வாழ்க்கையே நேசம் - 7: பணியிடத்தில் உணர்வுகளைத் தெரிவிப்பது எப்படி?

வாழ்க்கையே நேசம் - 7: பணியிடத்தில் உணர்வுகளைத் தெரிவிப்பது எப்படி?

உணர்வுகளை எடுத்துச் சொல்லப் பழக வேண்டும். கூடவே, அதற்காகப் பயன்படுத்தும் சொற்கள் பற்றிய அறிவையும் விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரோடு உறவைப் பேணுவதோடு வேலையிடத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க இது மிகவும் அவசியம். எந்த அலுவலகத்திலும் இரண்டு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே எப்போதும் ஓர் இழுபறியான உறவு இருக்கும். வேலையைச் செய்யும் முறையில் முரண்படலாம். ஒரு துறையினர் பரிந்துரைக்கும் செயல்திட்டம் பயன் தராது என்று மற்றொரு குழு ஒத்துழைக்காமல் இருக்கலாம். இதைச் சமாளிக்க பெரும்பாலான நிறுவனங்களில் முரண்பாடுகளைக் கையாளும் நுட்பங்களைக் (conflict management techniques) கற்றுத்தருவது வழக்கம்.

உளமாரப் பேசுங்கள்

முரண்பாடுகளைக் களையும் பேச்சுவார்த்தையில் (negotiation) ஈடுபடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை ஹார்வர்டு சட்டக் கல்லூரியின் பயிற்சித் திட்டம் பட்டியலிடுகிறது. எதையும் தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது, எல்லோரது கருத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும், குழுவினர் அல்லது பணியாளர்களிடையே இருக்கும் வேறுபாடுகளை, குழுவுக்கு ஆதாயமான விஷயமாக மாற்ற முனைய வேண்டும் என்பதோடு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது நமக்குள் தோன்றும் உணர்வுகளை எடுத்துச் சொல்வதும் அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆழ்மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது அகத்தூய்மையைப் (cathartic) பேணுவதோடு எதிர்க்கருத்துகள் கொண்டிருப்பவர் நம்மை எதிரியாகப் பார்க்காமல் உணர்வுகள் உள்ள முழுமையான மனிதராக பார்க்கச் செய்கிறது. அவர்களும் தங்களின் உணர்வுகளை நம்மிடம் எடுத்துச்சொல்ல வழிவகுக்கிறது. உளமாரப் பேசும்போது பிழையான புரிதலும் அதனால் ஏற்பட்ட மனத்தாங்கலும் மனவேற்றுமையும் களையப்படுகிறது. இதைப் புரிந்துகொள்ள இந்த உண்மை நிகழ்வைப் படியுங்கள்.

புரிதல் அதிகரிக்க...

‘அலுவலகக் குழுவில் வேலையொன்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டி இருந்தது. வேலையைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மாலா*, சுதீப்* இரண்டு பேரும் அனுபவசாலிகள். வேலையைச் செய்துமுடிக்கத் தேவையான தகவல்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. ஓரிரு நாளில், “வேலையைச் செய்துமுடித்துவிட்டோம்" என்று தகவல் தெரிவித்தனர் என்பதால் வேலையைக் கொடுத்த ராஜா* அதைச் சரிபார்க்கவில்லை.

காலக்கெடு முடிந்து ஒரு வாரம் கழித்து, அந்த வேலையில் ஒரு பகுதி இன்னும் மிச்சமிருப்பது தெரியவந்தது. அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுகூடினோம். கூட்டம் தொடங்கியதும் சுதீப் கொஞ்சம் காட்டமான தொனியில் பேசினார். அந்த வேலையைச் செய்துமுடிக்கத் தேவையான முழுமையான தகவலும் ஆவணங்களும் தனக்கு முதலிலேயே வந்துசேரவில்லை என்றும் இனி எல்லாம் ஒரே நேரத்தில் வந்தால் மட்டுமே வேலையைச் செய்ய முடியும் என்றும் படபடவென பேசினார். அவருடன் பணியாற்றிய மாலாவால் கூட்டத்துக்கு வர முடியவில்லை.

வேலையைச் செய்து முடிக்காமலேயே எல்லாம் முடிந்தது என்று தெரிவித்ததோடு வேண்டிய தகவல் சரியான நேரத்துக்கு வரவில்லை என்று சுதீப் சொன்னது குழப்பத்தை ஏற்படுத்தியது. எனினும், சரியான நேரத்தில் எல்லாத் தகவலும் பகிர்ந்துகொள்ளப்பட்டதற்கான சான்றுகளை ராஜா காட்டியதும் சுதீப் அமைதியாகிவிட்டார். என்றாலும் அந்த வேலையைச் செய்யும் சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் பல வேலைகள் ஒன்று சேர்ந்ததினால் தவறுதலாக விட்டுப்போயிருக்கலாம் என்பதும் ராஜாவுக்குப் புரிந்தது. அதைக் கூட்டத்திலேயே வெளிப்படையாகச் சொன்னார். இனிமேல் வேலையைச் செய்யும்படி சொன்னவரையே வேலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளலாம், இதனால் இப்படிப்பட்ட விடுபடல்களைத் தவிர்க்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்.

