வாழ்க்கையே நேசம் - 4: உணர்வுகளைத் தெரிவிக்க மொழியின் உதவி

வாழ்க்கையே நேசம் - 4: உணர்வுகளைத் தெரிவிக்க மொழியின் உதவி

இந்தத் தொடரில் வாராவாரம் நான் எழுதிவரும் கட்டுரைகளைப் படித்துவிட்டு, நண்பர்களும் மற்றவர்களும் அவர்களின் கருத்தைப் பகிர்ந்துகொள்வது ஊக்கமூட்டுகிறது. என் கருத்துகளை இன்னும் தெளிவாக எடுத்துச் சொல்லவும் உங்களுடன் கலந்துரையாடல் செய்யவும் வாய்ப்பளிக்கிறது. அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்ற வாரம் வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தை அன்றாட வாழ்வில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து எழுதியிருந்தேன். குறிப்பாக நம் குழந்தைகளிடம் எப்படி பேசலாம் என்று விளக்கியிருந்தேன். அதைப் படித்த பள்ளித் தோழி, நண்பர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் இப்படி எழுதியிருந்தார்: “நாளடைவில் இந்த வித்தை நம் குழந்தைகளிடம் எடுபடலாம். ஆனால் இந்தக் காலத்து குழந்தைகளிடம் இனிப்பான பேச்செல்லாம் எடுபடுவதில்லை, பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதைத்தான் செய்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்களுக்குக் கனவுருப் புனைவாற்றல் சார்ந்த மெய்நிகர் உலகில் வாழத்தான் பிடிக்கிறது. ஒரு வேளை நானும் அவர்களைப் போலவே மாற வேண்டுமோ என்னவோ.”

உறவைச் செம்மைப்படுத்த உதவும் தகவல் பரிமாற்றம்

தோழியிடம் சொன்னதைத்தான் உங்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் என்பது குழந்தைகளையும் மற்றவர்களையும் நம் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்ளச் செய்யும் செயல்முறையல்ல. எல்லோரையும் ஒரே தளத்தில் அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தருகிறது. நம் உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களிடம் குழப்பமில்லாமல் எடுத்துச் சொல்ல உதவுவதோடு அவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது. இதன்மூலம் அடுத்தவரிடம் நமக்கு இருக்கும் உறவைச் செம்மைப்படுத்த உதவுகிறது.

ஏற்கெனவே சொன்னது போல வன்முறையற்ற தகவல் பரிமாற்ற முறையைப் பின்பற்றும்போது என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்து அது நமக்கு பிடிக்கிறதா இல்லையா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். பிறகு அது நமக்குள் கிளர்த்தும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம். பிறகு அடுத்தவரிடம் நம் தேவை என்ன என்பதைத் தெளிவான மொழியில் இயல்பான தொனியில் சொல்கிறோம்.

தகவல் பரிமாற்றம் என்பது ஓர் இருவழிப் பாதை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். முதலாவதாக, தேவைகளை எடுத்துச் சொல்வதோடு அடுத்தவர் என்ன மறுமொழி சொல்கிறார் என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அடுத்தவர் என்ன சொல்லவருகிறார் என்பதைத் திறந்த மனதுடன் எந்த முன்முடிவும் சார்புநிலையும் இல்லாமல் கேட்கத் தயாராகும்போது ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்தத் தொடங்குகிறோம். இது இரு தரப்பினரும் அடுத்தடுத்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் கலந்துரையாடவும் வழிவகுக்கிறது. இறுதியில் தெளிவும் பிறக்கிறது. இதில் எங்கேயும் நாம் சொல்வதைத்தான் அடுத்தவர் கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை.

உடனுக்குடன் தீர்வைத் தரும் வழிமுறையா?

வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் உடனடி வலிநிவாரணி போல உடனுக்குடன் தீர்வைத் தரும் வழிமுறை அல்ல. அதன் அடிநிலையையும் உட்கருத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்வதோடு இடைவிடாத பயிற்சியும் மனம் தளராத வேண்டும். 'சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்' என்பது போல எந்தத் திறனையும் கைக்கொள்ள பயிற்சி அவசியம்தானே. என் வாழ்வில் மிதமான சாத்வீகமான வாய்மொழி வன்முறைக்கும் இடமில்லை என்று உறுதிபூண வேண்டும்.

நம் பிரச்சினைக்கெல்லாம் காரணம் மற்றவர்களும் அவர்களின் செயல்களும்தான் என்பதைச் சொல்லிச் சொல்லி பழகிவிட்டோம். குடும்பத்திலும் பணியிடத்திலும் பொதுவெளிகளிலும் எல்லோரும் இப்படிச் சொல்வதைக் கேட்டுக் கேட்டு உள்வாங்கிக்கொண்டுவிட்டோம். ஆனால், நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள முடியும்.

