வாழ்க்கையே நேசம் - 35: தவறுகளைத் திருத்திக்கொள்ள மறுப்பவர்களை எப்படிக் கையாள்வது?

வாழ்க்கையே நேசம் - 35: தவறுகளைத் திருத்திக்கொள்ள மறுப்பவர்களை எப்படிக் கையாள்வது?

பல நேரத்தில் குடும்பத்திலும் நெருங்கிய நண்பர்களுக்கும் பல அறிவுரைகளை, நல்வழிப்படுத்தும் கருத்துகளைச் சொல்லியிருப்போம். அவர்களும் நம்மைப் போன்றவர்கள் என்பதால் நம்முடைய வழிமுறை அவர்களுக்கும் பயன்படும் என்ற வலுவான எண்ணத்தைக் கொண்டிருப்போம். ஆனால் அவர்களின் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். அதே போல பணியிடத்தில் குறிப்பிட்ட வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற வழிமுறையைச் சொல்லி இருப்போம். எத்தனை சொல்லியும் அவர்களுக்குத் தோன்றியபடி செய்வார்கள்.

இதுபோல நாம் சொல்வதைக் கேட்டு நடக்காதபோது நமக்குள் தோன்றும் உணர்ச்சிகள் என்ன? எத்தனை முறை சொன்னாலும் இப்படி நடக்கிறாயே என எரிச்சல் ஏற்படும். என் சொல்படி நடக்காவிட்டால் என்ன ஆகுமென்று புரியாமல் இப்படிச் செய்கிறாயே என்ற பதற்றம் தோன்றும். உன் விருப்பப்படி நடப்பதென்றால் என்னுடைய நேரத்தை ஏன் வீணடித்தாய் என்ற கோபமும் வெறுப்பும் வரும். 'நான் சொல்வதொன்று நீ செய்வதொன்றா', 'நான் சொல்வதைத்தான் நீ கேட்கவேண்டும்' இப்படியான தன்முனைப்பால் எழும் அதிகாரத் தொனியும் கேட்கும்.

சொல்படி நடக்காதவர்களிடம் வன்முறை தொனிக்கும் சொற்களைப் பேசுவதோடு உடல்மொழியையும் வெளிப்படுத்துவோம். பணியிடம் என்றால் மேலதிகாரியின் உத்தரவு அல்லது கருத்துக்கு மாறாக நடந்துகொண்டதற்காக நடவடிக்கைகூட எடுப்போம். இதனால் அடுத்தவர்களுக்கு நம்மிடத்தில் பயமும் அதனால் வெறுப்பும் ஏற்படும். பணியிடத்தில் வேண்டுமானால் இந்த அச்சம் மேலதிகாரியின் சொல்லுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்த உதவலாம். ஆனால் நாளடைவில் இரு சாராருக்கும் நடுவில் இடைவெளியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். உறவினர், நண்பர் என்றால் கேட்கவே வேண்டாம். இருவரிடையேயான உறவு இழுபறியில் இருக்கும்.

என் நண்பரின் வீட்டில் சமையல் வேலை செய்வதற்காக ஒருவரை நியமித்தார்கள். முதல் மாதம் அந்தக் குடும்பத்தின் சுவைக்கும் தேவைக்கும் ஏற்ப எப்படிச் சமைப்பது என்று பொறுமையாகக் கற்றுக்கொடுத்தார்கள். இரண்டு மூன்று மாதம் என்று நாட்கள் கடந்தாலும் சமையல் வேலை செய்பவருக்கு எதை எப்படிச் செய்வது எனப் பிடிபடவேயில்லை. சொல்லப்போனால் அடிப்படையான சமையல்கூட அவருக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. கூடவே எடக்கு மடக்கான பேச்சு. நீங்கள் இப்படி மாறுங்கள் அப்படி மாறுங்கள் என்பது போன்ற அறிவுரையை நண்பருக்குச் சொல்ல ஆரம்பித்தார் வேறு.

நண்பர் இயல்பாகவே பணியாளர்களை மரியாதையாக நடத்துவார். ஆனால் வேலை செய்பவரின் எதிர்ப் பேச்சினால் எரிச்சல் ஏற்பட்டு தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கும். பல முறை சொல்லிக்கொடுத்தாலும் அதே தவறுகளைச் செய்வதால் நிம்மதியாக வாய்க்கு ருசியாக உணவுண்ண முடியாமல் போகும் நிலைமை. இறுதியில் ஒரு நாள் நண்பர் பொறுக்க முடியாமல் 'செய்த தவறுக்கு நீங்களே உங்கள் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துக்கொள்ளுங்கள்’ என்றார். அன்றுதான் தனக்குள் இருந்து வெளிப்படும் வன்முறையைப் புரிந்துகொண்டார். ஓரிரு நாளில் பணியாளரை நிறுத்திவிட்டார்.

வீட்டுவேலை, சமையல் பணி போன்றவை என்பது முறைசாரா பணி என்றாலும் முதலாளி-தொழிலாளி என்ற அமைப்பும் படிநிலையும் இல்லாமல் போவதில்லை. ஆனால் அலுவலகத்தில் பணி செய்பவர்கள் போன்ற மேலதிகாரி, தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை போன்றவை கிடையாது. இதனால் இங்கே நிலவும் உறவு மாறுபட்டது. என்றாலும் அந்தக் குடும்பத்துக்கு ஏற்ற வகையில் பணியாளரும் பணியாளரின் செயல்பாட்டுக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களை குடும்பமும் மேற்கொண்டால்தான் இந்த உறவு நீடிக்கும்.

