விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி - 8: இத்தாலியில் நடந்த திருமணம்

விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி - 8: இத்தாலியில் நடந்த திருமணம்

கிரிக்கெட் போட்டிகளில், தான் சொதப்பினால், அதற்காக அனுஷ்காவை சில ரசிகர்கள் திட்டுவதை விராட் கோலியால் ஏற்க முடியவில்லை. இந்நிலையில் அனுஷ்கா ராசியில்லாதவர் என்றும், அவர் ஆட்டத்தைப் பார்க்க வரும் நாளில் விராட் கோலியால் ரன் எடுக்க முடிவதில்லை என்றும் சிலர் கூற பொங்கி எழுந்தார் விராட் கோலி. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் ஒரு பதிவையும் வெளியிட்டார்.

“நான் ரன்கள் அடிக்காததையும், அனுஷ்கா கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருவதையும் தொடர்புபடுத்தி விமர்சிப்பவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். அனுஷ்காவைப் பொறுத்தவரை என்னை உற்சாகப்படுத்தத்தான் வந்துள்ளார். நேர்மறையான எண்ணங்களைத்தான் அவர் எனக்கு கொடுத்துள்ளார். உங்கள் தங்கையையோ அல்லது காதலியையையோ இப்படி யாராவது விமர்சித்தால் அவர்கள் எப்படி கவலைப்படுவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள்” என்று அந்தப் பதிவில் விராட் கோலி குறிப்பிட்டிருந்தார். கிர்க்கெட் வீரனாக மட்டுமின்றி, ஒரு நல்ல காதலனாகவும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை இதன்மூலம் கோலி நிரூபித்தார்.

நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம்

யாருடைய கண் பட்டதாலோ, 2016-ம் ஆண்டில் அவர்களின் காதலில் சிறிய விரிசல் விழுந்தது. ஜோடிப் புறாக்களாக சுற்றித் திரிந்த இருவரும், சில காலம் நேரில் சந்திப்பதைக்கூட தவித்தனர். இந்த காலகட்டத்தில் விராட் கோலி சமூக வலைதளங்களில், “என் இதயம் நொறுங்கிக் கிடக்கிறது” என்று பதிவிட்டார். மற்ற காதல்களைப் போல இந்தக் காதலையும் கோலி முறித்துக்கொண்டார் என்றுகூட சிலர் பேசிக்கொண்டனர். ஆனால் அந்தப் பிரிவு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. அவர்களின் காதல் மீண்டும் துளிர்விட்டது.

இந்தச் சூழலில் கோலி - அனுஷ்காவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் டிசம்பர் 11-ம் தேதி, வெளியாட்கள் யாரும் இல்லாமல் உறவினர்களை மட்டும் வைத்து அனுஷ்காவைத் திருமணம் செய்துகொண்டார் கோலி. அவர் நினைத்திருந்தால் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்திருக்கலாம். ஆனால் தனது திருமணத்தைத் தனிப்பட்ட விஷயமாகக் கருதிய விராட் கோலி, நெருங்கிய உறவினர்களான 42 பேரை மட்டும் வைத்து திருமணத்தை முடித்துக்கொண்டார். அதன்பிறகு இந்தியாவில் நண்பர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்தக் காலகட்டத்தில் காதலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் விராட் கோலி பெற்ற வெற்றிகள், அவரது கிரிக்கெட் வாழ்க்கையிலும் தொடர்ந்தது. சர்வதேசப் போட்டிகளில் அவர் தொடர்ந்து ரன்களைக் குவித்தார். ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி, பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். எந்த தோனியின் தலைமையில், விராட் கோலி நட்சத்திர வீரராக வளர்ந்தாரோ, அதே தோனிக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.

கும்ப்ளேவுடன் ஒரு மோதல்

பதவி வந்தபோதும் கோலி ஆணவத்தால் ஆடவில்லை. மைதானத்தில் தோனி இருக்கும்போது அவருக்கு உரிய மரியாதை கொடுத்தார். தோனியும் தன் நிலையை உணர்ந்து, அவர் கேட்டால் மட்டும் ஆலோசனைகளைச் சொல்லிவந்தார். ஆனால் பயிற்சியாளர் கும்ப்ளே அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டார்.

