வாழ்க்கையே நேசம் - 36: வன்முறை சுழற்சியை உடைக்கும் வழிகள்

வாழ்க்கையே நேசம் - 36: வன்முறை சுழற்சியை உடைக்கும் வழிகள்

புரிதல் படிநிலை, பார்வை மாற்றம் ஆகியவை குறித்து தெரிந்துகொள்வது வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தைக் கடைப்பிடிக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. முறைசார்ந்த பணியிடத்தில் அழுத்தம் நிறைந்த சூழலில் குற்றம்சாட்டலும் பொறுப்புத் துறப்பும் அன்றாட நிகழ்வாகிவிட்டபோது புரிந்துணர்வோடும் பரிவோடும் கரிசனத்தோடும் செயல்பட முடியுமா என்ற கேள்வி எழலாம். வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் என்பது குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை, அதைச் செய்வதன்மூலம் எதிராளி உடனடியாக நமக்குத் தேவையான விதத்தில் பணியை முடிப்பார் என்ற எண்ணத்தில் இருந்து எழும் கேள்வி இது.

நாம் எப்படி நடந்துகொள்வது?

வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் என்பது வாழ்வியல் மாற்றம். நமக்கு மன நிம்மதியைத் தருவதோடு நாளடைவில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையிலும் அமைதி ஏற்படுத்த உதவும் செயல்முறை. எங்கெங்கும் எப்போதும் யாரிடத்தும் எண்ணம், சொல், செயல் இவற்றின்மூலம் வன்முறையை வெளிப்படுத்தமாட்டேன், புரிந்துணர்வோடு நடப்பேன் என்ற உறுதியை மேற்கொள்வது. புத்தர், அண்ணல் காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, திக் நாட் ஹன் போன்ற அமைதியின் தூதுவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் புரியும். இந்தப் பட்டியலில் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்னும் பல சாமானியர்களின் பெயர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால் நாம் தலைமுறை தலைமுறையாக பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளாகவே வளர்ந்திருக்கிறோம். பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா என்ற நம் குடும்பத்து பெரியவர்கள் வன்முறையோடு வளர்க்கப்பட்டு நம்மீதும் வன்முறையைச் செலுத்தினார்கள். இங்கே மீண்டும் வன்முறை என்ற சொல்லின் விளக்கத்தை நினைவுகூர வேண்டியுள்ளது. வெட்டு, குத்து, அடி, உதை மட்டுமே வன்முறையல்ல. பேச்சு, மௌனம், செயல், உடல்மொழி ஆகியவற்றின் மூலம் நமக்கு நெருக்கமானவர்களிடமும்கூட வன்முறையைக் காட்டுகிறோம்.

எள்ளல், பரிகாசம், கேலி, வர்ணிப்பு இவற்றையெல்லாம் நகைச்சுவை என்ற பேரில் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அக்கம்பக்கத்தவர்களிடமும் வெளிப்படுத்துவதில்லையா! நகைச்சுவை என்பதோடு உள வலியைத் தணித்துக்கொள்ளவும் (relief) விடுவிப்பு முறையாகவும் (release mechanism) இவை இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இந்தத் தணிப்பு மற்றும் விடுவிப்பு முறைகளை எதிராளியின் முகத்துக்கு நேரே வெளிப்படுத்தினோம் என்றால் மற்றுமொரு வன்முறை சுழற்சி தொடங்குகிறது என்ற உண்மையை நாம் தெரிந்துகொள்வதில்லை.

இப்படியாக ஒருவரை வர்ணிக்கும் பட்டப்பெயரைச் சூட்டுவது நம்முடைய நிறைவேறாத தேவைகள் குறித்த துயரத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். இந்த மாதிரியான சூழலில் ஒரு நிமிடம் நிதானித்து 'இந்த நேரத்தில் என்னுடைய தேவை என்ன?' என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் செய்யத் தெரியாத காரணத்தால் அடுத்தவரின்மீது நம்முடைய கோபத்தையும் எரிச்சலையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறோம். இதற்குப் பதிலாக தெளிவான எல்லைக்கோடுகளை வகுத்துக்கொண்டு நம்முடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அழுத்தமான வன்முறையற்ற மொழியில் சொல்லப் பழக வேண்டும்.

