வாழ்க்கையே நேசம் - 30: அவமான உணர்வைக் களையும் அருமருந்து எது?

வாழ்க்கையே நேசம் - 30: அவமான உணர்வைக் களையும் அருமருந்து எது?

அவமான உணர்வு எப்போது எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்பதில் இருந்து தொடங்கலாமா? நம்மைச் சுற்றி உள்ளவர்களின் கருத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் முக்கியத்துவம் தந்து ஊரோடு ஒத்துவாழ முயற்சித்து அது நடக்கவில்லை என்று தோன்றும்போது ஏற்படும் உணர்வு அது. அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் வலுப்பெறும் போது என்ன நடக்கிறது? நம் ஆற்றல் முழுவதையும் அடுத்தவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துகிறோம். அடுத்தவர்கள் என்பது முடிவற்ற மனிதர்களின் கூட்டம். அதில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவது என்பது நடக்கக்கூடிய விஷயமா என்ன?

சுற்றி உள்ளவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் மதிப்போடு நடத்த வேண்டும் என்ற மனப்போராட்டம் எரிச்சல், கோபம், வருத்தம், அச்சம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது. அவற்றை வெளியே காட்ட முடியாதபோது அவற்றை நம்மை நோக்கியே செலுத்துகிறோம். நாம் நல்லவர்கள் அல்ல, மோசமானவர்கள், யாரோடும் ஒத்துப்போகத் தெரியாதவர்கள் அதனால்தான் இந்தச் சமூகமே நம்மை வெறுக்கிறது என்ற நம்மையே குறைசொல்லி நொந்துகொள்ளும் எண்ணம் வலுப்பெறுகிறது.

ஒரு கட்டத்தில் உணர்வுகள் தோற்றுவிக்கும் உடல்வலியைப் பொறுக்க முடியாது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடமும் குழந்தைகளிடமும் நம்முடைய கோபத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறோம், வன்முறையான சொற்களைப் பேசுகிறோம். எல்லாம் நடந்து முடிந்ததும் மீண்டும் அயர்ச்சியும் துயரமும் மேலிட தனித்து விடப்பட்ட உணர்வில் உழல்கிறோம்.

இந்த உலகத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் இருக்கும் வரையிலும் அவர்களோடு நாம் பழகும் வரையிலும் இந்த அவமான உணர்வும் கூடவே வரும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். அதை முற்றிலும் களைவது இயலாத செயல் என்றாலும் அவமான உணர்வைத் தாங்கிக்கொண்டு எதிர்வினை ஆற்ற முடியும். அதற்கான எதிர்ப்புத்திறனை படிப்படியாக வளர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் வழிகாட்டுகிறார்கள். அப்படி அவமான உணர்வைக் களைய உதவும் அருமருந்து எது தெரியுமா? புரிந்துணர்வும் பகிர்தலும்.

ஆம், எதிரில் இருப்பவர் மனவலியில் துவளும்போது புரிந்துணர்வை வெளிப்படுத்துவது அவமான உணர்வைக் களைய உதவும். கூடவே, நீங்கள் தனியாக இல்லை, நானும் இதே போன்ற நிலைமையில் இருந்திருக்கிறேன் என்று தன்னுடைய அனுபவத்தைச் சொல்வது இருவருக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்துகிறது. என்ன இருந்தாலும் மனிதன் ஒரு சமூக விலங்குதானே! இந்த ஒத்துணர்வும் பிணைப்பும் நாமெல்லோரும் ஒரே போன்ற பிரச்சினைகளைத்தான் எதிர்கொள்கிறோம் என்ற நேர்மறையான எண்ணம் வலுப்பட உதவுகிறது.

இதைக் கேளுங்களேன். நளினி அலுவலகத்தில் பணிபுரிகிறார். பொறுமையான தலைக்குளியல் என்பது விடுமுறை தினங்களில் வாய்க்கும் சுகம் என்றே சொல்லலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டில் இருந்த வளர்ந்த மகனிடம் வாயில்மணி ஒலித்தால் பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு குளிக்கப் போனார். ஆனால், நளினி குளிக்கப் போனதும் மகனும் வீட்டின் இன்னொரு அறைக்குப் போய் கதவைப் பூட்டிக்கொண்டு நண்பனுடன் அலைபேசியில் கதைபேசத் தொடங்கினான். அதற்குள் இரண்டு முறை வாயில்மணி ஒலித்துவிட்டது. நளினி குளியலறையில் இருந்து குரல் கொடுத்தும் மகனுக்குக் காது கேட்கவில்லை. அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்து கதவைத் திறந்தால் வீட்டுவேலை செய்யும் பெண்மணி நின்றுகொண்டிருந்தார். சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் மாறி மாறி வருகிறார்.