இப்படி ஒரு நிலைமையில் நம்மில் பலர் இருந்திருப்போம். இங்கே வன்முறையற்ற தகவல் பரிமாற்ற செயல்முறையை நடைமுறைப்படுத்த சில வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒத்துவராத பணியாளரை வேலைக்கு வைத்துக்கொண்டு மல்லுக்கட்டுவது அவசியமில்லை என்பது நண்பருக்குத் தெரியவில்லை. தான் இருந்த இக்கட்டில் யாராவது ஒருவர் வந்து சமைத்தால் போதும் என்ற எண்ணம். இருப்பவர் போய்விட்டால் புதிதாக ஒருவரைத் தேடி வேலைக்குச் சேர்த்து எல்லாவற்றையும் முதலில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டுமே என்ற சலிப்பு. குடும்பத்தினர் ஒத்துழைக்க மறுத்தால் என்ன செய்வது என்ற பயம். எல்லாமாகச் சேர்ந்து ஒவ்வாத சூழலையும் பணியாளரையும் சகித்துக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளியது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. 'சமையல் பணி செய்பவரால் பல மாதம் கழித்தும் சமையல் கற்றுக்கொள்ள முடியவில்லையே, ஏன்?' என்ற கேள்வியை நண்பர் ஏன் கேட்கவில்லை. 'சமையல் தெரியும் ஆனாலும் தெரியாதது போல நடிக்கிறார்', 'எனக்கு எரிச்சல் ஊட்டுவதற்காக வேண்டுமென்றே இப்படிச் செய்கிறார்', என்ற எண்ணம் இருந்திருக்கலாம். பெரும்பாலும் நாமும் நம் பிரச்சினைகளை இந்தக் கோணத்தில் இருந்துதான் அணுகுவோம். 'அவருக்குத் தெரிந்தும் வேண்டுமென்றே செய்கிறார் அல்லது தெரியாதது போல நடிக்கிறார்', என்று தானே பல சந்தர்ப்பங்களில் நினைக்கிறோம்.

ஆனாலும் அது ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வை மட்டுமே அல்லவா. ஒருவேளை அந்தப் பணியாளருக்குக் கற்றல் குறைபாடு இருக்கலாம் அல்லவா? அல்லது அதுபோன்ற வேறு குறைபாடுகள் இருக்கலாம். உண்மை என்னவென்றால் பணியாளர்களை பற்றி நம்மில் யாரும் இந்தக் கோணத்தில் சிந்திப்பதேயில்லை என்பதுதான். இந்த எண்ணமும் பார்வையும் எல்லா உறவுகளிலும் எத்தனை பெரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது.

வேலைக்குப் போகும் பெரும்பாலானோர் நன்றாக வேலைசெய்து நல்ல பெயர் எடுத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். அப்படி நடந்துகொள்ளவில்லையென்றால் அவர்களின் புரிதல் அவ்வளவுதான் என்பதுதானே உண்மை. சில பணியாளர்கள் விட்டேற்றியாக இருப்பதும் பொய்யல்லவே என்ற கேள்வி எழலாம். அவரின் புரிதல் அவ்வளவுதான் என்பதுதான் உண்மை. எல்லோருமே அவரவரின் புரிதல் எந்தப் படிநிலையில் இருக்கிறதோ அங்கிருந்துதான் செயலாற்றுகிறோம்.

அலுவலகத்தில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்த இளைஞர்களில் ஒருவர் அவர். முக்கியமான வேலையாக இருக்கும்போது கேட்காமல் அழைப்பார். பாதி வேலையில் நிறுத்தி அவருக்கு விளக்கம் தந்துவிட்டு மீண்டும் செய்யத்தொடங்கும்போது வேலையில் தொய்வு ஏற்பட்டிருக்கும். முதலில் இரண்டொரு முறை அழைக்கலாமா என்று கேட்காமல் அழைக்கிறாரே என்று எரிச்சல் ஏற்பட்டது.

ஆனால் இளைய தலைமுறை என்பதால் அதிகப்படியான மரப்பொழுங்கு தேவையில்லை என எண்ணியிருக்கலாம். அல்லது என்னுடைய பங்களிப்பு இல்லாமல் அவருடைய வேலையை முடிக்க முடியாது என்ற நிலைமை இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக வேலை கொடுத்தவரை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பது அவருடைய புரிதலாக இருக்கலாம். இப்படி அவர் செய்கையை புரிந்துணர்வோடு அவர் கோணத்தில் இருந்து பார்த்தபோது எரிச்சல் குறைந்தது. இருந்தாலும் நேர மேலாண்மை குறித்து ஓரிரு வார்த்தைகள் சொன்னதோடு இனி கேட்டுவிட்டு அழையுங்கள் என்றேன். அடுத்த அதன்படியே நடக்க ஆரம்பித்தார்.

இவர்களைப் போலவே நாமும் பல நேரங்களில் நடந்துகொண்டிருப்போம், அதை உணர்ந்திருக்கமாட்டோம். தெரிந்துகொண்டு செய்வதல்ல, நம்முடைய அப்போதைய புரிதல் என்னவோ அந்த நிலையில் இருந்து செயல்பட்டிருப்போம்.

எளிமையான விஷயம்தான், ஆனாலும் பார்வை மாற்றம் தேவை என்பதை புரிந்துகொள்ளத் தவறுவதால் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். வாழ்க்கையை சிக்கல் அற்றதாக மாற்றிக்கொள்ள சின்ன மாற்றங்கள் போதும். செய்வோமா?

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in