வார்த்தை வன்முறை

ஒருவரை வர்ணிக்கும் பட்டப்பெயர்களும் சாத்வீக வன்முறையை வெளிப்படுத்தும் மொழியில் அமையும்போது அவற்றை இனம்காணத் தவறுகிறோம். இந்த எடுத்துக்காட்டுகளைப் படியுங்கள்.

"நீ எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுகிறாய்" என்ற குற்றச்சாட்டைப் பலமுறை எதிர்கொண்டிருப்போம் அல்லது அடுத்தவரின்மீது சுமத்தியிருப்போம்.

இதற்கு நம் உடனடியான எதிர்வினை என்னவாக இருக்கும்? 'அவர் மனதில் நினைத்ததை எல்லாம் சொல்லிவிட்டு அதை நான் எந்த உணர்ச்சியுமில்லாத ஜடம் மாதிரி கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறாரா?'. 'அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார், நான் அதைக் கேட்டும் கேட்காத மாதிரி இருக்கவேண்டுமா?'. இதையே கொஞ்சம் மாற்றி யோசித்து அதைக் கேள்வியாகவும் கேட்டால் எப்படி இருக்கும்?

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் சொல்வதை வேறு விதத்தில் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறீர்களா?" என்று கேட்கலாம் அல்லவா! இதில் இயல்பாகவே தொனிக்கும் ஆர்வம் அடுத்தவரையும் கொஞ்சம் சிந்திக்கவைக்கும் அல்லவா! இதை நம் மனதிலும் மொழியிலும் இருத்திக்கொண்டு விழிப்புணர்வோடு பேசுவது அவசியம்.

வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தில் சரி, தவறு, நல்லது, கெட்டது, இயல்பானது, இயல்புக்கு மாறானது போன்ற எதிர்சொற்களுக்கு இடமில்லை. இவை எல்லாமே பயிற்றுவிக்கப்பட்டவை. அதிகாரத்தையும் படிநிலையையும் தக்கவைத்துக்கொள்ள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டவை. மக்கள் அதிகாரத்திற்குத் தலைவணங்கவும் கட்டுப்பாட்டை மீறாமல் அடங்கி நடக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. இதற்காக எது சரி, எது இயல்பானது, எது பொருத்தமானது என்பது வரையறுக்கப்பட்டது. இவற்றை எல்லாம் வரையறுத்த அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருக்கும்படியான சமூக அமைப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

இப்படியான ஒரு சமூக அமைப்பில் பல தலைமுறைகளாக வாழும்போது நம்முடைய உணர்ச்சிகளையும் தேவைகளையும் தெளிவாக எடுத்துச்சொல்லத் தெரிவதில்லை என்பது எத்தனை துயரமானது!

தீராப் பகையும் தீரும்

உள வலியும் துயரமும் மேலிடும் போது அதைத் தனித்துக்கொள்வதற்காக அடுத்தவர்களை வர்ணிக்கும் சொற்களைப் பயன்படுத்துகிறோம். வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறை இந்த வன்முறை சுழற்சியை உடைக்கும் வழிகளைக் காட்டுகிறது.

'நாம்' 'அவர்கள்' என்ற பிரிவினையைத் தூண்டும் சொற்கள் பகையை வளர்க்கின்றன. நம்மையும் நம்முடைய குழுவினரையும் தவிர மற்ற எல்லோருமே வில்லன்களாகவும் கெட்டவர்களாகவும் சித்தரிக்கப்படும் சூழலில் இருக்கிறோம். உலக முழுவதும் நாட்டுக்கு நாடு இந்த எண்ணம் கெட்டிப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். இதனால் தூண்டப்படும் வன்முறை நமக்கும் அவர்களுக்கும் ஏற்படுத்தும் அழிவுகளை நாம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அழிவு ஏற்படும்போதுகூட அதுவும் அந்தக் கெட்டவர்களின் செயலாகவே சித்தரிக்கப்படுகிறது.

இந்த எதிர்ச்சொற்களை இனம்கண்டு எல்லோரும் நம்மைப் போன்றவர்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்துக்கு உதவியாக இருக்கும். நம்முடைய எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக புரிந்துகொள்வதோடு தெளிவான மொழியில் எடுத்துச்சொல்லப் பழகினால் நாடுகளுக்கு இடையே இருக்கும் தீராப்பகையும்கூட தீரும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in