வாழ்க்கையே நேசம் - 13: நன்மதிப்பைக் காக்க வன்முறை தேவையா?

வாழ்க்கையே நேசம் - 13: நன்மதிப்பைக் காக்க வன்முறை தேவையா?

தொழில்நுட்பமும் இணையமும் இந்த உலகைச் சுருக்கி நம் உள்ளங்கையில் அடக்கிவிட்டன. உலகின் எந்த மூலையில் ஏற்படும் சிறு அதிர்வும் நம்மைப் பெரிதாகத் தாக்காவிட்டாலும் தொட்டாவது சென்றுவிடுகிறது. கடந்த சில நாட்களாக இணையத்திலும் ஊடகங்களிலும் பேசுபொருளாக இருக்கும் நிகழ்வைப் பற்றி இன்று பேசலாம். நம்மில் பெரும்பாலானோரைக் குழப்பி அடித்த விவகாரமும் அதுதான். வேறென்ன, கிறிஸ் ராக்குக்கு வில் ஸ்மித் கொடுத்த அறையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

சுரீர் பதில்

சென்ற ஞாயிறன்று 2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதன் நேரடி ஒளிபரப்பை நம்மில் எத்தனை பேர் பார்த்தோம் என்பது தெரியவில்லை. ஆனால் திருவிளையாடலில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானுக்கு விழுந்த பிரம்படி உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் வலித்தது போல கிறிஸ் ராக்குக்கு வில் ஸ்மித் கொடுத்த அறை நம் எல்லோர் கன்னத்திலும் சுரீரென்றது.

கிறிஸ் ராக் ஒரு நகைச்சுவை நடிகர். விருது வழங்கும் விழாவைத் தொகுத்து வழங்கும்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா ஸ்மித்தை அவர் கேலியாகப் பேசினார். தலைமுடி கொட்டிப்போய் வழுக்கையாக இருந்ததால் ‘ஜி.ஐ.ஜோ’ போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கலாமே என்றார். முதலில் இதைக் கேட்டு சிரித்த வில், மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்ததும் நிதானமாக மேடையேறி கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்ற கிறிஸ் தான் வாங்கிய அடியை பற்றி நகைச்சுவையாகப் பேசி சமாளித்தார். கீழே இறங்கி வந்து இருக்கையில் அமர்ந்த வில் ஸ்மித், “என் மனைவியின் பெயரை இனி நீ உச்சரிக்கவே கூடாது” என்று இரண்டு முறை உரக்கச் சொன்னார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பானது.

சிறிது நேரத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அதே மேடையில் பெற்றுக்கொண்ட வில் ஸ்மித் அழுதபடியே தன்னுடைய வரம்புமீறிய செயலுக்கு மன்னிப்பு கோரியதும் மறுநாள் இணையத்தில் மன்னிப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டதும் நடந்தது.

வாதப் பிரதிவாதங்கள்

அரங்கில் இருந்த பார்வையாளர்களும் மற்ற திரையுலக பிரபலங்களும் இணைய நேயர்களும் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தனர். நடப்பது உண்மையா நாடகமா என்று குழம்பினார்கள். ஏனெனில் கடந்த சில வருடங்களாக விழாவுக்குச் சுவை கூட்டுவதற்காக இதுபோன்ற விவகாரமான சம்பவங்கள் மேடை ஏற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. அதுபோக பிரபலங்கள் ஒருவரை ஒருவர் நகைச்சுவை என்ற பெயரில் கேலியும் கிண்டலும் பேசி வறுத்தெடுத்துக்கொள்வது 'ரோஸ்ட்டிங்' (roasting) எனப்படுகிறது. இதற்கென நேரம் ஒதுக்கி 'ரோஸ்ட்டிங்' நிகழ்வுகளில் நம்மூர் திரையுலகப் பிரபலங்களும் பங்குகொள்வது வாடிக்கையாகிவிட்டது. கூடவே எதிர்மறை விளம்பரம் (negative publicity) என்ற வழிமுறையும் பரவலாகி வருகிறது.

இந்த நிகழ்வு உண்மையா அரங்கேற்றப்பட்டதா? கறுப்பினத்தவராக இல்லாமல் வெள்ளைக்காரராக இருந்தால் அறை கொடுத்திருப்பாரா இல்லை வாங்கி இருப்பாரா? இருவரில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருக்குமா? இது கறுப்பினத்தவருக்கு எதிரான சதித்திட்டமா? அதே அரங்கில் கிறிஸ்ஸைவிடவும் மோசமான நகைச்சுவையை அரங்கேற்றிய பெண் தொகுப்பாளர்களின் கீழ்த்தரமான ரசனையை யாரும் கண்டுகொள்ளவில்லையே? கிறிஸ், ஜேடா இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரின் தொடர்ச்சி இது... இப்படிப் பலவாறான கருத்துக்களை இணையம் முழுவதும் பார்க்க முடிந்தது.

