வாழ்க்கையே நேசம் - 28: அவமான உணர்வின் ஊற்றுக்கண் எது?

வாழ்க்கையே நேசம் - 28: அவமான உணர்வின் ஊற்றுக்கண் எது?

தன்முக அன்பு செய்ய சுயமரியாதை உணர்வுடன் இருப்பதோடு மற்றவர்களுடன் நம்மை ஒப்பீடு செய்வதையும் நிறுத்த வேண்டும். இவற்றோடு கூடவே நம் வாழ்க்கையில் ஏற்படும் சிறிய பெரிய நிகழ்வுகளுக்காக அவமானமுறுவதும் தன்முக அன்பு செய்யப் பெரும் தடையாக இருக்கிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

எதற்கெடுத்தாலும் அவமானம்

நம் வாழ்வின் ஒரு நிகழ்வோ பக்கமோ சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்று அவமானம் கொள்கிறோம். இதனால் வாழ்வின் இக்கட்டான சமயங்களில் தனித்துவிடப்பட்டது போல உணர்கிறோம். நம் நிலைமை குறித்து யாரிடமும் வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறோம். கஷ்டங்களை எல்லாம் உள்ளுக்குள் புதைத்து புழுங்குகிறோம்.

'தெனாலி' படத்தில் 'நின்றால் பயம், உட்கார்ந்தால் பயம், நடந்தால் பயம்' என்று சொல்வது போல நாம் எதற்கும் எல்லாவற்றுக்கும் அவமானப்படுகிறோம். இந்த அவமானம் நம் பெயரில் தொடங்கி, உடல் அமைப்பு, பெற்றோரின் நடவடிக்கை, உண்ணும் உணவு, பின்புலம், கல்வித் தகுதி, செய்யும் தொழில், சம்பளம், உறவுச் சிக்கல் என்று வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தின் மீதும் படிகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்கிறோம். பிறகு, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மையே சாடிக்கொண்டு அவமானமுற்று கவலையில் துவள்கிறோம்.

திணிக்கப்படும் அவலம்

அவமானம் எனும் உணர்வு மனிதர்களை எப்படிப் பீடிக்கிறது என்று கொஞ்சம் சிந்திக்கலாம். குழந்தைப் பருவம் முதலே இந்த அவமானத்தைப் புகட்டுகிறோம் என்றால் மிகையில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை பெற்றோரோ சுற்றத்தினரோ ஒப்பீடு செய்வதில் தொடங்குகிறது. அழகு, அறிவு என்று பல அளவுகோல்களை நாமே வகுத்துக்கொண்டு ஒவ்வொன்றைக் கொண்டும் குழந்தைகளை அளந்து அவர்களின் உள்ளத்தில் தீராத அவமானத்தையும் வெறுப்பையும் விரக்தியையும் விதைக்கிறோம்.

அடுத்ததாக அக்கம்பக்கத்தில் அறிமுகமான குழந்தைகளோடு நம் குழந்தைகளை ஒப்பீடு செய்து மட்டம் தட்டுகிறோம். சிறார் பள்ளிகளின் வாசலில் காத்திருக்கும் பெற்றோரோடு சில மணிநேரத்தைக் கழித்தால் போதும். தன் குழந்தை என்ன மதிப்பெண் பெற்றிருக்கிறது என்பதோடு வகுப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளின் மதிப்பெண்ணையும் தெரிந்துகொண்டு குழந்தையை பள்ளி வாசலிலேயே அறிவுறுத்துகின்ற, திட்டுகின்ற அம்மாக்களைப் பார்க்கலாம். இப்படி சாதாரண பள்ளித் தேர்வு மதிப்பெண்ணில் தொடங்கும் ஒப்பீடு காலப்போக்கில் ஆக்டோபஸின் கரங்களைப் போல வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் இறுக்குகிறது.

பெற்றோரின் பொறுப்பு

உடல் கொஞ்சம் பூசினாற்போல இருக்கும் குழந்தைகளை எப்படியெல்லாம் கிண்டல் கேலிக்கு உட்படுத்துகிறோம். இன்றைய காலத்தில் அதிக ஊட்டமும் கொழுப்பும் உள்ள உணவுப் பொருட்களை உண்பதால் உடல் பருமன் என்பது நோயாக மாறிவிட்டது உண்மைதான். என்றாலும் தன்னுடைய உடல் பற்றி தானே அவமானப்படும் நிலைமைக்குக் குழந்தைகளைத் தள்ளுகிறோம். எதை எப்படி நெறிப்படுத்த வேண்டும் என்ற பயிற்சி பெற்றோருக்கு அவசியம்.

