வாழ்க்கையே நேசம்-32: மதிப்பீடு செய்வது புரிந்துணர்வைத் தடுக்குமா?

வாழ்க்கையே நேசம்-32: மதிப்பீடு செய்வது புரிந்துணர்வைத் தடுக்குமா?

பொதுவாகவே நாம் எல்லோருமே எதையும் யாரையும் எப்போதும் மதிப்பீடு செய்துகொண்டேதான் இருக்கிறோம் அல்லது இவர் இப்படித்தான் சொல்வார் செய்வார் என்ற முன்முடிவோடு இருக்கிறோம். இந்த இரண்டுமே புரிந்துணர்வுக்குத் தடையாகின்றன. முன்முடிவும் மதிப்பீடும் நம் எண்ண ஓட்டத்தோடு ஊறிப்போய்விட்டவை. இப்படிச் செய்கிறோம் என்பதைக்கூட நாம் உணர்வதில்லை. அதனால் அதை நாம் முதல் உணர்ந்துகொள்ளவும் நிறுத்தவும் அதிக முனைப்பும் பெருமுயற்சியும் தேவைப்படுகிறது.

மதிப்பீடுகளும் மனவலியும்

பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது உடல் தோற்றம், அணிந்திருக்கும் நகை, உடை ஆகியவற்றை மதிப்பீடு செய்வது உண்டு. கூடவே, மனைவியாகவும் தாயாகவும் தாங்கள் ஆற்றும் கடமைகளும் மதிப்பீடு செய்யப்படுவதாக அவர்கள் உணர்கிறார்கள். இதுவே ஆண்கள் என்றால் ஈட்டும் வருமானம், வகிக்கும் பதவி, உடல் திறன், அறிவாற்றல் போன்றவை குறித்து மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும் பெண்களும் ஆண்களும் இந்தச் சமூகம் தங்களுக்கு விதித்திருக்கும் கடமைகளையும் குறிக்கோள்களையும் வழுவாமல் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் வேறு.

இது நம்மிடையே நாம் அறியாமலேயே போட்டியையும் பொறாமையையும் தூண்டுகிறது. எந்நேரமும் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் தன்மையை வளர்க்கிறது. கூடவே மதிப்பீடுகளுக்கும் முன்முடிவுகளுக்கும் வழிவகுக்கிறது. இதனால் எதிர்ப்படும் எவரையும் நாம் அணிந்துகொள்ளும் முகமூடியின் வழியே பார்க்கிறோம். நம்பிக்கையில் காலூன்றிய நட்பையோ பிணைப்பையோ ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இல்லையென்றால் 'நான் உண்மையை மட்டுமே பேசுவேனாக்கும்' என்ற பீடிகையோடு நம்முடைய மதிப்பீடுகளையும் முன்முடிவுகளையும் வாய்விட்டுச் சொல்கிறோம். அடுத்தவர்களின் மீது அது ஏற்படுத்தும் தாக்கம், பாதிப்பு ஆகியவை பற்றி துளியும் புரிந்துகொள்வதில்லை. ஏனெனில் நாம் உண்மை என்று சொல்வது நம்முடைய கோணத்தில் இருந்த பார்த்த, உணர்ந்த, அலசலுக்குட்படுத்திய ஒன்று என்பது தெரிவதே இல்லை.

மதிப்பீடு செய்வது பற்றிய இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் என்னவெல்லாம் முக்கியம் என்று நினைக்கிறோமோ அந்த விஷயங்களில்தான் நம்மையும் மற்றவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்கிறோம். இதன் மூலம் நம்முடைய திறன், நம்பிக்கை, விழுமியம் ஆகியவற்றின் படிநிலையை உறுதிசெய்துகொள்கிறோம்.

நாம் எதைக் குறித்து அவமானமும் அச்சமும் குழப்பமும் பதற்றமும் கொள்கிறோமோ அவற்றையெல்லாம் மதிப்பீட்டுக்கு உட்படுத்துகிறோம். இவை பெரும்பாலும் குழந்தைவளர்ப்பு, குடும்பப் பிரச்சினைகள், வீட்டு விஷயங்கள் போன்றவை குறித்தது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். சொல்லப்போனால் நாம் மதிப்பீடு செய்யும் பெண்களின்மீது கோபமும் எரிச்சலும் கொள்கிறோம். அவர்களைப் பரிவுடனும் புரிந்துணர்வுடனும் அணுகுவதில்லை.

