ட்வின்ஸ்: ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!

அவள் நம்பிக்கைகள்- 29
ட்வின்ஸ்: ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!

'குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.'

- அதாவது தங்களின் மழலையின் குரலைக் கேட்காதவர்கள்தான் இசைக் கருவிகளை இனிது என்பார்கள் என்கிறார் வள்ளுவர். அப்படியென்றால், இரட்டை மழலைகளின் குரலைக் கேட்பது என்பது இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும்தானே! நிச்சயமாக. எனினும், கருவில் இருப்பது இரட்டையர்கள் என்றவுடன் கருவுற்ற பெண்ணுக்கும், அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கும் மகிழ்ச்சிக்குப் பதிலாக முதலில் கலக்கம்தான் எழுகிறது. அது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ளும்முன் இரட்டையர்கள் உருவாகும் அறிவியலைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

மல்டிபிள் ப்ரெக்னென்சி'

ஒரு ஆணின் விந்தணுவும், ஒரு பெண்ணின் சினைமுட்டையும் சேர்ந்து உருவாகும் செல், கருப்பையில் கருவாக வளர்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த இயற்கை நிகழ்வில், ஒரே கருத்தரிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாவதை ‘மல்டிபிள் ப்ரெக்னென்சி' (multiple pregnancy) என்று அழைக்கும் மருத்துவர்கள், அதில் இரண்டு குழந்தைகள் உருவாவதை 'ட்வின்ஸ்' என்றும், மூன்று குழந்தைகளை 'ட்ரிப்லெட்ஸ்' என்றும், நான்கு குழந்தைகளை 'க்வாட்ருப்லெட்ஸ்' என்றும் அழைக்கின்றனர்.

இப்படி மல்டிபிள் ப்ரெக்னென்சியில் பல வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் நம்மிடையே அதிகம் பிறப்பது ட்வின்ஸ் எனப்படும் இரட்டையர்கள்தான். இந்த இரட்டையர்களிலும் 'ஒரே போலிருக்கும் இரட்டையர்கள் (monozygous twins), 'வேறுபாடுள்ள இரட்டையர்கள்' (dizygous twins) என இரண்டு வகைகள் உள்ளனர்.

முதல் வகையான 'ஒரே போலிருக்கும் இரட்டையர்கள்' (monozygous twins) என்பது கருப்பையில் முதலில் ஒரு விந்தணு ஒரு கருமுட்டையுடன் இணைந்து உருவாகும் ஒற்றைக் கரு, இயல்புக்கு மாறாக தானே இரண்டாகப் பிரிந்து, தன்னைத்தானே பிரதியெடுப்பது போல பிரதியெடுத்து ஒரே கருப்பையில் இரண்டாக வளர்வதாகும்.. இந்த வகை இரட்டையர்கள் தான் சினிமாவில் வரும் டபுள்-ஆக்ட் கதைகளில் வருபவர்கள் போல பிறந்த பிறகும் பார்க்க ஒரே போலிருப்பவர்கள், ஒரே பாலினத்தைக் கொண்டிருப்பவர்கள்.

இன்னுமோர் வகையான 'வேறுபாடுள்ள இரட்டையர்கள்' (dizygous twins) என்பது ஒன்றுக்கு பதிலாக இரு கரு முட்டைகள் இரண்டு விந்தணுக்களுடன் தனித்தனியே சேர்ந்து, ஒரே கருப்பைக்குள் இரண்டு கருவாக வளர்வது ஆகும். இந்த வகை இரட்டையர்களில் ஒருவர் ஆணாகவும் இன்னொருவர் பெண்ணாகவும் இருப்பதோடு, பார்க்க ஒன்றேபோல் இல்லாமலும் இருப்பார்கள். வேறுபாடுள்ள இரட்டையர்களும் அதிகம்.

என்ன வேறுபாடு?