பதின்பருவத்தை எட்டும் பெண் குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவமானம் கொள்ளவைக்கிறோம். உடல் மாற்றம் பற்றியெல்லாம் தெரியாத குழந்தையை 'திம் திம்முன்னு குதிக்கிறே, ஆம்பளை பசங்களோட ஆடறே, அடக்கம் வேண்டாம்' என்று சொற்களின் வழியாக வன்முறையை விதைத்து முடக்குகிறோம். அதே நேரம் உடல் பாதுகாப்பைப் பற்றிக் கற்றுத் தருவதில்லை. பாலியல் கல்வி என்பது பல வீடுகளில் உச்சரிக்கக்கூடாத சொல்லாக இருக்கிறது. ஹார்மோன்களின் அதீத சுரப்பில் ஏற்படும் உடல் சார்ந்த மாற்றங்களை எப்படிக் கையாள்வது என்று தடுமாறும் குழந்தைகளை நெறிப்படுத்த வேண்டிய பெற்றோரும் பெரியவர்களும் நேர்மாறான செயல்களைச் செய்கிறோம்.

ஒப்பீட்டின் பெயரால் அவமதிப்பு

வீட்டில் ஒரு புறம் இப்படியென்றால் சமூகத்திலும் சந்தையிலும் வேறு வகையான அழுத்தம். ஒடிசலான ஒயிலான எடுப்பான தோற்றத்தில் வளைய வருவதே பெண்மையின் அழகு என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி அவர்களின் உடல் அமைப்பு குறித்த தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறோம். வெளுத்த தோலும் இளஞ்சிவப்பு நிற உதடுகளும் கருகருவென்ற நீளமான தலைமுடியும் மட்டுமே அழகு என்று பிரச்சாரத்தால் எத்தனை பெண்களின் தன்னம்பிக்கையை உடைத்திருக்கிறோம்.

ஆண் குழந்தைகளுக்கும் இதே நிலைமைதான். பெண்களைப் போலவே அவர்களுக்கும் உடல் சார்ந்த அவமான உணர்வு இருக்கிறது. கூடவே ஆண்மையின் வெளிப்பாடு என்று பொய்யாகக் கட்டமைத்த பிம்பத்தை முன்மாதிரியாகக் கொள்ளும் அவலம் வேறு. எதிர்பாலினத்தவர் குறித்த பார்வை, கோட்பாடு என்று எல்லாவற்றிலும் குழப்பம்.

இத்தனை தடைகளையும் மீறித்தான் நாமும் நம் குழந்தைகளும் வாழ்க்கை நடத்துகிறோம்.

தொற்றுநோயாகத் தொடரும் அவமான உணர்வு

அவமான உணர்வு என்பது தொற்றுநோயைப் போல பெருகி நம்மிடையே புரையோடி இருக்கிறது என்கிறார்கள் உளவியல் ஆராய்ச்சியாளர்கள். வெளிப்படையாகத் தெரியாத தொற்றுநோய். வன்முறையைக்கூட ஓரளவுக்குப் புரிந்துகொண்டுவிட்டோம். அவமான உணர்வைப் பற்றி இப்போதுதான் பேசத் தொடங்கி இருக்கிறோம். ஆனால் அதுவோ உடல் உள்ளம் இரண்டையும் பாதிப்பதோடு வேறு பல நோய்களுக்கும் முறையற்ற செயல்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது.

உளச்சோர்வு (depression), பதற்றம் (anxiety), எதாவது ஒரு பழக்கத்துக்கு அடிமையாதல் (addiction), உணவுண்ணும் முறையில் ஒழுங்கின்மை, கொடுமைப்படுத்துதல், தற்கொலை எண்ணம், பாலியல் வன்முறை, குடும்பம் மற்றும் சமூகத்தில் நிகழும் வன்முறை இவை எல்லாவற்றுக்கும் தோற்றுவாய் அவமான உணர்வுதான் என்கிறார்கள்.

அவ்வளவு ஏன். சரியான பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்கக்கூட அவமான உணர்வைத் தூண்டும் சொற்களைப் பயன்படுத்துகிறோம். இன்றுவரை அவமான உணர்வைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் யாரும் வெளிப்படையாக பேசியது இல்லை. அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. ஏனெனில் அதை இயல்பான விஷயமாக ஏற்றுக்கொண்டு விட்டோம். வீட்டில் நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும் விஷயம் இந்தச் சமூகத்திலும் உலக அளவிலும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்ளும் அவகாசம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இது குறித்து எடுத்துச் சொல்லக்கூட ஒருவரும் இல்லை என்பது எத்தனை பெரிய அவலம்.

அவமானமான விஷயம் என்று நான் கருதுபவை என்னென்ன என்று பட்டியலிட்ட போது மலைத்துப் போனேன். மற்றவர்கள் என்னைப் பற்றி பெருமையாகக் கருதும் விஷயங்கள்கூட எனக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்துகொண்டேன். நீங்களும் அந்தப் பட்டியலை எழுதிப் பாருங்களேன். இதுகுறித்து தொடர்ந்து அலசுவோம்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in