விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி-10: அணியின் வெற்றியே முக்கியம்!

விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி-10: அணியின் வெற்றியே முக்கியம்!

விராட் கோலியைப் பொறுத்தவரை, கடந்த 2 ஆண்டுகள் அவருக்கு சோதனைக் காலமாகவே இருந்துள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன்பு, “சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை யார் முறியடிப்பார்?” என்று கேட்டால், எந்தக் கிரிக்கெட் ரசிகரும் கொஞ்சம்கூட யோசிக்காமல், விராட் கோலியின் பெயரைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு சரசரவென்று சதங்களாக அடித்துத் தள்ளினார் கோலி.

பெருமிதம் தந்த சிஷ்யன்

ஆனால் யாருடைய கண்பட்டதோ, கடந்த 2019-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டிக்குப் பின்னர், அவரால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் போனது. அவர் சதமடிப்பதைப் பார்த்து 50 இன்னிங்ஸ்களுக்கு மேல் ஆகிறது. இதனால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியாதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.

அதைப் பற்றி கோலி கவலைப்படாவிட்டாலும், ஆரம்பகாலத்தில் அவரது ஆட்டத்திறனைச் செழுமைப்படுத்திய பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா ரொம்பவே கவலைப்பட்டார். கடந்த இங்கிலாந்து தொடரின்போது, தொலைபேசியில் விராட் கோலியுடன் பேசிய ராஜ்குமார் சர்மா, அதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார். ஆனால், விராட் கோலி அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி வெற்றிகளைக் குவிப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவரிடம் பெருமிதத்துடன் சொன்னார் கோலி. தன்னைவிட அணியின் வெற்றியைப் பெரிதாக நினைக்கும் தனது சிஷ்யன் குறித்து பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜ்குமார் சர்மா.

அதேநேரத்தில், தனது பேட்டிங்கின் தரம் குறைந்துபோவதைப் பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் கோலி. இந்த நேரத்தில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் ஆகியவற்றில் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை ஏற்பது தனது பேட்டிங்கைப் பாதிக்கிறதோ என்று அவர் நினைத்தார். அதில் ஓரளவு உண்மையும் இருந்தது.

சச்சின் காட்டிய வழியில்....

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற மற்ற அணிகள் எல்லாம் டெஸ்ட் போட்டிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்று பணிகளைப் பிரித்துக் கொடுக்க, இந்தியா மட்டும் விராட் கோலி மீது முழுச் சுமையையும் இறக்கி வைத்துள்ளது. இங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவங்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவர்தான் கேப்டன்.

இந்திய அணியை சர்வதேச அளவில் சுமந்தது போதாதென்று, ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் சேர்த்து சுமக்கிறார். இப்படி சதா சர்வ காலமும் கேப்டன் பொறுப்பை ஏற்பதால், அணியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் விராட் கோலி. இதனால் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த அவரால் முடியவில்லை.

முன்பு சச்சின் டெண்டுல்கருக்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டிருந்தது. 1996 முதல் 2000 வரை இந்திய அணிக்கு சச்சின் கேப்டனாக இருந்துள்ளார். ஆனால் இந்தக் காலகட்டத்தில், அவரது பேட்டிங் பாதிக்கப்பட, துணிச்சலாகக் கேப்டன் பதவியை உதறியிருக்கிறார் சச்சின்.

பேட்டிங்கில் சச்சினின் வாரிசாகக் கருதப்படும் கோலி, பதவியை உதறுவதிலும் சச்சினைப் பின்பற்ற திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக, டி20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாய் அறிவித்தார். அத்துடன் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். தற்போதைய சூழலில் அவரது பணிச்சுமை குறைந்துள்ளதால், பேட்டிங் பழையபடி மெருகேறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கோலியின் மறுபக்கம்

பொதுவாகக் கிரிக்கெட் வீரர்கள், தங்கள் பிற்கால வாழ்க்கைக்காக வேறு ஏதாவது தொழிலையும் செய்வார்கள். அந்த வகையில் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக தனக்கு மிகவும் பிடித்த ஃபிட்னெஸ் சார்ந்த தொழிலையும் விராட் கோலி நடத்திவருகிறார். ‘சிசெல்’ என்ற பெயரில் நாட்டில் பல்வேறு இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அவர் நடத்துகிறார். மிக விரைவில் நாடு முழுவதும் 75 இடங்களில் இந்த உடற்பயிற்சிக் கூடங்களை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ‘ராங்’ (Wrogn) என்ற பெயரில் ஃபேஷன் துறையிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

விளையாட்டுத் துறை சார்ந்த தொழில்களிலும் ஆர்வம் செலுத்திவரும் விராட் கோலி, சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் ‘யுஏஇ ராயல்ஸ்’ அணியையும், புரோ ரெஸ்ட்லிங் லீகில் ‘பெங்களூரு யோதாஸ்’ அணியையும் வாங்கி நடத்தி வருகிறார்.

‘கோல்டன் டிராகன்’, ‘சாமுராய் வீரன்’ உள்ளிட்ட 4 உருவங்களைத் தன் உடலில் பச்சை குத்திவைத்துள்ளார் கோலி. இவை தனக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் என்பது அவரது நம்பிக்கை.

சைவத்துக்கு மாற்றிய காயம்

உணவு விஷயத்தில் சைவம்தான் கோலியின் தெரிவாக இருக்கிறது. இதுபற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள அவர், “ஒரு காலத்தில் நான் அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவேன். ஆனால், இப்போது சைவ உணவுக்கு மாறிவிட்டேன். 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது என் கழுத்து எலும்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் பக்கவிளைவாகக் கை சுண்டுவிரலில் மரப்புத்தன்மை ஏற்பட்டு பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இதுதொடர்பாக மருத்துவர்களை அணுகியபோது, அவர்கள் எனக்குச் சிகிச்சை அளித்ததுடன், அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டால், மேற்கொண்டு இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என்றும் பரிந்துரைத்தனர். அதனால் அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்க்கிறேன். எப்போதாவது மட்டும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக இருந்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், வீட்டில் வேலையாட்களை வைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் விராட் கோலி. வீட்டு வேலைகளை மனைவி அனுஷ்காவுடன் பகிர்ந்துகொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளாராம். அத்துடன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, கணவன் - மனைவி இருவரும் இணைந்தே உபசரிக்கின்றனர். இந்த எளிமை அவருக்கு இன்னும் பல வெற்றிகளைப் பெற்றுத் தரட்டும்!

(நிறைந்தது)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in