வாழ்க்கையே நேசம் - 9: நம் தேவைகள் என்ன என்பது நமக்குத் தெரியுமா?

வாழ்க்கையே நேசம் - 9: நம் தேவைகள் என்ன என்பது நமக்குத் தெரியுமா?

மற்றவர்களைப் பற்றிய மதிப்பீடுகள், தீர்ப்புகள், ஆய்வுகள், கருத்துகள், பொருள்விளக்கங்கள் இவையெல்லாமே ஒரேயொரு விஷயத்தைத்தான் சுட்டுகின்றன. நம்முடைய தேவைகள் நிறைவேறாத காரணத்தாலும் அதை உணராதபோதும் இப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் அது.

"நீ என்னைப் புரிந்துகொள்வதே இல்லை" என்று ஒருவர் சொன்னால் அதற்குப் பொருள் என்ன தெரியுமா? நாம் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவருடைய தேவை. ஆனால் அது நிறைவேறவில்லை என்பதால் ஏற்பட்ட ஏமாற்றத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.

"இந்த வாரம் முழுவதும் நீ அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்தாய். உனக்கு என்னைவிட உன் வேலையைத்தான் அதிகம் பிடிக்கிறது” - இணையரிடமோ காதலரிடமோ ஒருவர் இப்படிச் சொன்னால் அன்னியோன்னியத்திற்கான தேவை நிறைவேறவில்லை என்பதால் தனிமையாக உணர்கிறார் என்பதுதான் உண்மை.

மேலே சொன்ன நிகழ்வுகளில் நம்முடைய தேவைகளை நேரிடையாகத் தெரிவிக்காமல் மதிப்பீடுகள், பொருள்விளக்கங்கள், சொற்சித்திரங்கள் என வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்த முனைகிறோம். ஆனால், தகவலைப் பெறுபவருக்கு அவரைக் குறைசொல்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. உடனே தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காகப் பதில் தாக்குதலைச் செய்கிறார்கள். இருவருடைய ஆற்றல் முழுவதும் தீர்வே காண முடியாத விவாதத்தில் கழிகிறது, உறவில் விரிசல் ஏற்படுகிறது.

சுற்றியிருப்பவர்கள் நம்மைப் புரிந்துகொண்டு பரிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அவர்களின் பேச்சையோ செயலையோ மதிப்பீடு செய்வது போல பேசக் கூடாது. அப்படிச் செய்வது நம்முடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துவிடும். அதற்கு மாறாக, நம்முடைய தேவைகளையும் அவற்றோடு தொடர்புடைய உணர்வுகளையும் உளமார எடுத்துச் சொல்ல பழகினால் மற்றவர்களும் புரிதலோடும் பரிவோடும் நடந்துகொள்ள வழிவகுக்கும்.

ஆனால் இதுவரையில் நம்முடைய சமூக - குடும்ப - பணியிடச் சூழலில் யாரும் மனித மனங்களின் தேவைகளைப் பற்றி பேசவோ நினைத்துப் பார்க்கவோ செய்ததில்லை. இந்தத் தேவைகள் பற்றி நம்முள் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புகூட இல்லை. நம்முடைய தேவைகள் நிறைவேறவில்லை என்றால் அடுத்தவர்களைக் குறைகூறுவது ஒன்றைத்தான் எல்லோருமே செய்கிறோம். அப்படியே காலங்காலமாகப் பழகிவிட்டோம். இதை மாற்ற வேண்டும் என்றால் நிறைய விழிப்புணர்வும் அதைவிட அதிகமான மெனக்கெடலும் வேண்டும். அழுக்குத் துணிகளை அவற்றுக்கான இடத்தில் போட வேண்டும் என்பது நம்முடைய தேவையாக இருந்தால் நம் குழந்தைகள் அதைச் செய்யாதபோது அவர்களை சோம்பேறி என்றும் மந்தம் என்றும் முத்திரை குத்துகிறோம். பணியிடத்தில் நமக்குத் தேவையான முறையில் வேலையைச் செய்யாத பணியாளர்களைப் பொறுப்பற்றவர்கள் என்ற தீர்ப்பு சொல்லி தள்ளிவைக்கிறோம்.

இதற்கு முன்னர், அலுவலகத்திலோ வேறு இடத்திலோ நடந்த பலத்த விவாதங்களை மனதுக்குள் மீண்டும் ஓட்டிப் பாருங்கள். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்வதில் நேரத்தைச் செலவழித்திருப்பதை உணர்வீர்கள். ஆனால் ஒருவரும் தங்களுடைய தேவைகளைப் பற்றியோ அவை நிறைவேறாதபோது தோன்றும் உணர்வுகள் பற்றியோ பேசியிருக்கமாட்டார்கள்.

