வாழ்க்கையே நேசம்-37: கோபம் என்பது கெட்ட உணர்ச்சியா?

வாழ்க்கையே நேசம்-37: கோபம் என்பது கெட்ட உணர்ச்சியா?

ஒவ்வொரு வாரமும் வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் என்ற தலைப்பில் பல விஷயங்களைப் பற்றி அலசி வருகிறோம். ஆனால் படிப்பதும் எழுதுவதும் வேறு, அன்றாட வாழ்விலும் செயலிலும் வன்முறையில்லாமல் செயல்படுவது வேறு. பேசுகிறபடியே நடப்பது எளிதான செயலல்ல. இது நீங்கள், நான் என எல்லோருக்குமே சவாலாக இருக்கும் விஷயம்தான்.

சில விஷயங்களை நாள்படத்தான் கற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் பல வருடங்களாகப் படிந்துவிட்ட பழக்கமொன்றை ஒரே நாளில் கைவிட முடியாது. இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் ஒரே மாதிரியான பழக்கப்பட்ட விஷயங்களில் மனதுக்கு ஆறுதலும் இதமும் கிடைக்கிறது. அதனால் நாம் அதையே நாடிப்போகிறோம்.

எப்போதோ படித்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. மீனவப் பெண் ஒருத்தி ஓர் இரவைப் பூ விற்கும் தோழியின் வீட்டில் கழிக்க நேரிடுகிறது. பூக்கூடைகள் அடங்கியிருந்த அறையில் அவளைத் தங்க வைக்கிறாள் தோழி. பூக்களின் நறுமணத்தில் நன்றாகத் தூங்கி எழட்டும் என்ற நல்லெண்ணம்தான் காரணம். பொதுவாக யாராக இருந்தாலும் வாசனை மிகுந்த அந்த அறையில் நன்றாக உறங்கியிருப்பார்கள். ஆனால் மீனவப் பெண்ணுக்கோ தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தபடி தவித்தாள். இறுதியில் மீன் கூடையில் தண்ணீரைத் தெளித்து அதைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு முகர்ந்து பார்த்தபடி இருந்ததற்குப் பிறகுதான் தூக்கம் வந்ததாம்.

உணவு, உடை போன்றவையோடு தொட்டுணர முடியாத (intangible) உள்ளம் உணர்வு சார்ந்த விஷயங்களுக்கும் நாம் அடிமையாகிவிடுகிறோம். சிறு வயதில் இருந்து பதற்றத்தோடு (anxiety) இருப்பவர்களுக்கு ஆறுதலும் இதமும் தருவதே அந்தப் பதற்ற உணர்வுதான். எப்போதும் கூச்சலும் விவாதமும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தவர்களால் எளிதில் அந்தச் சூழலில் இருந்து வெளிவர முடியாது. அதைப் போன்ற சூழலை அவர்களே எப்படியாவது உருவாக்குவார்கள் அல்லது வரவழைத்துக்கொள்வார்கள். இதுபோன்ற உளவியல் சிக்கல்களில் இருந்து மீளத் தொடர்ச்சியான உளவியல் ஆலோசனையும் விழிப்புணர்வும் தேவை. ஒரு முறை தவறினாலும் மீண்டும் மீண்டும் விடாமல் முயற்சி செய்யும் முனைப்பும் அவசியம்.

வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க இதேபோன்ற விழிப்புணர்வும் முனைப்பும் விடாமுயற்சியும் தேவை. முதலில் நாம் ஒவ்வொருவரும் வளரும் குடும்பச் சூழலை கூர்ந்து நோக்க வேண்டும். 'நான் சொல்வதுதான் சரி. நான் சொல்வதை நீ முதலில் கேள். கீழ்ப்படிந்து நட. எதிர்த்துப் பேசாதே.' என்று சொல்லும் பெற்றோர் இருக்கிறார்களா? 'தப்பு செய்தவர்களை தண்டித்தே தீரவேண்டும். அவன் எப்படி அப்படிச் செய்யலாம், என்ன செய்கிறேன் பார். அவள் எப்படி அப்படிப் பேசலாம், எப்படிக் கேள்வி கேட்டு புத்தி வரச் செய்கிறேன் பார்.' உங்கள் குடும்பச் சூழலில் பெற்றோரும் மற்றோரும் இப்படிப் பேசுவதைக் கேட்டு வளர்ந்தவர்களில் ஒருவரா நீங்கள்? நம்மில் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட சூழலில்தான் வளர்ந்தோம், வாழ்கிறோம். அப்படியென்றால் நமக்குள்ளும் வன்முறை கனன்றுகொண்டுதான் இருக்கும்.

