வாழ்க்கையே நேசம் - 1: வாய்மொழி வன்முறை

புதிய தொடர்
வாழ்க்கையே நேசம் - 1: வாய்மொழி வன்முறை

வன்முறை என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதில் தோன்றும் பிம்பங்கள் என்னென்ன? ரத்தம் சொட்டும் வரை ஒருவரையொருவர் அடித்துக்கொள்வது, உடல் பாகங்களுக்குச் சேதம் விளைவிப்பது, அடித்து விரட்டுவது, துப்பாக்கி அல்லது கத்தி போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்டு காயம் ஏற்படுத்துவது, கொல்வது, குண்டு வெடிப்பது நிகழ்த்துவது என ஒரு பெரிய பட்டியலே போடலாம். சுருக்கமாகச் சொன்னால் இதுவரையிலும் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் நாம் பார்த்த காட்சிகளே வன்முறை என்பது மனதில் ஆழப் பதிந்திள்ளது.

சாத்வீக வன்முறை

ஆனால் விரலைக்கூட அசைக்காமல் வன்முறை செய்யலாம். பார்வையாலோ, முகபாவனையாலோ, பேசும் சொற்களாலோ வன்முறை நிகழ்த்த முடியும். இவற்றை வாய்மொழி வன்முறை அல்லது சாத்வீக வன்முறை என்கிறார்கள். 'வன்முறை செய்யாதே' என்று அறிவுரை சொல்லும்போது இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

மனிதன் நாகரிகமடைந்து தகவல் பரிமாற்றத்தில் உச்சநிலையை எட்டிய பிறகு சாத்வீக வன்முறை அதிகமாகிவிட்டது என்று தோன்றுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்பு அதிகம். அன்றாட வாழ்வின் பல நிலைகளிலும் தளங்களிலும் அதன் தாக்கம் எதிர்மறையாகச் செயல்படுகிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

தொடர்ந்து சாத்வீக வன்முறையால் பாதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களின் கோபத்தைத் தூண்டுகிறது. அதை எதிர்கொள்ள அவர்கள் ஆற்றும் எதிர்வினை வன்முறையில் முடிகிறது. இதனால் வீட்டிலும் பொதுவெளியிலும் அமைதி குறைகிறது. நெருப்பை அணைக்க வேண்டுமென்றால் அதற்கான எரிபொருள் இல்லாமல் போகச் செய்ய வேண்டுமல்லவா! வன்முறையில்லாமல் தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதை வாழ்க்கை முறையாகப் பின்பற்றினால் எப்படி இருக்கும்? இன்னும் ஒரு படி மேலே போய் கருணையின் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் செய்தால் எப்படி இருக்கும்?

குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்குகிறது...

சிறுவயது முதலே தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வன்முறையான பேச்சையும் செயலையும் பார்க்கும் குழந்தைகள் தாங்களும் அதைப் போலவே நடக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நல்வழிப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தைகளை அடிக்கிறோம். ஒருவரோடு மற்றவரை ஒப்புமைப்படுத்திப் பேசுகிறோம். சொல்வதைச் செய்யவில்லை என்றால் தண்டனை கிடைக்கும் என்று பயமுறுத்துகிறோம். பள்ளியில் ஆசிரியர்கள் கையில் பிரம்பு வைத்திருப்பதைப் பார்த்து வளர்ந்த தலைமுறையினர் பெற்றோராகும் போது அடிப்பதை நியாயப்படுத்துகிறோம். ‘அடியாத மாடு படியாது’, ‘அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்’ என்று குழந்தைகளை அடிப்பதை நியாயப்படுத்தும் எத்தனை எத்தனை பழமொழிகளைத் துணைக்கு அழைக்கிறோம்.

ஆனால் அடிவாங்கும் குழந்தைகள் தவறை உணர்ந்து திருந்திவிடுகிறார்கள் என்பதற்குச் சான்று எதுவும் இல்லை. அடிப்பவர் இல்லாதபோது அதே செயலைச் செய்கிறது குழந்தை. அல்லது செய்துவிட்டு செய்யவில்லை என்று மறைக்கிறது. ஆக நாம் காட்டும் வன்முறை நாம் நினைத்துக்கூட பார்க்காத வேறு பல தாக்கங்களை குழந்தைகள்மீது ஏற்படுத்துகிறது. எனவே வருங்கால சந்ததியினர் வன்முறையற்ற உலகில் வாழவேண்டுமென்றால் அவர்களுக்கு வன்முறையில்லாத தகவல் பரிமாற்றம் செய்யக் கற்றுத்தருவது அவசியமாகிறது. மனிதத் தன்மையோடு அடுத்தவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடப்பது அவசியமாகிறது.

