வாழ்க்கையே நேசம் - 34: குடும்ப வன்முறை ஏற்படுத்தும் அவமான உணர்வு

வாழ்க்கையே நேசம் - 34: குடும்ப வன்முறை ஏற்படுத்தும் அவமான உணர்வு

சமீப காலமாக, குடும்ப வன்முறை குறித்த திரைப்படங்கள் வெளியாகி விவாதத்தை எழுப்பிவருகின்றன. தனிமனிதரின் குரலுக்கு, குறிப்பாக எளியவர்கள் மற்றும் பெண்களின் குரலுக்கும் அடிப்படை உரிமைக்கும் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இணையர்களாக இருந்தாலும் தனிமனிதர்களின் உரிமையைப் பேண வேண்டும் எனத் தெளிவாக முன்வைக்கப்படுகிறது. இதுவரையில் இது பற்றிய பொது விவாதமே நடந்திருக்காத நிலையில் இப்படியான கதைக்கருவை யோசித்து அதுகுறித்து திரைப்படம் ஒன்றை எடுப்பதே பாராட்டுக்குரியது. பல வருடங்களாகப் பேசாத குழந்தை வாயைத் திறந்து சில சொற்களைச் சொல்வது போன்றது.

காலங்காலமாக, குடும்பத்தில் இருக்கும் வலியவர்கள் எளியவர்கள்மீது தொடுக்கும் வன்முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. குறிப்பாக இணையரின்மீதும் குழந்தைகளின்மீதும் வயதான பெற்றோரின்மீதும் குடும்பத்தினர் தொடுக்கும் வன்முறையை யாருமே கேள்வி கேட்பதில்லை. அது தவறு என்பதுகூடத் தெரிவதில்லை. கூடவே பாதிக்கப்பட்டவர்களே இதுகுறித்துப் பேசுவதை அவமானமாகக் கருதுகிறார்கள். தங்கல் குடும்பத்தினரைப் பற்றி அடுத்தவர்களிடம் சொல்வதா என்று சங்கடப்படுகிறார்கள்.

சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் குடும்ப வன்முறை குறித்த விவாதங்கள் பொதுவெளியில் கொஞ்சங்கொஞ்சமாக முன்னெடுக்கப்படுகின்றன. திரைப்படக் காட்சிகள் குறித்தும் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் பலவிதங்களில் அலசி ஆராய்வதைப் பார்க்க முடிகிறது. பொதுமக்களின் மனதில் இவை குறித்த தெளிவான கருத்து உருவாகவில்லை என்றாலும் வன்முறை தவறு, அதைப் பொறுத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியதில்லை என்ற எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது. மாறிவரும் சிந்தனைப் போக்கு கேள்விகேட்க வைக்கிறது. வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள், படித்தவர்கள், கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்கள் என்று எல்லோரும் குடும்ப வன்முறை குறித்துப் பேசுவது வரவேற்கத்தக்கது. இப்படி ஒரு கலந்துரையாடலை முன்னெடுத்தால் மட்டுமே காலப்போக்கில் 'எது சரி, எது தவறு' என்பது தெளிவாகும்.

சமீபத்திய திரைப்படங்கள் குறித்த சமூக வலைதள விவாதங்களில் சில கருத்துகளைப் பார்க்க நேர்ந்தது. ‘படித்த, தைரியமான பெண் தன்னை அடித்துத் துன்புறுத்தும் கணவனை விட்டுப் பிரியாமல் இருப்பது முட்டாள்தனம்’. ‘இந்தக் காலத்திலும் பெல்ட்டால் அடிவாங்கிக்கொண்டு மெளனமாக இருக்கும் ஒரு பெண்ணா என்பதை நம்ப முடியவில்லை’, ‘குடும்பத்தில் நடக்கும் வன்முறை பற்றி வெளிப்படையாகப் பேசினால் எல்லோருக்கும் புரிந்திருக்குமே...’ - இப்படி நிறைய கருத்துகள்!

இந்தத் திரைப்படங்களில் தோன்றும் பெண்கள் நாம் அன்றாடம் சந்திக்கும் நம்முடன் பேசிப் பழகும் எளிய பின்னணியைச் சேர்ந்த பெண்களாகவே இருக்கிறார்கள். பல நாட்களாகவோ வருடங்களாகவோ வன்முறையைப் பொறுத்துக்கொள்கிறார்கள், சகித்துக்கொள்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் இனிமேலும் பொறுக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு ஒரே நாளில் எல்லாவற்றையும் விட்டு வெளியேறுவதைப் பார்க்கிறோம் (பெரும்பாலான நேரத்தில் இந்தச் செய்கை திரைக்கதையில் ஒரு குறியீடாக மட்டுமே இருக்கிறது என்பது வேறு விஷயம்). 'இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை?’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் மனதில் எழும் கேள்வி. வெளியில் இருந்து நாம் என்ன விமர்சனத்தை வைத்தாலும் அவரவர் வாழ்க்கையை வேறு ஒருவர் வாழ முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற படிந்துபோன விஷயங்களை மாற்றியமைக்க அந்தந்த மனிதர்களின் வாழ்வியல், மன உறுதி, குடும்பச் சூழல், குடும்பத்தினரின் ஆதரவு, புரிந்துகொள்ளுதல் போன்ற பல காரணிகளைப் பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும். ஏனெனில், தான் எதிர்கொள்ளும் வன்முறையைப் பற்றி பெற்றோர், உடன்பிறந்தவர்கள் போன்ற நெருங்கிய உறவுகளிடம் பேசுவதே அவமானமூட்டும் செயலாக இருக்கிறது. இப்படி ஒவ்வொருவரும் சூழ்நிலையின் கைதியாகத்தான் இருக்கிறோம்.

