறைப்பிரசவம் போன்ற நிலைகளிலும், மகப்பேறு மருத்துவர் மருத்துவக் காரணங்களால் முழுமையான ஓய்வை (பெட் ரெஸ்ட்) பரிந்துரைக்கும்போதும் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

அதேபோல, உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும்போது வலி, உடல் சோர்வு, படபடப்பு, மயக்கம், அடிவயிற்று வலி மற்றும் நீர்க்கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ ஆலோசனை தேவை என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்..

6. இறுதியாக, ‘உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் சுகப்பிரசவம் கியாரண்டி தானே?’ எனும் கேள்வி...

ஸ்குவாட், பட்டர்ஃபளை, யோகா என பல வகையான உடற்பயிற்சிகள் இடுப்பு எலும்பு மற்றும் பெல்விக் தசைகளுக்கு வலிமை சேர்க்கின்றன, மூட்டுகளை, அவற்றின் அசைவுகளை எளிதாக்குகின்றன என்றாலும், இவை சுகப்பிரசவத்திற்கு உதவுமே தவிர உத்தரவாதம் அல்ல என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் கர்ப்பகாலத்தில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி மைல்கற்கள் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் துரிதமாக இருப்பதாகவும், குழந்தைகால உடற்பருமனைத் தவிர்ப்பதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது..

ஆக...

தாய்க்கு மட்டுமல்ல, உள்ளே வளரும் சேய்க்கும் பல நன்மைகளை உண்டாக்கும் கர்ப்பகால உடற்பயிற்சிகளை இன்றே தொடங்கலாமல்லவா!

ஆம்...

‘ஒரு பெண்... அதிலும் கர்ப்பிணிப் பெண் அணியக்கூடிய நகைகளில் மிகவும் சிறந்தது புன்னகை. அவள் உடுத்தக்கூடிய ஆடைகளில் மிகவும் சிறந்தது வியர்வை ’ என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடரும்!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in