அதுமட்டுமன்றி இந்த இரண்டு வகையான இரட்டையர்கள் கருவின் உள்ளே வளர்வதிலும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அதிகம் காணப்படும் வேறுபாடுள்ள இரட்டையர்கள் கருவறைக்குள்ளேயே இரண்டு அறைகளாகப் பிரிந்து தனித்தனியாக வாழ்வார்கள். அவர்கள் தமக்கான இடம், தமக்கான உணவு, தமக்கான இரத்த ஓட்டத்தை தனித்தனியாகப் பிரித்துக்கொண்டு, ஒரே கருவறைக்குள் தமது தனி அறைகளுக்குள் சுதந்திரமாக வளர்வார்கள்.

ஆனால், ஒரே போலிருக்கும் இரட்டையர்களோ, தமது அன்னையிடம் தமக்கான இடம், உணவு மற்றும் ரத்த ஓட்டத்தைத் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளாமல் கிடைப்பதைத் தங்களுக்குள் பகிர்ந்தபடி ஒன்றாக வளர்வார்கள். இப்படி தமக்குக் கிடைக்கும் அனைத்தையும் இவர்கள் பகிர்ந்துகொள்வதால் இந்த இருவருமே பற்றாக்குறையுடன் வளர வாய்ப்புகள் அதிகமென்பதால், இந்த ஒத்த உருவமுள்ள இரட்டையர்களில் (monozygous twins) பொதுவாக வளர்ச்சிக் குறைதல், எடை குறைதல், ரத்த ஓட்டம் தடைபெறுதல், ஒட்டுண்ணி போல ஒன்று மாறுதல் போன்ற பல சிக்கல்கள் வரும் வாய்ப்பும் இங்கு அதிகம்.

ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்

இதில் மிக அரிதாக, அதாவது லட்சம் குழந்தைகளில் ஒன்றாக 'ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்' எனப்படும் conjoined twins பிறப்பதும் நிகழ்கிறது. இதில் ஒரு கரு முட்டை மற்றும் ஒரு விந்தணுவால் உருவாகும் கரு, இயல்புக்கு மாறாக இரண்டாகப் பிரியும் காலம் தாமதமாவதால் கரு முழுமையாக இரண்டாகப் பிரியாமல் 'மாற்றான்' பட சூர்யா போல ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் பிறக்கின்றனர். தமக்கான இடம், உணவு மற்றும் இரத்த ஓட்டத்தை, தாயின் கருவறைக்குள்ளேயே பகிர்ந்துகொள்ளும் இந்த கன்ஜாயின்ட் இரட்டையர்கள், செயல்பாட்டில் மட்டுமன்றி உடலளவிலும் ஈருயிர் ஓருடலாகவே வளர்கின்றனர். இந்த வகை இரட்டையர்களுக்கு, ஒட்டிய உறுப்புகளைப் பிரிக்கும் அறுவை சிகிச்சையும் பிரசவத்திற்குப் பின் தேவைப்படுகிறது.

இதுபோல பல வகைகளைக் கொண்ட மல்டிபிள் ப்ரெக்னென்சி எனப்படும் ஒன்றுக்கும் மேலான குழந்தைகள், ஒரே பிரசவத்தில் பிறப்பது அபூர்வமானதல்ல. அதிலும் சமீப காலங்களில் அதிகரித்துவரும் செயற்கை கருத்தரிப்பின் காரணமாக இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை.

கலக்கத்துக்குக் காரணம்...

பொதுவாக, இரட்டை கர்ப்பம் என்பது கருவுற்ற தாய்க்கும், உள்ளே வளரும் இரட்டையர்களுக்கும் தேவைப்படும் இந்த இரட்டை கவனம்தான் கருவுற்ற தாய்க்கும், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தச் செய்கிறது. இந்த இரட்டை கவனம் என்பது கருவுற்ற தாய்க்கு ஆரம்ப நாட்களில் ஏற்படும் அதிகப்படியான வாந்தி- மயக்கத்திலேயே தொடங்கிவிடுகிறது.