வன்முறையை எதிர்த்துக் கொடி பிடிக்காமல் அமைதியாக இருப்பதற்கு இன்னும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கின்றன. அது ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலருக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இருக்காது. இன்னும் சிலருக்குக் கணவன விட்டுப் பிரிந்து வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களைச் சந்திக்க அச்சமிருக்கும். சமூகத்தில் தலைகுனிய வேண்டுமே என்ற பயம் இருக்கும். இன்னொரு விஷயம். இதுபோன்ற வன்முறையைச் செலுத்தும் கணவர்கள் மனைவி பிரிந்துசெல்ல அனுமதிப்பதில்லை. அப்படியே பிரிந்து சென்றாலும் இன்னும் பலவிதமான அழுத்தமும் நெருக்கடியும் தரும் கொடுமைகளைச் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. எத்தனையோ கேள்விப்பட்டும் பார்த்தும் இருப்போம், ஆனால் நம்முடைய மதிப்பீடுகளை என்றுமே மாற்றிக்கொள்ள முனைந்ததில்லை.

ஒரு குழந்தை 'பெற்றோர் அடிக்கிறார்கள், மனதுக்கு ஒவ்வாதவற்றை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள் என்று யாரிடம் புகார் சொல்லும்? எங்கே போய் என்ன சொன்னாலும் மீண்டும் பெற்றோருடன்தானே வசிக்க வேண்டும்?! குடும்பத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள்கூட வேறு வழியின்றி அந்தக் குடும்பத்திலேயே வசிக்கும் ஒரு சூழலில்தான் இருக்கிறோம். இது ஒரு சமூக உளவியல் பிரச்சினை என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாகும் மனிதர்கள் தன்மீது செலுத்தப்படும் வன்முறையை உணர்வதற்கே பல காலம் பிடிக்கிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். அதுவும் அவர்கள் வளர்ந்த குடும்பச் சூழலில் வன்முறை இயல்பாக அன்றாடம் எதிர்கொள்ளும் விஷயமாக இருந்தால் அதை உணரும் திறன் மழுங்கடிக்கப்படுகிறது. தன்மதிப்பை இழந்த அவலமான சூழலில் உழலும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இவர்களால் தங்கள் நிலைமையை ஒரு அதிரடியான நொடியில் புரிந்துகொள்ள முடியாது. ஒரு வேளை புரிந்தாலும் உடனடியாக அதை எதிர்த்துச் செயலாற்ற முடியாது. அதே காரணத்தால்தான் இவர்களால் தன்னுடைய அவமானக் கதையை ஒரே மூச்சில் சொல்ல முடிவதில்லை. சிறிது சிறிதாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வரி வரியாகத் தங்கள் கதையைச் சொல்கிறார்கள். வெங்காயத் தோலைப் போல உரிக்க உரிக்கத்தான் அடுத்த அடுக்கைப் பார்க்கமுடியும். சிக்கலான நூல்கண்டின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ப்பது போல வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தின் சிக்கலையும் பொறுமையாக அவிழ்க்க அவர்களுக்கு அவகாசம் தர வேண்டும்.

ஆக முதல் கட்டமாக தன்மீது செலுத்தப்படும் வன்முறையை உணர்ந்து அதுகுறித்து மற்றவர்களிடம் பேச முனைவதே இவர்களின் சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அச்சத்தை மீறி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு துணிச்சலாகப் பேசுபவர்களின் கதையை, முன்முடிவுக்கு வராமல் மதிப்பீடு செய்யாமல் நம்மால் கேட்க முடியுமென்றால் நம்மையே பாராட்டிக்கொள்ளலாம்.

நம்முடைய புரிந்துணர்வையும் பரிவையும் காட்டுவது பாதிக்கப்பட்டவர்களின் அவமான உணர்வைக் குறைக்கிறது. தன்னுடைய நிலை குறித்து ஏற்படும் பச்சாதாபத்தையும் இயலாமையையும் முறியடிக்கிறது. அவமான உணர்வைக் களைய உதவும் மீட்டெழுச்சியை வளர்க்கிறது. நம்முடைய உண்மைக் கதைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது நம்முடைய தைரியத்தையும் துணிச்சலையும் அடுத்தவருக்குக் கடத்துகிறோம். நம் குழந்தைகள், உறவுகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று யார் யாரோ இந்தக் கதையைக் கேட்டு அவர்களின் வாழ்க்கையில் துணிச்சலான முடிவுகளை எடுக்கிறார்கள்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in