வாழ்க்கையே நேசம்-38: சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வது அவசியமா?

வாழ்க்கையே நேசம்-38: சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வது அவசியமா?

கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சியா அல்லது பொதுவாக எல்லோரும் சொல்வதைப் போல கெட்ட உணர்ச்சியா என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசலாம். ஒரு நாளில் நமக்குக் கோபம் ஏற்படுத்தும் பல நிகழ்வுகள் நடக்கலாம். அந்தக் கோபம் என்ற உணர்ச்சி ஏன் பொங்குகிறது? நம்முடைய ஏதோ ஒரு தேவை நிறைவேறாததால் ஏற்படுகிறது. அதனால் அந்தத் தேவையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற உதவாத மனிதரைப் பற்றிய நம்முடைய முன்முடிவு தீர்ப்பாக உறுதிப்படுகிறது. இருவரையும் இணைக்கும் இழை அறுபடுகிறது. அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்ற எண்ணம் குலைகிறது. அவர்களை வில்லன்களாகவோ எதிரிகளாகவோ புனைந்துகொள்கிறோம்.

முன்முடிவுகளும் மதிப்பீடுகளும் தீர்ப்புகளும் அடுத்தவர்களைவிடவும் நமக்கு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எரிச்சலோடு ஏற்படும் பதற்றம் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். கோபமே இல்லாத வாழ்க்கை வாழ முடியாது. மற்ற உணர்ச்சிகளைப் போலவே அதுவும் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் நடந்துகொள்கிறோம். அடிப்பது, திட்டுவது, கத்துவது, பொருட்களைச் சேதப்படுத்துவது போன்ற வழிகளில் அதை வெளிப்படுத்துகிறோம். எல்லோரையும் மோசமான பாதிப்புக்கு ஆளாக்குவதால் அதைக் கெட்ட உணர்ச்சியாகப் புனைந்துகொள்கிறோம்.

பெரிய எடுத்துக்காட்டெல்லாம் வேண்டாம். டிக்கெட் கவுன்டரில் வரிசையில் நிற்கும்போது முன்னால் இருப்பவர் சீட்டு வழங்குபவரிடம் சந்தேகமோ விளக்கமோ கேட்டாலோகூட, 'உஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்' என்று பரிதவிப்போம். சிலர் புலம்பலாக வெளிப்படுத்துவோம், இன்னும் சிலர் மனதிற்குள் திட்டுவோம். ஓரிருவர் வாய்விட்டு அதட்டலாகப் பேசுவார்கள். என்ன ஒரு ஐந்து நிமிடம் தாமதமாகலாம், பத்து நிமிடமே ஆகட்டுமே. அதற்கான பொறுமையைக்கூட இழந்துவிட்டிருக்கிறோம்.

அந்தப் பத்து நிமிடத்தில் எந்தெந்த வழிகளில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாமா?கையில் இருக்கும் புத்தகத்தைப் படிக்கலாம். அலைபேசியில் சமூக வலைதளத்தை மேயலாம். சுற்று முற்றும் வேடிக்கை பார்க்கலாம். மனதுக்குள் ஒரு பாடலை முணுமுணுக்கலாம். அலைபேசியில் செய்துமுடிக்கும் வேலையைச் செய்யலாம். இப்படியாக, எரிச்சலடைவதற்குப் பதிலாக நம்மை அமைதியாக வைத்துக்கொள்ள உதவும் பல வழிகள் இருக்கின்றனவே!

என்ன நடந்தாலும் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. உணர்ச்சியில்லாமல் இருக்க முடியாது. ஆனால் 'சரி’, ’தவறு' என்ற மதிப்பீடுகளைச் செய்யாத நிலையை அடையலாம். அந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். இதனால் மனம் அமைதியுறும்.

யார் யாரிடத்தில் கோபமும் ஒவ்வாமையும் ஏற்படுகிறது என்பதையும் பார்ப்போம். சரி, தவறு என்ற நிலைக்கு அப்பால் நாம் வளர்ந்த சூழல், தனிப்பட்ட பழக்கவழக்கம் போன்றவற்றால் ஒரு சிலரோடு அதிகமாக ஒட்டுதல் ஏற்படும். இயல்பான நெருக்கத்தை உணர்வோம். ஆனால் நம்மில் இருந்து மாறுபட்டவர்களோடு அந்த நெருக்கத்தையும் பிணைப்பையும் வெளிப்படைத் தன்மையையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் தவிப்போம். இனம், மதம், மொழி போன்ற வெளிப்படையான பிரிவுகளைத் தாண்டிய விஷயம் இது.