சச்சின் டெண்டுல்கரின் காலத்திலேயே கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்தவர் அனில் கும்ப்ளே. கிரிக்கெட்டில் தனக்கென்று சில திட்டமிடல்கள் அவருக்கு இருந்தன. அந்தத் திட்டங்களை மைதானத்தில் செயல்படுத்த நினைத்தார். போட்டிக்காக மைதானத்தில் நுழையும் முன் அங்கு எப்படியெல்லாம் திட்டமிட வேண்டும், யாரையெல்லாம் பந்துவீச அழைக்க வேண்டும் என்று கோலிக்கு வகுப்பெடுத்தார். ஆனால் கோலிக்கு அது பிடிக்கவில்லை.

மைதானத்துக்கு வெளியில் கும்ப்ளே சொன்னதற்கெல்லாம் தலையாட்டிய கோலி, மைதானத்துக்குள் தனக்கு எது சரியென்று பட்டதோ, அதை மட்டும் செய்தார். இது கும்ப்ளேவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. மைதானத்தில் அணியை வழிநடத்துவது ஒரு கேப்டனின் வேலை என்பதில் கோலி பிடிவாதமாய் இருக்க, ‘அப்படியென்றால் பயிற்சியாளராக நான் எதற்கு?’ என்ற கேள்வியில் கும்ப்ளே இருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் பயிற்சி விஷயத்தில் கும்ப்ளே கராறாக இருந்தது சில மூத்த வீரர்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் அவர்களும் கோலியுடன் சேர்ந்துகொண்டார்கள். ஒரு தலைமை ஆசிரியரைப்போல் கும்ப்ளே நடந்துகொள்வதாகக் கிரிக்கெட் வாரியத்தில் புகார் அளித்தனர். மேலும் அணிக்குள் நடக்கும் விவாதங்களைப் பற்றி தனக்கு நெருக்கமான செய்தியாளர்களுக்கு கும்ப்ளே வாட்ஸ்- அப்பில் தகவல் அனுப்புவதாக கோலி புகார் கூறினார். கும்ப்ளே சொன்னபடி வீரர்களை அணியில் சேர்க்க சில சமயங்களில் மறுத்தார்.

தோல்வியும் பிரச்சினைகளும்

இப்படி கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையே இறுக்கமான சூழல் நிலவிய காலத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, 158 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதில் கோலி எடுத்த ரன்கள் 5.

சாம்பியன்ஸ் கோப்பையில் தோற்றதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் தொடரப் போவது இல்லை என்று அனில் கும்ப்ளே தெரிவித்தார். மேலும் தான் பயிற்சியாளராக இருப்பது அணியில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு எழுதினார். இப்படி அவர் மறைமுகமாகக் குற்றம்சாட்டியது விராட் கோலி மீதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் கோலியா - கும்ப்ளேவா என்ற கேள்வி எழுந்தபோது கிரிக்கெட் வாரியம் கோலியின் பக்கம் நின்றது.

கும்ப்ளேவுக்குப் பதில் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்‌ஷ்மண், சேவாக் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும் கடைசியில் இந்தப் பதவியில் ரவி சாஸ்திரி அமர்த்தப்பட்டார். இதற்கு முன்பு அணியின் இயக்குநராக இருந்தபோது விராட் கோலியுடன் ரவி சாஸ்திரிக்கு நல்ல உறவு இருந்ததே இதற்கு காரணம். கிரிக்கெட் வாரியம் நினைத்தபடியே கோலி தனது இஷ்டம்போல் அணியை வழிநடத்த பக்கபலமாய் இருந்தார் ரவி சாஸ்திரி. இந்த ஜோடி கிரிக்கெட் போட்டிகளில் மாயம் செய்யத் தொடங்கியது.

(செவ்வாய்க்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.