நிறைவாக குளிக்க முடியவில்லையே என்ற எரிச்சல் ஏற்பட்டது. பணியாளைக் கோபத்தோடு திட்டத் தொடங்கினார் நளினி. படபடப்போடு கழிவிரக்கமும் தொற்றிக்கொண்டதால் கண்ணில் நீர்கோர்த்தது. ஒருவேளை கோபமடைந்து, “என்னைத் திட்டிவிட்டீர்கள், இன்றோடு வேலைக்கு வரவில்லை” என அந்தப் பணியாள் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் சேர்ந்துகொண்டது. உணர்ச்சிகளை வார்த்தைகளில் கொட்டி முடித்ததும் கோபம் குறைந்தது. கூடவே 'இப்படிப் பொறுமையிழந்துவிட்டோமே' என்ற அவமான உணர்வு வாட்டியது. ஒரு பத்து நிமிடத்தில் உணர்வுகளின் கலவை மனதை அலைக்கழித்தது. தனித்து விடப்பட்ட உணர்வும் குற்றவுணர்வும் மேலோங்க துவண்டு போனார் நளினி.

அப்போது அவர் சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது. "இருக்கட்டும்மா, ஏதோ மனக்கஷ்டம், வெளியில் கொட்டிட்டீங்க. எங்கிட்ட தானே பேசுனீங்க. எனக்கும் இன்னைக்கு வீட்டுல வேலை அதிகம், அதுதான் லேட்டாயிடுச்சு" என்றார் வீட்டு வேலை செய்யும் பெண்மணி. அந்தப் புரிந்துணர்விலும் இதமான பேச்சிலும் நளினியின் அவமான உணர்வு களையப்பட்டது. அவரின் புரிந்துணர்வும் வெளிப்பட்டது. "நீயும் நாலு வீட்டுக்குப் போய்வந்து கஷ்டப்படறே. உன்னைக் கோபத்தில் ஏதேதோ சொல்லிட்டேனே. கோபம் வந்தால் என்ன பேசுகிறேன் என்பதே தெரிவதில்லை" என்று பதில் சொன்னார் நளினி. அந்த இடமே புரிந்துணர்வின் பரிமாற்றத்தில் பொலிவு பெற்றது. எஜமானன் - வேலைக்காரன் என்ற உறவைத் தாண்டி மனிதர்களுக்கு இடையேயான பிணைப்பு ஒளிர்ந்தது.

யாருக்கு யாரிடம் இருந்து வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் புரிந்துணர்வு கிடைக்கலாம். பயணங்களின் போது பக்கத்துக்கு இருக்கைக்காரர் யாரென்றே தெரியாவிட்டாலும் மனதின் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர் தனக்கும் அதே போன்ற அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லும்போது நாம் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. நம்மைப் போலவே இன்னொருவருக்கும் இதே அனுபவமும் உணர்வும் ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை புரிந்ததும் அவமான உணர்வு களையப்படுகிறது. இப்படியாக ஒருவருக்கொருவர் இதம் தரவும் ஆதரவு காட்டவும் தூணாகத் துணை நிற்கவும் பழகிக்கொண்டால் எத்தனையோ சிரமங்களைக் கடந்துவிடலாம். மனித மனங்களிலும் இந்தச் சமூகத்திலும் ஏற்படும் உரசல்களும் விரிசல்களும் மட்டுப்படும்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே கோடிட்டுக் காட்ட வேண்டி உள்ளது. புரிந்துணர்வுக்கும் ஒருவரின் பிரச்சினையை ஒன்றுமில்லை என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம். ஒருவர் தன்னுடைய கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அவரின் நிலைமையைப் புரிந்துகொள்வதோடு நமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது புரிந்துணர்வை (empathy) ஏற்படுத்தும். அதற்கு மாறாக, "இதெல்லாம் ஒரு கஷ்டமா, எனக்கு நடந்ததைச் சொல்கிறேன், அதெல்லாம் நீ தாங்குவாயா?" என்று நீட்டி முழக்கினால் அது இன்னொருவரின் பிரச்சினையை ஒன்றுமில்லை (invalidate) என்று தள்ளுபடி செய்வதாகும். இரண்டுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோட்டைப் புரிந்துகொள்வது அவசியம்.

புரிந்துணர்வு அவமானத்தைக் களைய உதவுகிறது. நம்முடைய நிலைமையைப் போன்ற ஒன்றை எதிர்கொண்ட, நம்மைப் புரிந்துகொண்ட ஒருவர் இருக்கிறார் என்பது நாமும் எல்லோரையும் போன்ற ஒருவர்தான், இது நமக்கு மட்டுமே நடக்கும் விஷயமல்ல என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்கிறது. ஆனால் அடுத்தவரின் பிரச்சினையை ஒன்றுமில்லை என்று ஒதுக்குவது அவரை ஒதுக்கிவைக்கிறது. சமூத்தோடும் மற்ற மனிதர்களோடும் பிணைப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாகத் தனிமைப்படுத்துகிறது. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து நடக்க வேண்டியது அவசியம்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com
x
காமதேனு
kamadenu.hindutamil.in