வாழ்க்கையே நேசம் - 27: தன்முக அன்பு சுயமரியாதையின் வெளிப்பாடா?

வாழ்க்கையே நேசம் - 27: தன்முக அன்பு சுயமரியாதையின் வெளிப்பாடா?

தன்முக அன்பைக் காட்டுவதற்கு நம்மீது நாம் கொள்ளும் பரிவு, புரிதல் இவற்றோடு சுயமரியாதையும் அவசியமாகிறது. மற்ற எவரைப் போலவும் நாமும் அன்பு, பரிவு, புரிதல், வாய்ப்பு போன்றவற்றைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை உணரவும் நம்பவும் வைக்கிறது சுயமரியாதை உணர்வு. மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லவோ அல்லது கோடி காட்டவோ உதவுவதும் அதுதான். சுயமரியாதை நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு சரிசமமான உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது. கூடவே நாம் ஏற்றுக்கொள்ளும் வழிகளில் நம்மை அவர்கள் நடத்த வேண்டும் என்பதைச் சுட்டுகிறது.

நம்மை நாமே அன்போடு அணுகுவதும் அக்கறையோடு நடத்துவதும் சுயமரியாதையின் வெளிப்பாடு என்று சொல்லலாம். அத்துடன் நம்முடைய விழுமியங்களிலிருந்து விலகாமல் இருப்பதும் அவற்றை எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதும் அவசியம். விழுமியம், நம்பிக்கை இவற்றைச் சார்ந்து செய்யும் செயல்கள் தன்னம்பிக்கையையும் நிறைவையும் தருகின்றன. இது நம்முடைய உள நலனைப் பேணுகிறது.

பொதுவாக ஒன்றைச் செய்வதில் முற்றிலும் விருப்பமில்லை என்றாலும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் வற்புறுத்தலினால் வேண்டாவெறுப்பாகச் செய்வோம். அதனால் நன்மை விளைந்தாலும் என்றாலும் நம்முடைய தன்னம்பிக்கையை அசைக்கும் செயலாக அமைகிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

பல வீடுகளில் பெற்றோர் சொல்கிறார்கள் என்பதற்காகச் சில விஷயங்களைச் செய்வோம். பெற்றோரை மகிழ்விப்பதற்காகவோ அல்லது வேறு வழி தெரியாததாலோ அதைச் செய்திருப்போம். சில நேரம் வயது, அனுபவம் இரண்டும் இல்லாத காரணத்தினால் நம்முடைய விருப்பு வெறுப்பை எடுத்துச் சொல்லத் தெரியாமல் பெரியவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற காலங்காலமாக சொல்லப்பட்ட பாடத்தினாலும் செய்திருப்போம். ஆனால் சில வருடங்கள் கடந்த பின்னர் 'ஏன் செய்தோம்', 'என்னுடைய தரப்பை எடுத்துச் சொல்லியிருக்கலாமோ' என்றும் தோன்றும்.

வீட்டில் பரிமாறப்படும் உணவு, பிடித்த உடை என்று அன்றாட விஷயங்கள் தொடங்கி வாழ்க்கையின் மைல்கல்லான கல்வி, வேலை, திருமணம் வரை நம்முடைய விருப்பங்களின்படி நடக்க முடியாமல் போவது நாளடைவில் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும். எனவே வயது வந்த பிறகாவது நம்முடைய விருப்பங்களுக்கும் விழுமியங்களுக்கும் மாறாக நடப்பதை நிறுத்த வேண்டும். இது அத்தனை எளிதான செயல் அல்ல என்றாலும் கொஞ்சம் வெளிப்படையாகவும் இணக்கமாகவும் உரையாடலை நிகழ்த்தினால் அடுத்தவர்கள் நம் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம்.

சமூக ஊடகங்கள் வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்ட காலத்தில் வாழ்கிறோம். இதனால் பல நன்மைகள் இருந்தாலும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூகவலைதளங்களில் அடுத்தவர்களின் புறவாழ்வை நெருக்கத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரையில் எல்லோரையும் எளிதில் அணுக முடிகிறது. கூடவே நம்முடன் பள்ளி, கல்லூரி, பணியிடம் என்று பழகும் நண்பர்களின் உறவினர்களின் வாழ்க்கைச் சித்திரத்தையும் பார்க்க முடிகிறது.

