வாழ்க்கையே நேசம்-31: புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வது எப்படி?

வாழ்க்கையே நேசம்-31: புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வது எப்படி?

வாழ்க்கையில் புரிந்துணர்வின் அவசியத்தைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். குடும்பங்களிலும் உறவுகளிலும் மட்டுமல்லாது பணியிடம், கல்விச்சாலை, அரசியல், விளையாட்டு என எல்லா இடத்திலும் புரிந்துணர்வு வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிக்கிறது. புரிந்துணர்வு உறவுகளில் நம்பிக்கை வைக்கவும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கவும் உதவுகிறது. புரிந்துணர்வை வெளிப்படுத்தும் தலைவர்கள் தங்கள் குழுவை வெற்றிகரமாக வழிநடத்துகிறார்கள் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தனை இருந்தும் நாம் அதைக் குறைத்து எடைபோட்டிருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எதிராளியின் கருத்தும் முக்கியம்

நம்மில் எவருமே முழுமையான புரிந்துணர்வோடு பிறப்பதில்லை. காலப்போக்கில் அனுபவம் கூடும்போது ஒரு சிலர் இந்தத் திறனை வளர்த்துக்கொள்கிறோம், அவ்வளவுதான். ஆனால் ஒரு நல்ல செய்தி என்ன தெரியுமா? முனைப்புடன் செயல்பட்டால் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளலாம், எந்தச் சூழலிலும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளலாம் என்பதுதான் அது. சுற்றி உள்ளவர்களோடு நல்லுறவைப் பேண வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர் எவரும் இதைச்செய்ய முடியும்.

பொதுவாக ஒரு விஷயம் நடந்தால் என்ன செய்கிறோம்? அது குறித்த நம்முடைய பார்வையும் விளக்கமும் மட்டுமே சரியானது என்று வலியுறுத்துவோம். அடுத்தவரின் பார்வையில் அந்த விஷயத்தைப் பார்க்கும் முயற்சியை கொஞ்சமும் எடுப்பதில்லை. சொல்லப்போனால் எந்த ஒரு விஷயத்துக்கும் இன்னொரு பார்வையும் கோணமும் இருக்கிறது என்பதையே ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

நாம் எல்லோருமே நம்மைச் சுற்றியுள்ள உலகையும் நிகழ்வுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து அணுகுவோம் என்பதுதான் உண்மை. சில கோணங்கள் மாறாமல் அப்படியே இருக்கும். ஆனால் வேறு சில கோணங்களோ அனுபவம், அக, புறச் சூழல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

ஒரு நிகழ்வை, பத்து பேர் பார்த்தாலும் கேட்டாலும் அலசினாலும் பத்து விதமான கதைகளைச் சொல்வார்கள். நடந்தது ஒன்றுதான், ஆனால் பார்ப்பவருக்கு ஏற்ப பார்வை மாறுபடுகிறது என்பது புரிந்தால் போதும். ஆக, நம்முடையதைப் போலவே மற்றவரின் கோணமும் அனுபவமும் உண்மையானது என்று ஏற்றுக்கொள்வது புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள அவசியமாகிறது.

ஆறுதலின் அவசியம்

பல நேரங்களில் வீடு, அலுவலகம், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் முக்கியமான வேலை, விழா, விருந்தினரின் வருகை என ஒரே நேரத்தில் நடக்கும். எல்லாவற்றையும் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று மலைப்பாக இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் செய்ய வேண்டியதை முழுமையாகச் செய்யாமல் கோட்டை விட்டிருப்போம். பிறகு அதை நினைத்து நினைத்து அவமானம் கொள்வோம், இப்படிச் செய்துவிட்டேனே என்று நொந்துகொள்வோம், மருகுவோம்.

மனம்விட்டு யாரிடமாவது பேசலாம் என்றால் அவர்கள் குத்திக்காட்டுவார்களோ என்ற பயமும் சேர்ந்துகொள்ளும். "அதைப் போய் எப்படி மறந்தாய்! நீ ஒரு 'மகள், கணவன், அப்பா, அம்மா, மருமகள்' என்ற எண்ணம் இருந்தால் மறந்திருப்பாயா? அதற்குத்தான் எல்லாவற்றையும் பட்டியல் எழுதிவைத்துச் செய்ய வேண்டும் என்பார்கள். நீ கேட்டால்தானே?" - இப்படி ஏதாவது ஒரு வசனத்தைப் பேசுவார்கள். அந்த நேரத்தில் குற்றவுணர்வு, அவமானம் என்னும் புதைகுழிக்குள் அமிழ்வதைப் போன்ற உணர்வை எத்தனை முறை அனுபவித்திருப்போம்!

