வாழ்க்கையே நேசம் - 5: உறவைப் பலப்படுத்தும் உணர்வுகள்

வாழ்க்கையே நேசம் - 5: உறவைப் பலப்படுத்தும் உணர்வுகள்

ஒரு நாளில் எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் எழுகின்றன என்பதை சென்ற வாரம் செய்த சிறிய பயிற்சியின் மூலம் தெரிந்துகொண்டோம். ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? அடுத்தவரை வர்ணிக்கும் அடைமொழிகளை நூற்றுக்கணக்கில் தெரிந்துவைத்திருப்போம். ஆனால் நம் உணர்வுகளையும் அவற்றின் வெவ்வேறு நிலைகளையும் பட்டியலிடச் சொன்னால் தடுமாறுவோம்.

உதாசீனப்படுத்தப்படும் உணர்வுகள்

எடுத்துக்காட்டாக கோபத்துக்கும் எரிச்சலுக்கும் வெறுப்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் துல்லியமாக உணர வேண்டும். அதைச் செய்தால்தானே அடுத்தவர்களிடம் எடுத்துச்சொல்ல முடியும். உணர்வுகள் சிம்ஃபனி இசைத்தொகுப்பின் வெவ்வேறு இசைக்கோவைகளைப் போன்றவை. வலிமையானதாகவும் வாஞ்சைமிக்கதாகவும் மென்மையானதாகவும் கூருணர்வுமிக்கதாகவும் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பக்குவப்பட்ட மனமுடையவர்களால் இந்த நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்குத் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்.

குழந்தைகளாக இருக்கும்போது ஒரு நாளில் பல மணி நேரத்தை பள்ளியில் கழிக்கிறோம். எப்போதாவது, “நீ இப்போது எப்படி உணர்கிறாய்?" என்ற கேள்வியை யாராவது நம்மிடம் கேட்டிருக்கிறார்களா?கல்வி நிலையங்களில் எப்படி சிந்திக்க வேண்டும் என்றும் எப்படி செயல்பட வேண்டும் என்றும் கற்றுக்கொள்கிறோம். நம் உணர்வுகள் முக்கியமில்லை என்றும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது முக்கியம் என்றும் கற்றுக்கொள்கிறோம். உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்பதைவிடவும் சிந்தித்துச் செயல்படுவதே உயர்வானது என்று தெரிந்துகொள்கிறோம். ‘மற்றவர்கள் எதைச் சரியென்று ஏற்றுக்கொள்வார்கள்?’ என்று சிந்தித்து அதன்படி நடப்பதிலேயே பாதி வாழ்க்கையை ஓட்டிவிடுகிறோம்.

உணர்வுகளை உணர்வோம்

இந்தச் சூழல் காட்சியைப் பாருங்கள். வீட்டிலோ பள்ளி அல்லது கல்லூரி விடுதியிலோ இதை எதிர்கொண்டிருப்போம். ஒருவர் அதிகமான ஒலியில் அவருக்கு விருப்பமான பாடல்களைக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இது தொடர்ந்து நடக்கும்போது நம்முடைய கவனத்தைச் சிதறடிக்கலாம் அல்லது தூங்குவதற்கு இடைஞ்சலாகலாம். இந்த நிகழ்வு நமக்குள் என்னவிதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை என்றாவது யோசித்திருக்கிறோமா? இரவு நேரத்தில் சத்தமாகப் பாட்டு கேட்பது சரியல்ல என்பது தெரியும். அது அந்த நபரின் இயல்பு எனலாம் அல்லது ஆளுமை பிறழ்வு (personality disorder) என்றுகூட நினைக்கலாம். ஆனால் இவையெல்லாம் நம்முடைய கருத்து அல்லது அந்த நபர் குறித்த முன்முடிவு மட்டுமே. நாம் என்ன பார்க்கிறோம் என்பது பற்றியோ அது நமக்குள் தோற்றுவித்த உணர்வுகளைப் பற்றியோ அந்த நபருடன் இன்னும் பேசவில்லை.

தூங்க முடியவில்லையே... நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தால்தான் மறுநாள் வேலைகளை நன்றாகச் செய்ய முடியும் என்பது நம்முடைய அப்போதைய நிலைமை என்று வைத்துக்கொள்வோம். இதனால் என்னென்ன உணர்வுகள் தோன்றும்? எரிச்சல், பதற்றம், பாட்டு கேட்கும் நபரின் மனம் புண்படாமல் எப்படி பேசுவது என்ற சங்கடம், குழப்பம். இப்படி ஒரு கலவையான உணர்ச்சி தோன்றும்.