இதனால் பெரும்பாலான நேரத்தை நம்மை அடுத்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து மாய்ந்து போவதிலேயே கழிக்கிறோம். 'அந்த நடிகரைப் போல நான் அழகில்லை', 'என் நண்பரைப் போன்ற உடலமைப்பு இல்லை', 'பிடித்த கார், பைக் வாங்கும் வசதியில்லை', 'வெளிநாட்டு சுற்றுலாத் தலங்களுக்குப் போக முடியவில்லை'... என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இது நாளடைவில் உள நலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவற்றோடு தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்துகொண்டால் உளச் சோர்வு உண்டாகும். தன்முக அன்பும் சுயமரியாதையும் இந்த ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பைக் குறைக்க உதவுகின்றன. புறத்தைத் தாண்டிய உள்ளார்ந்த விழுமியங்கள் வலிமையாக இருப்பவர்கள் சமூகவலைதளங்களில் பார்க்கும் விஷயங்களையும் நிகழ் வாழ்வையும் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தைப் பெறுகிறார்கள். இந்தப் பக்குவத்தையும் பார்வையையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வது பெரியவர்களின் கடமை அல்லவா! அதைச் சொல்வதற்கும் ஒரு பக்குவம் அவசியம். கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல் எளிதில் புரியும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்ற குழந்தைகளோடும் இளைஞர்களோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்புள்ளவர்கள் வன்முறையற்ற தகவல் பரிமாற்ற நுட்பங்களைத் தெரிந்துகொண்டு அதை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

குழந்தைப் பருவ முதலே சுயமரியாதை ஊட்டும் சொற்களைப் பேச வேண்டும். சுயமரியாதையைப் பேணும் செயல்களைச் செய்ய கற்றுத்தர வேண்டும். உடல் அமைப்பு, அறிவுத்திறன், கல்வி, வசதி என எதைச் சார்ந்தும் ஒருவரை மற்றவரோடு விளையாட்டாகக்கூட ஒப்பீடு செய்வது கூடாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பல குடும்பங்களில் பார்த்திருப்போம், உடன்பிறந்த சகோதர / சகோதரிகளை ஒருவரோடு ஒருவர் ஒப்பீடு செய்து கேலி பேசுவது நகைச்சுவையாகத்தான் தொடங்கும். நாளடைவில் அவர்கள் பரம வைரிகளாக மாறியிருப்பார்கள்.

அத்தனை தூரம் போகவில்லை என்றாலும், 'அண்ணன் நன்றாகப் படிப்பதால் உனக்கு அவனைத்தான் பிடிக்கும், என்னைப் பிடிக்காது,' 'அக்காதான் அழகு, அதனால்தான் அவள் கேட்டதை எல்லாம் வாங்கித் தருகிறீர்கள்’ என்று காலம் முழுவதும் பெற்றோரைக் குறைசொல்லும் பேச்சு வீடுதோறும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலைமையைச் சீர்செய்ய வேண்டுமென்றால் பெரியவர்கள் தங்களின் எண்ணம், சொல், செயல் எதன்மூலமும் வன்முறையை வெளிப்படுத்தப்போவதில்லை என்று உறுதிகொள்ள வேண்டும்.

இப்படிச் செய்வதால் குழந்தைகளின் இளைஞர்களின் தாழ்வு மனப்பான்மை குறைகிறது, சுயமரியாதை மேம்படுகிறது. கூடவே, உள்ளது உள்ளபடியே தங்களை ஏற்றுக்கொள்ளவும் தன்முக அன்பைக் காட்டவும் பழகுகிறார்கள். தாங்களும் இந்தப் பரந்த உலகின் முக்கியமான அங்கம், மற்றவர்களுக்குக் கிடைக்கும் எல்லாம் எனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இது மிகப் பெரிய நேர்மறையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மனிதன் ஒரு சமூக உயிரி என்பதைப் பள்ளிப் பாடத்தில் படித்திருப்போம். எத்தனை உண்மையான சொல் அது என்பதை உணர்ந்திருக்க மாட்டோம். நாம் ஒவ்வொருவருமே இந்த சமூகத்தோடு இணைந்து இருக்கவே விரும்புகிறோம். தன்முக அன்பு செய்வதும் சுயமரியாதையைப் பேணுவதும் அதற்கான வழிகள்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in