சிறிது நேரத்தில் ராஜாவைத் தனியாகத் தொடர்புகொண்டு பேசிய சுதீப், தான் காட்டமாகப் பேசியதற்கான காரணத்தைச் சொன்னதோடு குழுவில் இருந்த இன்னொருவரின் செயல்பாடுகளும் அணுகுமுறையும் தன்னுடைய மனநிலையைப் பாதித்தது பற்றியும் சொன்னார். உளமார இருவரும் பேசிக்கொண்டதில் மனம் லேசானது. அந்தப் பிரச்சினையை இழுத்துக்கொண்டே போகாமல் அத்துடன் முடித்துக்கொள்ளவும் உதவியாக இருந்தது. கூடவே சுதீப் இன்னொருவரோடு இருந்த முரண்பாடுகள் குறித்தும் குழுவின் பொதுக்கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார். குழுவினர் எல்லோரும் இதுபோன்ற முரண்பாடுகளை எதிர்கொள்ளும்போது என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து ‘ஒன்றாகப் பணியாற்ற பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை' (ways of working) புதுப்பித்துக்கொண்டனர். முரண்பாடுகள் ஏற்படும்போது உணர்வுகளை வெளிப்படையாகத் தெரிவிப்பது புரிதலை அதிகரிப்பது கண்கூடாகத் தெரிகிறது.

என்ன செய்யலாம்?

பல்வேறு இன, மொழி, மத, பாலினங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றும் போது கலாச்சாரம் சார்ந்த தடைகள் ஏற்படுவது இயல்பு. குறிப்பிட்ட இனம் அல்லது நாட்டைச் சேர்ந்தவர்களின் இயல்பு இதுவாகத்தான் இருக்கும் என்ற முன்முடிவுக்கு வருவது முரண்பாடுகளைக் களைய உதவாது. புரிந்துணர்வுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்னர் அவர்களின் பின்னணி, அனுபவம், திறன்கள் போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். அவற்றை முன்வைத்து மரியாதையோடும் புரிதலோடும் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் முரண்களைக் களைந்து இணக்கமான சூழலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இனம்காண்பதில் தடுமாற்றம் ஏற்படுவது இயல்புதான்.

ஒரு புதிய இடத்துக்குப் போகும்போதும் முற்றிலும் அறிமுகமில்லாத மனிதர்களைச் சந்திக்கும்போதும் அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போதும் அசவுகரியமாக உணர்வது பொதுவான இயல்பு. புதிய சூழலுக்குப் பழகும் வரையில் யாருடனும் பேசாமல் கொஞ்சம் இறுக்கமாக இருப்போம். அதைப் பார்ப்பவர்கள் "இவருக்கு நம்முடன் பேசிப் பழகப் பிடிக்கவில்லை" என்றோ "தன்னைப் பற்றி உயர்வாகவும் நம்மைப் பற்றி மட்டமாகவும் நினைக்கிறார்" என்றோ நினைத்தால் அது இன்னும் பல குழப்பங்களைத்தானே விளைவிக்கும். நாம் அசவுகரியமாகவும் படபடப்பாகவும் உணர்வதை குறைவான சொற்களில் வெளிப்படையாகத் தெரிவிப்பது சூழலின் இறுக்கத்தைத் தளர்த்திவிடுமல்லவா.

கீழே உள்ள சொற்றொடர்களைப் படியுங்கள்:

* “அலுவலகத்தில் மேலாளர் என்னை மதிப்பதே இல்லை."


* “யாரும் என்னைப் புரிந்துகொள்ளவே இல்லை."


* “என்னை யாரும் பொருட்டாக நினைக்கவில்லை."

இவை எதுவும் நம்முடைய உணர்வுகளைக் குறிக்கவில்லை. அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றிய நம்முடைய எண்ணங்கள் மட்டுமே. பெரும்பாலான நேரத்தில் இவற்றை நம்முடைய உணர்வுகள் என்று தவறாக நினைத்துக்கொண்டுவிடுகிறோம். சொல்லப்போனால் அடுத்தவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நாம் நினைத்துக்கொள்வதைத்தான் இந்தச் சொற்றொடர்கள் எடுத்துக்காட்டுகின்றன.

வருத்தமாக இருக்கிறது, ஊக்கமிழந்துவிட்டேன், எரிச்சலாக இருக்கிறது, கவலையாக இருக்கிறது, மனம் புண்பட்டது போன்ற உணர்வுகளை விவரிப்பதற்கு பதிலாக வேறு எதை எதையோ சொல்கிறோம், யார் யாரையோ காரணம் காட்டுகிறோம். எனவேதான் உணர்வுகளை எடுத்துச் சொல்லவும் அவற்றை விவரிக்கும் சரியான சொற்களைத் தெரிந்துவைத்திருப்பதும் அவசியமாகிறது.


(* நிகழ்வு உண்மை, ஆனால் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)


(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in