மாறாக, அந்த நேரத்தில் யாராவது நம் நிலைமையைப் புரிந்துகொண்டு கையைப் பிடித்துக்கொண்டு ஆறுதலாகப் பேசினால் எப்படி இருக்கும். "எத்தனை விஷயங்களைத் தனி ஆளாகச் சமாளிக்கிறாய். அதில் ஒன்றைச் சரியாகச் செய்யாவிட்டாலோ, மறந்தாலோ என்ன ஆகிவிடும்? வேண்டுமென்று நீ அப்படிச் செய்யவில்லையே? பெற்றோருக்கு குழந்தைமீது அக்கறை இல்லாமலா இருக்கும்?" - இப்படிப் பேசுவது வெறும் வாய் வார்த்தையாக இருந்தால் பயனில்லை. நம்முடைய நிலைமையைப் புரிந்துகொண்டு அந்தக் கோணத்தில் இருந்து பேசினால் மட்டுமே மனம் ஆறுதல் அடையும்.

நாம் முதலில் மாறுவோம்

அலுவலகத்திலோ வீட்டிலோ நாம் சொன்ன வேலையை ஒருவர் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். இதற்கு முன் பல முறை இது நடந்திருக்கலாம். அப்படியொரு சூழலில், “நான் சொன்னேன், நீ செய்யவில்லை" என்றோ, "நான் எப்போது எதைச் சொன்னாலும் நீ செய்வதே இல்லை" என்றோ கோபமும் எரிச்சலும் தலைதூக்கும். சிடுசிடுத்தபடிதான் அந்த நபருடன் உரையாடலைத் தொடங்குவோம்.

ஆனால் ஒரு மாறுதலுக்கு, "நீங்கள் எதனால் அந்த வேலையைச் செய்யவில்லை?" என்ற கேள்வியைக் கேட்டால் போதும். அதுவே நாம் அடுத்தவரின் பார்வையில் அந்த விஷயத்தை அணுகத் தயாராகிவிட்டோம் என்பதற்குச் சான்று. கூடவே அவர் தரும் விளக்கத்தைப் புறந்தள்ளாமல் அது உண்மையாக இருக்கலாம் என்று நினைப்பது புரிந்துணர்வை வளர்க்கும். அடுத்து, அந்த பிரச்சினைக்குத் தீர்வைச் சொல்வது அந்த வேலையை முடிக்க உதவும். எல்லாச் சூழலிலும் இந்தச் செயல்பாட்டை நடைமுறைப்படுத்தப் பழகினால் போதும்.

'புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வது இத்தனை எளிமையான செயலா?' என்ற உங்களின் மனக்குரல் கேட்கிறது. எழுத்தில் வடிப்பதும் நடைமுறையில் பின்பற்றுவதும் இரு வேறு விஷயங்கள். நாமெல்லோருமே பழக்கவழக்கத்தின், சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிமைகள். அன்றாட வாழ்வின் அவசரக் கோலத்தில் ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் சந்திப்பிலும் புரிந்துணர்வு கொண்ட அணுகுமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் முதலில் பழைய பழக்கவழக்கங்களையும் படிமங்களையும் கைவிட வேண்டும்.

அடுத்தவரின் வாழ்க்கையையும் அவர்களின் அனுபவங்களையும் நம் கோணத்தில் இருந்து மட்டுமே பார்ப்பது இயல்பான செயல்தான். விழிப்புணர்வோடும் முனைப்போடும் செயல்பட்டால் மட்டுமே பார்வையை மாற்றிக்கொள்ள முடியும். இவற்றோடு விடாமுயற்சி, மன உறுதி, நாம் செய்தது தவறு என்று ஒருவர் சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆகிய பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். வளர்ச்சி என்பது கீழிருந்து மேலாக வரையும் நேர்கோடல்ல, ஏற்றமும் இறக்கமும் வளர்ச்சியும் சரிவும் கொண்டது என்ற சுய புரிதல், ‘இந்த முறை தவறினாலும் அடுத்த முறை நடைமுறைப்படுத்துவேன்’ என்ற உறுதியைத் தருகிறது.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in