இந்த ஒவ்வாமையை எப்படிச் சமாளிப்பது? சகிப்புத்தன்மையை எப்படி வளர்த்துக்கொள்வது? முதலில் ஒன்றை இப்படித்தான் செய்தாக வேண்டும், இப்படித்தான் இருந்தாக வேண்டும் போன்ற கட்டாயப்படுத்தலை உதறித்தள்ள வேண்டும். இந்தக் கட்டாயப்படுத்தல் நம்மையும் அறியாமல் எதிர்ப்புணர்வையும் ஒவ்வாமையையும் தூண்டுகிறது.

மனதுக்கு ஒவ்வாத மனிதர்களிடம் சகிப்புத்தன்மையை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதுதானே நம் கேள்வி!அதையும்கூட வலிந்து வரவழைத்துக்கொள்ள வேண்டியதில்லை. எல்லோரிடமும் இயல்பாக, மரியாதையோடு நடந்துகொள்வதே போதுமானது. எல்லோருக்கும் இந்த உலகில் இடமுண்டு என்ற கருத்தை மனதில் இருத்திக்கொள்வதே போதுமானது.

இன்னும் ஒரு படி மேலே போய் இவர்களின் எந்தச் செயல்பாடு எனக்குள் மகிழ்ச்சியற்ற தன்மையைத் தூண்டுகிறது என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று சிந்திக்கலாம். ஒவ்வாத மனிதர்கள் என்ற பட்டியல் நம் எல்லோருக்குமே பெரும்பாலும் நீளமாகத்தான் இருக்கும். அவர்களுடனான ஒவ்வொரு நிகழ்வையும் அலசினால் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

முதலாவதாக, அந்த மனிதர் என்ன செய்கிறார் என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். அடுத்து, அவரைப் பற்றிய எந்த மதிப்பீடும் முன்முடிவும் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். இதனையடுத்து அவரின் எந்தச் செயல் நம்முடைய தேவையை நிறைவேற்றவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போது நம்முடைய புரிந்துணர்வு நிலையை முடுக்கிவிட வேண்டும். அந்த மனிதரின் செயலால் தேவை நிறைவேறாமல் மனம் துவளும் நமக்கு நாமே புரிந்துணர்வைக் காட்டிக்கொள்வது அவசியமல்லவா?!

இதையெல்லாம் செய்துமுடித்த பிறகு புரிந்துணர்வை அந்த மனிதரின் பக்கம் செலுத்த வேண்டும். நமக்குப் பிடிக்காத ஒரு செயலை அந்த மனிதர் செய்யும்போது அவருடைய எந்தத் தேவை நிறைவேறுகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் செய்தால் அவர்களும் நம்மைப் போன்ற சராசரியான தேவைகளைக் கொண்ட மனிதர்கள்தான் என்ற தெளிவு பிறக்கும். அவரைச் சகித்துக்கொள்கிறேன் என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொல்ல வேண்டியதில்லை. அந்த மனிதருக்குள் இருக்கும் உயிர்ப்பை உணர முடியும். அப்படிச் செய்தால் எல்லா மனிதர்களுக்கிடையேயும் இருக்கும் இயல்பான நேசம் நம்மை அவரோடு பிணைத்துவிடும்.

மேலே சொன்னவற்றில் எதுவுமே புதிய உத்தியல்ல. ஆனால் கோபம், எரிச்சல், வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களைத் தாங்க முடியாதபோது தெளிவாகச் சிந்திக்க முடியாது. கூடவே முன்முடிவுகளும் மதிப்பீடுகளும் வேறு சேர்ந்துகொண்டால் கேட்கவே வேண்டாம். அந்த நேரத்தில் அடுத்தவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுவோம். எங்கும் எப்போதும் வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்று உறுதியோடும் விழிப்புணர்வோடும் இருந்தால் அமைதியை அடையலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in