உணர்வுகளை விவரிக்க உதவும் சொற்கள்

ஒரு நிகழ்வைப் பார்க்கும்போது நமக்குள் எழும் உணர்வுகளைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால் அந்த உணர்வுகளைத் தெளிவாக எடுத்துச் சொல்வதற்கான சொற்களை நான் முழுவதும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெரிந்துகொண்டபோது திடுக்கிட்டேன். ஒவ்வொரு உணர்வுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோட்டைப் புரிந்துகொள்வதோடு அதை மொழியின் மூலம் தெளிவாக எடுத்துச் சொல்லவும் விழிப்புணர்வுடன் பயிற்சி செய்தேன். நாளடைவில் அதில் முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாக நம் உணர்வுகளை மூன்று அல்லது நான்கு சொற்களுக்குள் அடைத்துவிடுகிறோம்: மகிழ்ச்சி, கோபம், சோகம், வெறுப்பு. இவற்றைத் தவிர வேறு என்னென்ன சொற்களால் நம் உணர்வுகளை விவரிக்க முடிகிறது என்று பார்க்கலாம். இப்போது ஒரு சின்ன பயிற்சியைச் செய்யலாமா? இதைச் செய்ய இரண்டு நிமிடங்கள் போதும். பேப்பர் பேனா இருந்தால் நல்லது. இல்லையென்றால் அலைபேசியின் நோட்ஸ் செயலியைக்கூட பயன்படுத்தலாம்.

உணர்வுகளைப் பட்டியலிடுங்கள்

இன்று காலை முதல் இப்போது வரை நீங்கள் என்னென்ன உணர்வுகளை எதிர்கொண்டீர்கள் என்பதையும் அந்த உணர்வுகளை விவரிக்கும் எத்தனை சொற்கள் உங்களின் சொல்வளத்தில் இருக்கிறது என்றும் முயன்று பாருங்களேன்.

உங்களுடைய தேவைகள் நிறைவேறிய தருணங்களில் ஏற்பட்ட உணர்வுகளைக் குறிக்கும் சொற்களை முதலில் பட்டியல் இடுங்கள். ‘மகிழ்ச்சி, உற்சாகம், சுகம், உவகை, நிறைவு, பெருமை, புளகாங்கிதம், இனிமை, நிறைவு, ஆசுவாசம், தன்னம்பிக்கை, நட்புணர்வு, ஆச்சரியம், சௌகரியம், அற்புதம், அபாரம், அன்பு, ஆரவாரம், களிப்பு, உவப்பு, ஊக்கமூட்டும், அகமகிழ்வு, சந்தோசம், ஆர்வம், ஆவல்’ என்று வெவ்வேறு சொற்களில் விவரிக்கலாம். இந்தப் பட்டியலில் இன்னும் நூறு சொற்களைச் சேர்க்கலாம்.

தேவைகள் நிறைவேறாதபோது ஏற்படும் உணர்வுகளை ‘கோபம், எரிச்சல், வெறுப்பு, ஆத்திரம், சீற்றம், விரக்தி, துயரம், அழுகை, மனமுடைதல், கலக்கம், சோர்வு, வாட்டம், குழப்பம், சங்கடம், தடுமாற்றம், அச்சம், திகில், ஒட்டாமல் இருப்பது, அயர்ச்சி, தனிமை, அலுப்பு, சலிப்பு, சுவாரசியமின்மை’ போன்ற சொற்களால் விவரிக்கலாம்.

உணர்வுகளும் மொழிவளமும்

நம் உணர்வுகளை விவரிக்க இத்தனை சொற்களா என்று வியப்பாக இருக்கிறதா? இதையெல்லாம் அன்றாட வாழ்வில் யாரும் பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. அதனால்தான் நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவோ அடுத்தவர்களிடம் அதை எடுத்துச் சொல்லவோ தெரிவதில்லை.

“எனக்கு என்னமோ பண்ணுகிறது!", “ரொம்ப ஹேப்பியா இருக்கேன்”, “அவன் மேல வெறுப்பா இருக்கு", “அவளைப் பார்த்தால் கோபம் கோபமா வருது" என்று ஒரு கைவிரலில் எண்ணி முடித்துவிடக்கூடிய அளவிலான சொற்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

எத்தனை வளமான மொழியைக் கொண்டிருக்கிறோம். மொழியின் வளர்ச்சி அதன் மக்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. என்றாலும் அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். இன்று முதல் உங்களுக்குள் ஏற்படும் வெவ்வேறு உணர்வுகளை விவரிக்கும் சொற்களைப் பயன்படுத்த முயற்சியுங்கள். இங்கே நாம் பட்டியலிட்ட சொற்களோடு வேறு எவற்றை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்பதைக் கவனியுங்கள். அது குறித்து உங்களின் எண்ணத்தை எங்களுடன் பின்னூட்டத்திலோ மின்னஞ்சல் வழியாகவோ பகிர்ந்துகொள்ள முடியுமா?

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in