ஜேடா ஸ்மித் அலபீசியா (alopecia) என்ற தலைமுடி கொட்டும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதால் மழிக்கப்பட்ட மொட்டைத் தலையோடு இருப்பார். உருவ கேலி செய்ததால் மனைவியின் நன்மதிப்பைக் காக்கும் ஆண்மகனாக நடந்துகொண்டார் வில் ஸ்மித். கிறிஸ் இனி எப்போதும் யாரையும் இப்படி கேலி பேசக்கூடாது என்ற பயத்தோடு நடப்பார். இப்படி ஒரு பொதுவான கருத்தை எல்லோருமே முன்வைத்தனர்.

இந்தக் கருத்துக்கள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைப்போம். ‘வாழ்க்கையே நேசம்' தொடரில் பல வாரங்களாக வன்முறையற்ற எண்ணம், பேச்சு, செயல் - இம்மூன்றையும் அன்றாட வாழ்வில் எப்படி கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து பேசி வருகிறோம். உங்களில் சிலர் அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் முயற்சிலும் ஈடுபட்டிருக்கலாம். அந்தக் கோணத்தில் இருந்து கிறிஸ், வில் இருவரின் நடவடிக்கைகளையும் அணுகுவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கிறிஸ் எல்லை மீறி கிண்டல் செய்தது சரியல்ல. அவமானப்படுத்துதல் (shaming) என்பது அதீதமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி நம்பிக்கையைக் குலைக்கிறது. தன்னம்பிக்கை குறையும்போது பதற்றம், மன அழுத்தம், தனித்துவிடப்பட்ட உணர்வு, மனச்சிதைவு போன்ற உளவியல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் அவருடைய பேச்சை சாத்வீக வன்முறை (passive aggression) என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

வன்முறை சரியா?

ஆனால் அதற்கு வில் ஸ்மித் ஆற்றிய எதிர்வினை சரியானதுதானா? ஒருவருடைய பேச்சு ஒவ்வாததாக இருப்பதால் அவரை அறையலாமா? அடிக்கலாமா? இதுவே நம்மைவிட அதிகாரம் படைத்தவராகவோ சமூகப் படிநிலையில் நமக்கு மேலான இடத்தில் இருப்பவராகவோ, உடல் வலுவும் பண பலமும் கொண்டவராகவோ இருப்பவரை அடிக்க முடியுமா? மனைவியின் நன்மதிப்பைக் காக்க வேண்டுமென்றால் வன்முறை மட்டும்தான் தீர்வா?

இதே திரையுலகில் வில்லும் ஜேடாவும் எத்தனையோ புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டுதான் புகழையும் வெற்றியையும் அடைந்திருப்பார்கள். புறக்கணித்தவர்களையும் அவமானப்படுத்தியவர்களையும் அடித்தோ அறைந்தோ நல்வழிப்படுத்தித்தான் இந்த நிலையை அடைந்தார்களா?

தனிப்பட்ட வாழ்வில் சிறு வயதில் இருந்து எத்தனையோ வலிகளைத் தாங்கித்தான் ஒவ்வொருவரும் வளர்ந்திருப்போம். வயது வந்த பிறகு, கூடவே சமூகத்தில் உயர்நிலையில் இருக்கும்போது பொறுப்புடன் நடந்துகொள்வதுதானே சரி. இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருப்பதும் சமூக நுண்ணுணர்வுடன் நடப்பதும் பெரியவர்களின் கடமை அல்லவா!

தவறு செய்தவர்களைத் தண்டிக்க ‘மூக்குக்கு மூக்கு', 'கண்ணுக்கு கண்' என்ற சட்ட விதிகளை நடைமுறைப்படுத்திய ஹமுராபி என்ற பாபிலோனிய மன்னனின் கதையைக் கேட்டிருப்போம். அவற்றையெல்லாம் விட்டொழித்து தவறு செய்பவர்களை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்பதை எடுத்துச் சொன்ன புத்தரும், அகிம்சையை போதித்ததோடு நின்றுவிடாமல் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்த அண்ணல் காந்தியடிகளும் வாழ்ந்த மண்ணில் வாழ்கிறோம். இவர்களுடைய வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டினாலே வன்முறையை தவிர்க்கும் உத்திகளை நாமும் கற்றுக்கொள்ளலாம்.

வன்முறையற்ற எதிர்வினை ஆற்றுவது எப்படி என்பதை கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் நாமே அறிந்துகொள்ள முடியும். வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வன்முறையைத் தவிர்ப்பேன் என்ற பற்றுக்கோள் (conviction) தெளிவான சிந்தனைக்கும் செயலுக்கும் வழிவகுக்கும். முன்பே சொன்னதுபோல அவரையும் இவரையும் மாற்றும் முயற்சியில் இறங்காமல் முதலில் நம்மிடமிருந்து தொடங்குவோம். வன்முறையைத் தவிர்த்து உள்ளத்தில் அமைதி கொள்வோம்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in