குழந்தை வளர்ப்பின் சவால்கள்

இதைக் கேளுங்கள். அந்தப் பெண்ணின் கணவர் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். மாதத்தின் பாதி நாள் ஆறு வயதுக்கு உட்பட்ட இரண்டு துறுதுறுப்பான குழந்தைகளைத் தனியே வளர்க்க வேண்டிய பொறுப்பு அந்தப் பெண்ணினுடையது. கூடவே வீட்டு வேலை, சமையல், காய்கறி, மளிகை வாங்குவது, குழந்தைகளின் பள்ளிப் பாடம், தேர்வு என எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறும்பர்களோ ஒவ்வொரு நாளும் கத்தியால் கையை வெட்டிக்கொண்டார்கள், சோப்பு நீரையோ எண்ணையையோ குடித்துவிட்டார்கள், மாடிப் படியில் இருந்து கீழே விழுந்துவிட்டார்கள் என்ற தகவல் வரும். இது போதாது என்று வளரும் பருவத்தில் வரும் வழக்கமான காய்ச்சல், சளி, வாந்தி, பேதி போன்ற விஷயங்கள் வேறு. எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு காரணத்துக்காக மருத்துவமனைக்குப் போவதும் வருவதுமாக இருப்பார்கள்.

இதைக் கேள்விப்படும் மற்ற பெண்கள் அந்தத் தாயின் பொறுப்பற்ற போக்கை விமர்சனம் செய்வார்கள். குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்வதைத் தவிர ஒரு தாய்க்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்கும் என்று கேள்வி கேட்பார்கள். ஆனால் கணவரோ வேறு உறவினர்களோ துணைக்கு இல்லாமல் தனியே இரண்டு குழந்தைகளை வளர்க்கும் சாகசத்தைப் பற்றி இவர்களில் ஒருவரும் பாராட்டியதில்லை. சின்னஞ்சிறிய இரண்டு அறை கொண்ட வீட்டில் எல்லா வேலைகளையும் தானே செய்தபடி குழந்தைகளைப் பராமரிப்பது பற்றி யாரும் அக்கறையோடு பேசியதில்லை. அந்தக் குழந்தைகளின் குறும்பை ரசித்தபடி புன்னகையோடு கடந்து செல்லும் பொறுமையை சிலாகித்ததில்லை. ஒவ்வொரு முறையையும் எந்த விபத்தும் ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்தப் பெண் எடுக்கும் முயற்சியை எவரும் கவனித்ததில்லை. இருந்தாலும் அந்தப் பெண்ணைக் குறித்த தங்களின் மதிப்பீட்டை அதிகாரத் தோரணையோடு அறிவிப்பார்கள்.

ஆனால் இத்தனை பேர் குற்றவுணர்வை ஏற்படுத்தும் அவமானத்தை உண்டாக்கும் சொற்களைச் சொன்னாலும் அதனால் ஏற்படும் வருத்தம், அச்சம், கோபம் இவை எவற்றையும் அந்தப் பெண் வெளிப்படுத்தியதில்லை. குழந்தைகளை அடிக்கும், தகாத சொற்களால் திட்டும், அறமற்ற செயல்களைச் செய்யும் பெற்றோரைக் காட்டிலும் தான் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டாரோ என்னவோ.

முன்முடிவுக்கு முடிவுகட்டுவோம்

இது அந்த ஒரு தாய் மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினையல்ல. இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு தாயும் அன்றாடம் இப்படி ஒரு விமர்சனத்தைத்தான் எதிர்கொள்கிறார். குழந்தை வளர்ப்பு குறித்து யாரும் கருத்து சொல்லலாம். தாய்மார்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து யாரும் விமர்சிக்கலாம். மதிப்பீடு செய்வதும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் ஒன்றோடொன்று கைகோத்து இணைந்து நடக்கும் இரட்டைக் குழந்தைகள் என்பது இப்போது தெளிவாகிறது அல்லவா!

அடுத்தவர்கள் நம்மைக் குறித்து மதிப்பிடுவது நமக்கு வலியை ஏற்படுத்துகிறது. அதுகுறித்து நாம் அவமானமுறுகிறோம். அதனால் பதிலுக்கு அடுத்தவர்களை நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்து அந்த வலியையும் அவமானத்தையும் ஆற்றிக்கொள்கிறோம். எனவே புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற விழைவு கொண்டவர்கள் மதிப்பீடு செய்வதையும் முன்முடிவோடு செயல்படுவதையும் நிறுத்தும் வழிகளை அறிந்து அதன்படி நடக்க வேண்டும்.

நம் எண்ணம், உணர்வு, பேச்சு இவை எல்லாவற்றையும் விழிப்புணர்வோடு செய்ய வேண்டும். வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும் உடல்மொழி காட்டிக்கொடுத்துவிடும். அடுத்தவர்களை நல்வழிப்படுத்த முனைவதற்கு முன்னர் நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் வழிகளைக் கண்டறிந்து அதன்படி நடக்கவும் வேண்டும். செய்வோமா?

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in