மாறும் நம்பிக்கைகள்

இப்படி நடந்துகொள்வதை, கருணை அடிப்படையிலான தகவல் பரிமாற்றம் என்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்கள் யூதர்களை வதைமுகாம்களில் அடைத்து வைத்து கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் தலைமை தாங்கி வழிநடத்திய சர்வாதிகாரி ஹிட்லர் இளவயதில் வன்முறையை எதிர்கொண்ட துர்பாக்கியம் கொண்டவர். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் இப்படி வன்முறைதான் எதற்கும் தீர்வு என்ற ஆழ்ந்த நம்பிக்கைகொண்ட இன்னும் எத்தனையோ மனிதர்களைப் பார்க்கலாம்.

அச்சத்தை விதைத்து அன்பையும் அமைதியையும் அறுவடை செய்ய முடியாது. இந்த உலகம் கொடியது, இரக்கமற்றது, கருணையற்றது என்று சொல்வதைக் கேட்கும் எவருமே தானும் கொடியவராகவும் இரக்கமற்றவராகவும் இருந்தால் மட்டுமே இங்கு பிழைத்திருக்க முடியும் என்று நம்பத் தொடங்குகிறார்கள்.

இந்த உலகமும் சமுதாயமும் சுயம்புவாகத் தோன்றியவையா என்ன? நாம்தானே அதை உருவாக்குகிறோம். ஆக வன்முறையை எந்த வடிவிலும் செய்யமாட்டோம் என்று நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்தால் என்ன? முதலில் நாம் பேசும் மொழியில் வன்முறையைத் தவிர்க்கக் கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும். கருணையுள்ளவர்களாக இருக்க இது முதல் படி என்கிறார்கள் வல்லுநர்கள்.

நம்முள் ஒரு விசாரணை

சரி, ஒரு சின்ன சுய பரிசோதனை செய்துகொள்ள நேரம் ஒதுக்கலாமா? இதுவரை கீழ்க்கண்ட சொற்களை அல்லது வாக்கியங்களை எத்தனை முறை பயன்படுத்தியிருப்போம் என்று கணக்கெடுக்கலாமா?

1. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதே. அறிவுகெட்ட முட்டாள்.

2. நீ சுத்த சோம்பேறிடா. எப்பவும் எதுக்கும் வளையாதே.

3. அவன் ஒரு முரடன், போக்கிரி...

4. அவள் ஒரு சண்டைக்காரி, வம்பு பிடித்தவள்...

5. அவங்களுக்கு வேற என்ன வேலை. எப்போ பார்த்தாலும் அடுத்தவர்களைப் பற்றி புகார் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

பெரும்பாலும் நாம் எல்லோருமே பயன்படுத்தும் வாக்கியங்கள் இவை. இவற்றில் வன்முறை பொதிந்திருக்கிறது என்று சொன்னால் எத்தனை பேர் ஒப்புக்கொள்வோம்?

ஒருவரின் செயலை அடையாளப்படுத்த நாம் பயன்படுத்தும் சொற்கள் ஒரு பொருளுக்கு அடையாள முத்திரையிடுவது போன்றது. ஆனால் மனிதர்களுக்கு உணர்வு உண்டல்லவா. இந்த அடையாள முத்திரையை அவர்கள் மனதார ஏற்றுக்கொள்கிறார்களா? அது அவர்களின்மீது எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்பதை உணர்ந்து செயல்படுகிறோமா?

அதெல்லாம் இருக்கட்டும். முதலில் ஒருவரின் செயலை, நடந்துகொள்ளும் விதத்தை விவரிக்க நாம் பயன்படுத்தும் உரிச்சொல் அல்லது அடைமொழி சரியானதுதானா? நாம் பார்ப்பதை மெய்யென்று தீர விசாரித்து அறிகிறோமா அல்லது நம்முடைய முந்தைய அனுபவங்களால் முன்முடிவுக்கு வருகிறோமா?

இப்படியெல்லாம் சிந்திக்கத் தொடங்குவதுதான் வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்துக்கும் வாழ்க்கைக்கும் முதல் படி. "முதல்ல அவளை நிறுத்தச் சொல்லு, இவனை நிறுத்தச் சொல்லு, அப்புறமா நானும் நிறுத்தறேன்" என்பது போன்ற வசனங்களை உளவியல் வல்லுநர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எந்த மாற்றமும் முதலில் என்னிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். யார்மீதாவது ஆதிக்கம் செலுத்த வேண்டும் அல்லது கட்டுப்படுத்த முடியும் அடக்கியாள முடியும் என்று நினைப்போமென்றால் அதை நம்மீது மட்டுமே செய்ய உரிமை இருக்கிறது. அதை எப்படிச் செய்யலாம்? வன்முறையை எப்படி நிறுத்தலாம்? அமைதியான வாழ்வை எப்படி வாழலாம்?

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in