இப்போது நம்மால் இவ்வளவு தெளிவாகச் சிந்தித்து எழுதவோ பேசவோ முடிகிறது. அந்த நேரத்தில் இந்த அளவுக்கு உணர்வுகளை அறிந்துகொள்ளும் முயற்சியில் நம்மில் பெரும்பாலானோர் ஈடுபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வின்போதும் நமக்குள் தோன்றும் உணர்வுகளைக் கவனிப்பது அவசியம். அப்போதுதான் அதைத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும்.

தேவையில்லாத உணர்வா பயம்?

சில பத்தாண்டுகளுக்கு முன்னால் நகரங்களின் தெருக்களில் பசுக்களும் எருமை மாடுகளும் சுதந்திரமாகத் திரியும். பெரும்பாலும் அவை தன்பாட்டுக்கு அசை போட்டுக்கொண்டு அமைதியாகத்தான் இருக்கும். ஆனாலும் சிறுவயதில் அவற்றைப் பார்த்தால் இனம்புரியாத பயம் தோன்றும். தெரு நாய்களைப் பார்த்தாலும் அதே போலத்தான். அப்போதெல்லாம் வீட்டில் இருப்பவர்களோடு அக்கம்பக்கத்து வீட்டினரும் குழந்தைகளை கடைக்கோ வேறு எடுபிடி வேலைக்கோ ஏவுவது வழக்கம். குழந்தைகளும் உற்சாகமாக அந்த வேலைகளைச் செய்வோம். ஆனால் சில குழந்தைகள் தயங்கி நின்றால், “ஏன் பயப்படுகிறாய்? என்ன உணர்வு தோன்றுகிறது?" என்றெல்லாம் யாரும் கேட்டதாக நினைவில்லை. திட்டி விரட்டி என்று எப்படியாவது வேலைவாங்குவார்கள். அவர்களைப் பொறுத்தவரையிலும் வேலை முடிய வேண்டும், அதுதான் அந்த நேரத்தில் முக்கியம் என்றுதான் விளக்கம் சொல்வார்கள்.

இன்னும் சில குழந்தைகள் பள்ளிச் சூழலில் வயதில் மூத்த குழந்தைகளையோ உயர்வகுப்பில் படிப்பவர்களையோ பார்த்துப் பயப்படலாம். அல்லது உறவினர்களில் சிலரைப் பார்த்தால் பயப்படலாம். இவை எல்லாவற்றுக்கும் ஒரேயொரு தீர்வைத்தான் சொல்வோம்: பயப்படக் கூடாது!

பயப்படுபவர்களிடம், "இத்தனை வயதாகிவிட்டது, இன்னுமா பயப்படுகிறாய்?", "அவர் எவ்வளவு நல்ல மனிதர், அவரைப் பார்த்து பயப்படுகிறாயே!" என்றெல்லாம் பேசுவோம். ஆண்கள் என்றால் இன்னும் சில வாக்கியங்களைச் சேர்த்துக்கொள்வோம். “தைரியம் புருஷ லட்சணம்”, “பயமின்மை அல்லது அச்சமின்மை என்பது ஆண்களின் முதன்மையான இயல்பு” என்று விளக்குவோம்.

எளிதில் வடுப்படும் பக்கம்

பயம் அல்லது அச்சம் என்ற உணர்வு நம்முடைய மென்மையான எளிதில் வடுப்படும் (vulnerability) பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. அதை வெளிப்படையாகத் தெரிவிப்பது என்பது மன உறுதியையும் தைரியத்தையும் சுட்டுகிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். ஆனால் இதை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் குழந்தைகளை எப்படி நடத்துகிறோம். கொஞ்சமும் புரிதலின்றி அந்த உணர்வையே மழுங்கடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அல்லது அது சரியான உணர்வல்ல என்று பாடம் எடுக்கிறோம்.

சொல்லப்போனால் 'உணர்வு', 'உணர்ச்சி' போன்ற சொற்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோமா அல்லது தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்துபவர்களை இயல்பானவர்கள் என்று ஏற்றுக்கொண்டு இருக்கிறோமா? இரண்டு கேள்விகளுக்குமே 'இல்லை' என்பதுதான் பெரும்பாலானோரின் விடையாக இருக்கும். என்றாலும் உங்கள் அனுபவம் குறித்த முன்முடிவுக்கு வருவது சரியல்ல. உங்களில் யாராவது இந்தக் கேள்விகளுக்கு 'ஆம்' என்ற விடையைச் சொல்லி இருந்தால் அதுகுறித்து எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்களேன். இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in