இரட்டையர்களுக்காக அதிகம் சுரக்கும் ஹெச்.சி.ஜி. ஹார்மோன்கள் மசக்கை மற்றும் சோர்வை அதிகரிக்கின்றன. தொடர்ந்து அதிக எடை கூடுதல், ரத்த சோகை, கர்ப்பகால ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய், கர்ப்பகால கிருமித்தொற்று ஆகியனவும், ஒருசிலரில் கருச்சிதைவும், பெரிதாகும் வயிற்றின் காரணமாக சிறுநீர் உபாதைகள், மலச்சிக்கல், மூச்சுத்திணறல், கால் வீக்கம், வேரிக்கோஸ் வெயின்ஸ் போன்றவையும் ஏற்படும். உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மை, பிறவிக் குறைபாடுகள், பிறக்கும் இரட்டையர்களில் எடைக் குறைவு அல்லது வளர்ச்சிக் குறைபாடு, கர்ப்பத்திலேயே இரட்டையர்களில் ஒரு குழந்தை மரணம் (vanishing twin), குறைப்பிரசவம், கர்ப்பகால ரத்தப்போக்கு (Antepartum haemorrhage), பனிக்குட நீர் வெளியேற்றம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். இவற்றின் காரணமாக அதிகரிக்கும் சிசேரியன் அறுவை சிகிச்சைகளும், பிரவசத்திற்குப் பின்னான கூடுதலான ரத்தப்போக்கு, தாய்ப்பால் சுரப்பின்மை எனக் கருத்தரித்தது முதல் பிரசவித்த பின்பு வரை இந்த மல்டிபிள் ப்ரெக்னென்சியில் ஏற்படும் சிக்கல்களும் அதிகம் என்பதும் இதில் மருத்துவர்கள் பொறுப்பையும் அதிகரிக்கிறது.

இதனால் இந்த வகைத் தாய்மார்கள் தமது கருத்தரித்த காலத்தில் மருத்துவரை அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கும். ஸ்கேனிங் பரிசோதனை உள்பட அனைத்து பரிசோதனைகளையும் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டிய சூழலும், தேவைப்படும்போது சிக்கல்களுக்குத் தகுந்த சிகிச்சைகளும் இரட்டைக் கர்ப்பத்தில் தேவைப்படுகின்றன.

அனைவருக்கும் பொறுப்பு அவசியம்

மேலும் இரட்டையர்களைச் சுமக்கும் பெண்கள் சத்தான உணவு வகைகளை அதிகம் சேர்ப்பதும், அதிகப்படியான நீரைப் பருகுவதும், நடைபயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மேற்கொள்வதும், ஏழு மாதங்களுக்குப் பிறகு அதிகம் ஓய்வெடுப்பதும் அவசியம். இவையனைத்திற்கும் மேலாக இரட்டையர்களைப் பற்றிய புரிதலும், சிக்கல்களை எதிர்கொள்ளும் மன வலிமையும் இந்தப் பெண்களுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. அதேசமயம் இவர்களுக்கான சுமுகமான சூழ்நிலையை உருவாக்கித் தருவதில் குடும்பத்தாருக்கும், சிக்கல்களை எளிதாக்கும் வழிமுறைகளையும், சிகிச்சைகளையும் வழங்குவதில் மகப்பேறு மருத்துவருக்கும் அதிகப் பங்கு உள்ளது.

சிறப்பு ஆலோசனைகள் மட்டுமன்றி, கருவுற்ற தாய்க்கு ரத்த சோகைக்கான இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மருந்துகள், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்தல், குழந்தைகளின் எடை மற்றும் நிலைக்குத் தகுந்தவாறு சுகப்பிரசவம் அல்லது சிசேரியன், முன்கூட்டிய பிரசவம் ஏற்படுமேயாயின் பிறந்த குழந்தைக்கான சிறப்பு சிகிச்சைகள், தேவைப்படும்போது இரத்தம் செலுத்துதல்... என ஒவ்வொரு மகப்பேறு மருத்துவரும் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவிக்க தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார் என்பதும் உண்மை.

ஆக...

‘தருண்-வருண்’... ‘தியா-திஷா’ என இரட்டையர்களைப் பிரசவிக்கும்போதெல்லாம் சிக்கல்களை எதிர்நோக்கி வருமுன் காத்து, இரட்டையர்களை ஒருங்கே பிரசவிப்பது தாயும், மகப்பேறு மருத்துவரும் சேர்ந்தேதான் என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in