அடுத்த முறை அலுவலகத்திலோ வீட்டிலோ நீங்கள் எதிர்பார்ப்பது நிறைவேறவில்லை என்றால் உங்கள் தேவை என்ன அது நிறைவேறாதபோது ஏற்படும் உணர்வுகள் என்ன என்பது குறித்து சிந்தியுங்கள், முடிந்தால் ஒரு தாளில் எழுதி வையுங்கள். பிறகு அதை எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் மரியாதையோடு எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் தேவை நிறைவேறலாம், நிறைவேறாமலும் போகலாம். ஆனால் உங்களுக்குள் ஏற்படும் தெளிவு இன்னும் ஆழமாகச் சிந்திக்கவும் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வுகாணவும் உதவும்.

பொதுவாக எல்லா மனிதர்களின் தேவையும் ஒன்றுபோலத்தான் இருக்கிறது. நம்முடைய தேவைகள் என்று இவற்றைத்தான் பட்டியலிடுகிறார்கள் உளவியல் வல்லுநர்கள்: தன்னுரிமையோடு செயல்படுவது (autonomy), கூட்டுச்சார்பு (interdependence), கொண்டாட்டம் (celebration), கேளிக்கை (play), நேர்மை (integrity), பேணி வளர்த்தல் (nurturance), அகநிலைசார்ந்த கூட்டுறவு (spiritual communion).

மனிதர்களின் தேவை குறித்து உளவியல் வல்லுநர்கள் சொல்வதும் பட்டியலிடுவதும் ஒருபுறம் இருக்கட்டும். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். நம்முடைய தேவைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு வெளிப்படுத்தினால் இந்தச் சமூகம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்று பார்த்தால் வருத்தம்தான் மிஞ்சுகிறது. நம்மை சுயநலக்காரன் என்று குற்றம்சாட்டுவார்கள். பெண்கள் என்றால் இன்னும் அதிகமான எதிர்வினைகள் நிகழும்.

இந்த உலகமும் சமூகமும் பெண்களைக் குறைகூறுவதிலும் குற்றம்சாட்டுவதிலும் என்றுமே குறை வைப்பதில்லை. பெண் என்றாலே தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் தியாகம் செய்ய வேண்டும் என்ற ஒரு பிம்பத்தைப் பல நூற்றாண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஒரு பெண்ணின் கடமை என்று உருவேற்றி வைத்திருக்கிறார்கள். இதனால் பெண்கள் தங்களுடைய இயல்பான அத்தியாவசியமான தேவைகளைப் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பது இல்லை.

இப்படி தங்களின்மீது சுமத்தப்பட்ட பிம்பங்களை உண்மை என்று நம்பும் பெண்களால் அதைவிட்டு வெளியேறவே முடிவதில்லை. ஆனால், கடமை, பாசம், குடும்பம், கவுரவம், மரியாதை என்ற வலைப்பின்னலில் இருந்து வெளியேறுவது எளிதான விஷயமல்ல. முதலில் பெண்களுக்கு தங்களுடைய தேவைகள் என்ன என்பது தெரியுமா என்பதே சந்தேகம்தான். அப்படியே தெரிந்தாலும் அதை வெளியே சொல்வதற்குள் படாதபாடு படுவார்கள். அதை வெளிப்படுத்துவதே குற்றம், குடும்பத்துக்கு இழைக்கும் துரோகம் என்ற எண்ணத்தைத் துடைத்தெறிய முடியாமல் தவிப்பார்கள். அப்படியே வெளிப்படுத்தினாலும் சுற்றிவளைத்து தன்னுடைய வரம்புக்கு மீறிய ஒன்றை பேராசையால் கேட்பது போன்ற உணர்வுடன் பேசுவார்கள்.

தங்களுடைய இயல்பான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று பெண்களே நம்புவதால்தான் இந்தத் தயக்கமும் பயமும் ஏற்படுகிறது. நம்முடைய வீட்டிலும் வெளியிலும் பணியிடத்திலும் பொது இடங்களிலும் இதைப் பார்த்திருக்கிறோம். பெண்களாக இருந்தால் பொறியில் சிக்கியது போல தவித்திருப்போம். இந்த மனத் தடையைத் தாண்டுவது எப்படி? குடும்பத்தின் சமூகத்தின் குற்றச்சாட்டு ஏச்சு ஆகியவற்றை எதிர்கொள்வது எப்படி? தொடர்ந்து பேசுவோம்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.