எவ்வளவுதான் படித்திருந்தாலும் விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் சட்டென வன்முறையை வெளிக்காட்டும் சொல்லோ செயலோ வெளிப்பட்டுவிடும். இதற்காக நம்மை நாமே திட்டவோ நொந்துகொள்ளவோ தேவையில்லை. ‘எனக்குள் இருக்கும் இந்தப் பழக்கத்தைத் தெரிந்துகொண்டேன். அடுத்த முறை இன்னும் விழிப்புணர்வோடு செயல்படுவேன் என்று உறுதிபூண்டால் போதும்.

காலை எழுந்தது முதல் அலுவலகம் செல்லும் வரையில் எத்தனை நிகழ்வுகள் எத்தனை தூண்டுதல்கள். எதிர்ப்படுபவர்கள் எல்லோருமே வன்முறையாளர்களாகத்தான் தோன்றுவார்கள். சரியான நேரத்துக்கு வேலைக்கு வராத பணிப்பெண் முதல் நேரம் காலம் தெரியாமல் அலைபேசியில் அழைக்கும் உறவினர் வரை, சவாரியை ஏற்க மறுக்கும் ஊபர் ஆட்டோக்காரர் முதல் சொன்னபடி வேலை செய்யாத பணியாளர் வரை எல்லோருமே பரம எதிரிகளாகத்தான் உருவெடுப்பார்கள்.

இப்படி நமக்கு ஒவ்வாத வகையில் எல்லோரும் நடக்காதபோது வரும் கோபம் தவறானது என்கிறீர்களா? கோபம் கெட்ட உணர்வல்ல. எந்த உணர்வுமே தவறான, கெட்ட விஷயமல்ல. கோபம் நமக்கு வழிகாட்டும் உணர்வு. கோபப்படாதே என்று சொல்பவர்கள் இதுவரையில் அந்த உணர்வை எப்படிக் கையாள்வது என்று சொல்லித் தந்தார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.

கோபம் என்ற உணர்ச்சி பெருக்கெடுக்கும்போது என்ன செய்ய வேண்டும்? கோபம் வருவதே பிரச்சினையல்ல. கோபம் என்ற உணர்ச்சி நமக்குள்ளே வெடிக்கும்போது நமக்குள் உதிக்கும் எண்ணங்கள்தான் பிரச்சினையானவை. அந்த நேரத்தில் நம் எண்ணங்களுக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த வேண்டும். அடுத்தவர்கள் குறித்து நமக்குள் தோன்றும் முன்முடிவுகளை ஆராய்ந்து அப்போதைய நம் தேவை என்னவென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் அடுத்தவர்களைப் பற்றி ஏன் நினைக்கிறாய் என்று நம்மையே கடிந்துகொள்ளக் கூடாது. ஊரில் இருப்பவர்களுக்கு இதுவரை நாம் காட்டிவந்த புரிந்துணர்வு என்ற ஒளியை நம் பக்கம் திருப்ப வேண்டும். அடுத்தவர்களின் செயல் குறித்து சரி, தவறு என்ற தீர்ப்பு வழங்க என்ன காரணம் அதற்குப் பின்னால் இருக்கும் நம் தேவை என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும். இந்த வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் என்ற தற்பயணத்தைத் தொடங்கி ஓரிரு வருடங்கள் கழித்துத்தான் இது ஓர் அனிச்சைச் செயலாக மாறியிருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சரியான நேரத்துக்கு வேலையை முடிக்காத பணியாளர் குறித்து ஏற்படும் கோபம் நியாயமானதுதான். என்றாலும் என்னுடைய அப்போதைய தேவை என்ன என்று யோசித்தால் அந்தக் கோபம் மட்டுப்படும். கூடவே 'சரி, தவறு', 'நல்லவன், மோசமானவன்' போன்ற தீர்ப்புகளைத் தள்ளிவைத்து நம்மைப் போன்ற மனிதர்களாக அணுக முடியும். அப்படி எல்லோரும் சமம் என்ற நிலையில் இருந்து எந்தப் பிரச்சினையையும் அணுகும்போது அங்கு வன்முறைக்கு இடமே இருக்காது என்பது உண்மைதானே?

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in